கார் தகடுகளில் துத்தநாக மேற்பூச்சு


கார் தகடுகளில் துத்தநாக மேற்பூச்சு
x
தினத்தந்தி 24 July 2021 1:03 AM GMT (Updated: 24 July 2021 1:03 AM GMT)

கடலோரத்தில் உப்புக்காற்று வீசும் பகுதியில் உள்ள கார்கள் விரைவிலேயே துருப்பிடிக்க ஆரம்பித்துவிடுகின்றன. சில கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கார்களில் இரும்புத் தகடுகளுக்கு பதில் இரும்பு தகடுகளில் துத்தநாக மேற்பூச்சு (கேல்வனைஸ்டு ஸ்டீல்) பயன்படுத்துகிறார்கள்.

இதேபோல இங்குள்ள கார் தயாரிப்பு நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கார்களுக்கு இத்தகைய கேல்வனைஸ்டு ஸ்டீலைப் பயன்படுத்துகிறார்கள். உலகிலேயே அதிகமான கார்களை உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. கேல்வனைஸ்டு ஸ்டீல் உபயோகிப்பதன் மூலம் இரும்பு தகடுகளின் எடை குறையும். இதனால் கார்களின் செயல்திறன் மேம்படும்.

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 5 சதவீத அளவுக்கு துருப்பிடிப்பதால் இழப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. சாதாரண ஸ்டீல் மூலம் தயாரிக்கப்படும் கார் வைத்திருக்கும் உரிமையாளர், கார் வாங்கும் போது டெப்லான் கோட்டிங் என்பதற்காக ரூ.7 ஆயிரமும், அடுத்த 6 ஆண்டுகளில் துருப்பிடிக்காமல் இருப்பதற்காக அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் வரை செலவிடுகிறார். அதே கேல்வனைஸ்டு ஸ்டீல் காராக இருந்தால் கூடுதலாக அவர் ஒரே சமயத்தில் செலவிடும் தொகை ரூ.9 ஆயிரமும், 6 ஆண்டுக்குப்பிறகு ஆயிரம் ரூபாயும் ஆக மொத்தம் ரூ.10 ஆயிரம் செலவிட்டால் போதும், என்கிறார்கள். கார்களின் பாதுகாப்பு விஷயத்தி்ல் எந்த வகையிலும் சமரசம் செய்து கொள்ளப்படுவதில்லை. இதனால் இதை பயன்படுத்த இந்திய தரச்சான்று மையம் (பி.ஐ.எஸ்.) முன்வர வேண்டும் என மும்பை ஐ.ஐ.டி-யின் ஆய்வில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இரும்புத் தகடுகளை அதன் உயர்ந்தபட்ச வெப்பத்தில் திரவ துத்தநாகத்தில் மூழ்கடித்து எடுக்கப்படுவதே கேல்வனைஸ்டு ஸ்டீல் எனப்படுகிறது. இது இரும்பின் மீது மேல்பூச்சாக இருப்பதால் துருப்பிடிக்காத தன்மை கொண்டதாக விளங்குகிறது. இரும்புத் தகட்டின் மீது மேற்பூச்சு பூசப்படுதவதால் இரும்பின் இயல்பு குணம் எதுவும் மாறாது என்றும், அதாவது உறுதித் தன்மை, காந்தத்தால் கவரப்படும் தன்மை மாறாது என, இந்த துறையை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

Next Story