சிறுநீரக கற்களை தடுக்கும் 8 வழிமுறைகள்


சிறுநீரக கற்களை தடுக்கும் 8 வழிமுறைகள்
x
தினத்தந்தி 18 July 2021 2:03 AM GMT (Updated: 18 July 2021 2:03 AM GMT)

சிறுநீரக கற்களால் பாதிப்புக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளில் நோய் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

சிறுநீரகத்தில் கல் உருவாகுவதற்கு மரபணுக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. உணவு பழக்கங்களும், வாழ்வியல் முறைகளும் சிறுநீர் கல் பாதிப்பு அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. ஆதலால் அன்றாட பழக்கவழக்கத்தில் பின்பற்ற வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

1. நீர்ச்சத்து:

உடலில் இருந்து தினமும் குறைந்தபட்சம் இரண்டு முதல் இரண்டரை லிட்டர் சிறுநீர் வெளியேற வேண்டும். அதற்கேற்ப தினமும் இரண்டரை லிட்டர் முதல் மூன்று லிட்டர் திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். தேநீர், பால், ஜூஸ், லஸ்ஸி என எந்த வகையான திரவ உணவுகளையும் தேர்ந்தெடுக்கலாம். 6 அடி உயரம், 100 கிலோ வரை எடை கொண்டவர்கள் அதிக திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதய நோய் அல்லது நாள்பட்ட சிறுநீரக நோய் கொண்டவர்கள் அதிக திரவ உணவுகளை உட்கொள்வது ஆபத்தானது என்பதால் மருத்துவரின் பரிந்துரைக்கு ஏற்ப சாப்பிட வேண்டும்.

சாதாரண தண்ணீர், பழ ஜூஸ், பால், லஸ்ஸி, மோர், இளநீர், எலுமிச்சை ஜூஸ் போன்ற பானங்களை உட்கொள்ளலாம். அவை நல்ல திரவ உணவுகளாகும். ஆனால் இனிப்பு கலந்த சோடா, பதப்படுத்தப்பட்ட பானங்கள் சிறுநீரகத்தில் கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கக்கூடியவை. மது அருந்துபவர்கள் காலையில் எழுந்ததும் தாகம், உதடு வறட்சி, சிறுநீர் வெளியேறுவதில் அசவுகரியம் போன்ற பிரச்சினையை எதிர்கொள்வார்கள். மேலும் பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு கேடு தரும் மதுவை தவிர்ப்பது நல்லது.

2. கால்சியம் :

கால்சியம் அதிகம் கொண்ட உணவு பொருட்கள் சாப்பிடுவதை குறைத்துக்கொள்வது சிறுநீரக கல் உருவாகும் அபாயத்தை குறைக்கும் என்பது கட்டுக்கதை. தினசரி உணவில் தேவையான அளவு கால்சியத்தை எடுத்துக்கொள்ளாவிட்டால் எலும்புகள் பலவீனமடையுமே தவிர சிறுநீரக கற்களை குறைக்க உதவாது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1 முதல் 1.2 கிராம் கால்சியம் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக பால் பொருட்களை அதிகம் சாப்பிடலாம்.

3. புரதம்:

புரதம் சார்ந்த உணவுகளை குறைத்துக்கொள்வது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் அபாயத்தை குறைக்கும் என்பதும் கட்டுக்கதை. இளைஞர்கள், குழந்தைகள் தினமும் போதுமான அளவு புரதம் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க துணை புரியும். அதேவேளையில் புரதம் கலந்த இறைச்சி உணவுகளை அதிகம் உட்கொள்வதை தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் இறைச்சியில் உள்ளடங்கி இருக்கும் புரதங்களை அதிகமாக சாப்பிடும்போது சிறுநீரில் கல் உருவாக்கும் ரசாயனங்கள் உருவாகுவதும், அது சிறுநீரில் அமில சுமையை உண்டாக்குவதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இவை ஒட்டுமொத்தமாக சிறுநீரக கல் உருவாகுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும். ஆகவே கோழி, மாட்டிறைச்சி, மீன், பன்றி இறைச்சி மற்றும் முட்டை போன்ற விலங்கு வகை புரத உணவுகளை உட்கொள்ளும் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். தினசரி உட்கொள்ளும் புரத அளவில் விலங்குகளின் புரத உள்ளடக்கம் பாதிக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. அதற்காக பிடித்தமான உணவை சாப்பிடுவதை நிறுத்தவேண்டியதில்லை. அவைகளை சாப்பிடும் அளவை குறைத்துக்கொண்டாலே போதுமானது.

4. உப்பு:

அதிகப்படியான உப்பு உட்கொள்ளல் சிறுநீரில் கால்சியத்தை உருவாக்கும் தன்மையை அதிகரிக்கும். இது நாளடைவில் சிறுநீரக்கல் உருவாகும் அபாயத்தை உண்டாகும். ஒரு நாளைக்கு 4 முதல் 5 கிராம் உப்பு சேர்த்துக் கொள்வது போதுமானது. உப்பு அதிகம் சேர்க்கப்படும் சாலட், ஊறுகாய், சிப்ஸ் வகைகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பதும் நல்லது.

5. உடல் பருமன்:

உடல் பருமன் சிறுநீரின் அமில உள்ளடக்கத்தை அதிகரிக்கிறது. அதன் காரணமாக சிறுநீரக கல் உருவாகும் வாய்ப்பும் கூடும். ஆகவே உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை பராமரிப்பது சிறுநீரக கற்களின் அபாயத்தை குறைக்கும். அதனை ஆய்வு முடிவுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.

உயரத்திற்கு ஏற்ப சிறந்த உடல் எடையை பராமரிப்பது சிறுநீரக கற்களின் அபாயத்தை குறைப்பதைத் தவிர வேறு பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருக்கும்.

6. பழங்கள்-காய்கறிகள்: பழங்கள் உணவின் ஒரு பகுதியாக அமைந்திருக்க வேண்டும். அல்லது சாப்பிட்ட பிறகு இடைப்பட்ட நேரங்களில் உட்கொள்ளலாம். பழங்கள், காய்கறிகளில் நிறைந்திருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சிறுநீரில் உள்ள அமிலத்தை குறைக்க உதவுகின்றன. எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் சிட்ரேட் உள்ளது. அது சிறுநீரகத்தில் கல் உருவாக்கத்தை இயல்பாக கட்டுப்படுத்தும் இயற்கை தடுப்பானாக செயல்படுகிறது.

7. சர்க்கரை:

அதிகப்படியான சர்க்கரை பொருட்களை உட்கொள்வது நேரடியாக சிறுநீரில் கால்சியம் மற்றும் சோடியம் அதிகம் வெளியேற்றப்படுவதற்கு வழிவகுக்கிறது. சிறுநீரக கல் உருவாகுவதையும் ஊக்குவிக்கிறது. மேலும் அதிகப்படியான சர்க்கரை உடல் பருமனுக்கு வழிவகுக்கும். இதனால் மறைமுகமாக சிறுநீரக கற்கள் உருவாகும் ஆபத்து அதிகரிக்கும்.

8. திரவம்:

உடற்பயிற்சி செய்யும் போதும் மற்றும் வெப்பமான இடங்களில் நேரத்தை செலவிடும் போதும் வழக்கத்தை விட அதிகமாக நீர் அல்லது திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏ.சி. அறையில் தினமும் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தால் நள்ளிரவில் எழும் சமயத்தில் சிறிதளவு திரவ உணவை சாப்பிட வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்வது அவசியமானது.

Next Story