சிறப்புக் கட்டுரைகள்

தமிழக பொருட்களுக்கு புவிசார் குறியீடு + "||" + Geographical code for Tamil Nadu products

தமிழக பொருட்களுக்கு புவிசார் குறியீடு

தமிழக பொருட்களுக்கு புவிசார் குறியீடு
ஓரிடத்தில், பாரம்பரியமாக உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்கள், இயற்கை பொருட்கள், கைவினைப் பொருட்கள் போன்றவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இது உற்பத்தி செய்யப்படும் இடத்தின் பெருமைக்கும், பொருட்களின் பாரம்பரியத்திற்கும், உயர்ந்த தரத்திற்கும் சான்றாக விளங்குகிறது.
மதுரை மல்லிகை, காஞ்சி பட்டு, பவானி ஜமக்காளம், நீலகிரி தேயிலை, தஞ்சை ஓவியங்கள், திண்டுக்கல் பூட்டு, ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் மலைபூண்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, காரைக்குடி கண்டாங்கி சேலை, பழனி பஞ்சாமிர்தம் ஆகியன புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்று உள்ளன. மேலும் தமிழகத்தை சேர்ந்த பல பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மல்லிகை: உலகளவில் தனித்துவம் வாய்ந்தது மதுரை மல்லிகை என்பதைக் குறிக்கும் வகையில், புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மதுரையின்' மண்வளம், மல்லிகைக்கு ஏற்றது. இந்த மண்ணில் விளையும் மல்லிகைக்கு மட்டும் கூடுதல் மணம், வெண்மை உண்டு. இரண்டு நாட்கள் வரை பூக்கள் வாடமல் நன்றாக இருக்கும். பூவின் காம்பும், இதழ்களும் சம உயரத்தில் இருக்கும். மதுரை மல்லி வாசம் என்றே சிறப்புடன் காலம் காலமாக போற்றப்படுவதே, மதுரை மல்லிகைக்கு சிறப்பு.

திண்டுக்கல் பூட்டு: திண்டுக்கல் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது பூட்டு தான். குடிசை தொழிலாக தொடங்கப்பட்டு தற்போது திண்டுக்கல்லுக்கு அடையாளம் தந்து இருப்பது பூட்டு தொழில் தான். சிறைச்சாலைகள், கிடங்குகள், கல்லூரிகளில் திண்டுக்கல் பூட்டுக்கு தேவை அதிகமாக உள்ளது. இந்த பூட்டு தனித்துவம் மிக்கது என்பதால் மாற்றுச்சாவி கொண்டு இதை எளிதில் திறக்க முடியாது.

காரைக்குடி கண்டாங்கி சேலை: இந்தியாவிலேயே பாரம்பரிய, அடர் வண்ணங்களில் நெசவு செய்யப்படுவது செட்டிநாடு கண்டாங்கி சேலைதான். காரைக்குடி பகுதியில் இந்த சேலையை 700-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கைத்தறியாக நெசவு செய்து வருகின்றனர். செட்டிநாட்டு சேலைகளில் கட்டிடங்கள் மற்றும் கோடுகளின் வண்ணம்தான் மாறுமே தவிர பார்டரில் பெரும்பாலும் ருத்ராட்சம், கோவில் கோபுரம், மயில், அன்னம் போன்ற பராம்பரியமான டிசைன்களே அதிகம் இருக்கும். புடவையும் பளிச்சென்று காண்போரை கவர்ந்திழுக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த செட்டிநாடு கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

ஈரோடு மஞ்சள்: தமிழகத்தின் பல பகுதிகளில் மஞ்சள் விளைவிக்கப்பட்டாலும், குச்சி போன்ற தோற்றத்தில், தனித்துவமான நிறத்துடன், நாசியைத் துளைக்கும் மணத்துடன்கூடிய ஈரோடு மஞ்சளுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு.. உணவில் மட்டுமல்லாமல், மருந்திலும் ஈரோடு மஞ்சள் பயன்பட்டு வருகிறது. சர்க்கரை நோய் பாதிப்புகளுக்கு மருந்து தயாரிக்க, ரத்தநாள அடைப்புகளை சுத்தம் செய்ய, வெளிக்காயங்களுக்கு மருந்தாக ஈரோடு மஞ்சள் உதவுகிறது. இத்தகைய காரணங்களுக்காக தான் ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

பழனி பஞ்சாமிர்தம்: வாழைப்பழம், வெல்லம், பசு நெய், தேன், ஏலக்காய், கற்கண்டு, பேரிச்சை உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு, பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. இதில், சிறிதளவுகூடத் தண்ணீர் சேர்க்கப்படாது. இதனால், பஞ்சாமிர்தம் பாகு நிலையுடன் சுவையானதாக மாறுகிறது. இது மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்படுகிறது.

கொடைக்கானல் மலைப்பூண்டு: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளைவிக்கப்படும் பூண்டு, மற்ற பூண்டுகளை போல் அல்லாமல் சாம்பல் நிறத்தில் காணப்படும். காரத்தன்மையும், மருத்துவ குணங்களும் அதிகம். இதனால் இந்த பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா: சுவையும், தனித்துவமும் மாறாமல் இருக்கும் உலக புகழ் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெறப்படும் பசும்பால் மூலமாக மட்டுமே இதனை தயாரிக்கின்றனர். இயற்கையாகவே இங்கு கறக்கப்படும் பால் இனிப்புச் சுவையுடன் இருப்பதால், பால்கோவா செய்வதற்கு சிறிதளவு சர்க்கரையே தேவைப்படும் எனவும், இந்த பால்கோவா 10, 15 நாள் வரை கெட்டு போகாது இருக்கும் என்கிறார்கள்.

இதுபோல் இன்னும் ஏராளமான தமிழக பொருட்களுக்கு புவிசார் குறியீட்டு கிடைத்துள்ளது. புவிசார் குறியீடு 10 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன் பிறகு புதுப்பித்து கொள்ளலாம்.