சிறப்புக் கட்டுரைகள்

மும்பையின் ‘அன்னை தெரசா’- காவல் துறையில் ஒரு கருணை உள்ளம் + "||" + Mumbai’s ‘Mother Teresa’ - a compassionate soul in the police force

மும்பையின் ‘அன்னை தெரசா’- காவல் துறையில் ஒரு கருணை உள்ளம்

மும்பையின் ‘அன்னை தெரசா’- காவல் துறையில் ஒரு கருணை உள்ளம்
கொரோனா வைரஸ் பரவலால் பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஆன்லைன் வழி கல்வி முறை இரண்டு ஆண்டு களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனினும் கிராமப் புற பகுதிகளில் வசிக்கும் பல குழந்தைகள் அதனை பின்பற்றுவதில் சிக்கல் நிலவுவதால் அவர்களின் படிப்பு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.
அப்படி இருக்கையில் அடிப்படை வசதிகள், தொலை தொடர்பு வசதிகள் முழுமையாக சென்றடையாத மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின குழந்தைகளின் நிலை பரிதாபத்துக்குரியதாக அமைந்திருக்கிறது. கொரோனா ஏற்படுத்தி இருக்கும் வாழ்வாதார இழப்பு காரணமாக கல்வியை தொடர முடியாத நிலையில் இருக்கும் 50 பழங்குடி மாணவர்களை தத்தெடுத் திருக்கிறார், ரஹேனா ஷேக் பஹ்வான்.

மும்பை காவல் துறையில் பணி புரியும் இவர், சமூக சேவை செய்வதில் ஆர்வம் கொண்டவர். கொரோனா பரவலுக்கு மத்தியில் காவல் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார். அப்போது பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்த ஏழைகளின் துயர நிலையை கண்டு மனம் வருந்தியவர், சமூக சேவை பணியை முன்னெடுத்திருக்கிறார். மும்பையில் கொரோனா தொற்று பரவல் உச்சமடைந்து உயிரிழப்புகளை ஏற்படுத்தியபோது நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவமனையில் படுக்கைகள், 
பிளாஸ்மா தானம், ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்க ஏற்பாடு செய்திருக் கிறார். அவரது தன்னலமற்ற சேவையை பாராட்டும் விதமாக ‘மும்பையின் அன்னை தெரசா’ என்றே அப்பகுதி மக்கள் அவரை அழைக்கிறார்கள். உதவி தேவைப்படுபவர்களுக்கு தக்க சமயத்தில் உதவும் அவரது மனிதாபிமானத்தை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நாக்ரலேவும் பாராட்டி கவுரவித்திருக்கிறார். 

ராஹேனா 2000-ம் ஆண்டு கான்ஸ்டபிளாக காவல் துறையில் சேர்ந்திருக்கிறார். அதற்கு முன்பு சமூக சேவையில் ஈடுபட்டிருந்ததால் கொரோனா காலகட்டத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் தனது சேவை பணியை தொடர்ந்திருக்கிறார். இருப்பினும் பள்ளி மாணவர்களின் படிப்புக்கு உதவுவதுதான் அவருக்கு மன நிறைவை கொடுத்திருக்கிறது.‘‘கடந்த ஆண்டு மகளின் பிறந்தநாளை கொண்டாட இருந்தோம். அந்த சமயத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருந்தது. ராய்காட்டின் வாஜே தாலுகாவில் உள்ள பள்ளியை பற்றி கேள்விப்பட்டேன். அங்கு படிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஏழ்மை பின்னணி கொண்டவர்கள். பள்ளி முதல்வரிடம் பேசியபோது பல குழந்தைகள் காலணிகள் கூட அணிவதில்லை என்பதை அறிந்தேன். என் மகளின் பிறந்தநாள் மற்றும் ரம்ஜான் பண்டிகைக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை கொண்டு அந்த குழந்தைகளுக்கு உதவுவதற்கு முடிவு செய்தோம். எங்கள் குழந்தைகளிடம், ‘ரம்ஜான் பண்டிக்கைக்கு எந்த ஷாப்பிங்கும் செல்ல மாட்டோம். விருந்தினர்களை அழைக்கவோ, புத்தாடைகள் வாங்கவோ மாட்டோம் என்று கூறினேன். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். குடும்பத்தினரும் என் முடிவை ஆதரித்தனர். இதையடுத்து பள்ளி முதல்வரை தொடர்பு கொண்டு மாணவர்களுக்கு உதவி செய்யும் விருப்பத்தை தெரிவித்தேன். அவரோ பணம் அனுப்புவதற்கு பதிலாக நீங்கள் நேரில் வர வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டார். ஆனால் கொரோனா கட்டுப்பாடு காரணமாக எங்களால் உடனடியாக பள்ளிக்கு செல்ல முடியவில்லை’’ என்று வேதனையோடு சொல்கிறார்.

கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்ந்ததும் அந்த பள்ளிக்கூடத்திற்கு சென்றிருக்கிறார். அதனை நினைவு கூர்பவர்,‘‘அங்கு மாணவர்கள் கடைப்பிடித்த ஒழுக்கத்தை கண்டு நான் மகிழ்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தேன். முக கவசம் அணிந்து, கொரோனா விதிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்றினார்கள். எங்களை அன்புடன் வரவேற்றார்கள். ஒரு நாள் முழுவதையும் அவர்களுடன் 
செலவிட்டோம். அப்போது பழங்குடி மாணவர்களின் ஏழ்மையை அறிந்து கொண்டேன். அங்கு படிக்கும் 50 மாணவர்களை தத்தெடுக்க முடிவு செய்தோம். நம்மால் ஒருவருக்கு உதவ முடியும் என்பது மகத்தான மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளிக்கிறது. அவர்கள் ஒவ்வொருவரையும் நல்ல குடி மகன்களாக பார்க்க விரும்புகிறேன். கல்விதான் மாற்றத்துக்கான திறவுகோல். பெருந்தொற்று காலத்தில் மருத்துவ ரீதியாக உதவி செய்து பல உயிர்களை காப்பாற்றியதில் என் பங்களிப்பும் இருக்கிறது என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது’’ என்று மன நிறைவோடு சொல்கிறார்.
ரஹேனாவின் மகத்தான சேவைக்கு அந்த பகுதி மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

‘‘தேவைப்படுபவர்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்வது என்பது அறிவுரை கூறுவதை விட மேலானது. ஒரு நாள் புற்றுநோயாளி ஒருவருக்கு ஏ பாசிட்டிங் ரத்தம் தேவைப்படுவதாக எனக்கு அழைப்பு வந்தது. பல இடங்களில் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. அதனால் கவலையோடு அமர்ந்திருந்தேன். அதுபற்றி விசாரித்த என் கணவர் என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்று தன்னுடைய ரத்தத்தை தானம் செய்தார். இப்படியொரு ஆதரவான குடும்பம் கிடைத்திருப்பதில் உண்மையில் நான் அதிர்ஷ்டசாலிதான். அவர்கள் அளித்து வரும் ஊக்கம் காவல் துறையில் உயர் அதிகாரிகளிடம் இருந்து எனக்கு பாராட்டை பெற்றுக்கொடுத்திருக்கிறது’’ என்பவர் உணவு, தங்குமிடம், கல்வி, மருந்து என எந்த வகையிலாவது ஏழைகளுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்கிறார். ‘‘இந்த 21-ம் நூற்றாண்டில் ஏழைகள் உணவு இல்லாமல் பசியுடன் தூங்க செல்வது, குழந்தைகள் கல்வி பயில முடியாமல் படுக்கைக்கு செல்வது வேதனைக்குரியது. எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்களுக்கு நாம் உதவ வேண்டும்’’ என்கிறார்.