குறைந்த மின்சாரத்தில்... அதிக தூரம் பயணிக்கும் ‘எலெக்ட்ரிக் வண்டிகள்’


குறைந்த மின்சாரத்தில்... அதிக தூரம் பயணிக்கும் ‘எலெக்ட்ரிக் வண்டிகள்’
x
தினத்தந்தி 24 July 2021 10:06 AM GMT (Updated: 2021-07-24T15:36:47+05:30)

காஞ்சிபுரத்திற்கு அருகில் இருக்கும் வாலஜாபாத்தை சேர்ந்தவரான இவர், 2009-ம் ஆண்டு முதல் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தி வருகிறார்.

பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்திருக்கும் இந்த சூழலிலும் தன்னுடைய எலெக்ட்ரிக் வாகனங்களில், ஜாலியாக பயணம் செய்கிறார், இளையராஜா. காஞ்சிபுரத்திற்கு அருகில் இருக்கும் வாலஜாபாத்தை சேர்ந்தவரான இவர், 2009-ம் ஆண்டு முதல் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தி வருகிறார். சொந்தமாகவே எலெக்ட்ரிக் சைக்கிள், ஸ்கூட்டர், கார் போன்றவற்றை உருவாக்கியிருக்கும் இவர், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மிக முக்கியமான பேட்டரி தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதுபற்றி, அவர் பகிர்ந்து கொண்டவை இதோ...

எலெக்ட்ரிக் வாகனங்களில் ஆர்வம் பிறந்தது எப்படி?

இயற்கையை பாதுகாக்கும் எண்ணம் சிறு வயதிலிருந்தே உண்டு. புகை கக்கும் பெட்ரோல்-டீசல் வாகனங்களுக்கு மாற்றாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இயங்கும் வாகனங்களை உருவாக்கி பயன்படுத்த முடியுமா..? என்ற ஆர்வத்தில்தான், கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படித்தேன். அதுசம்பந்தமான ஆராய்ச்சி மற்றும் உருவாக்க பணிகளில் இறங்கினேன். அதற்கு முதற்கட்டமாக, சோலார் பேனல் அமைத்து புதுப்பிக்கத்தக்க மின்சார ஆற்றலால் வீட்டிற்கு வெளிச்சமூட்டினேன்.

எலெக்ட்ரிக் வாகன ஆராய்ச்சி தொடங்கியது எப்போது?

2007-ம் ஆண்டு, தென் கொரியாவில் தங்கி இருந்து ஒரு வருடம் பணியாற்றினேன். அங்குதான் எலெக்ட்ரிக் வாகன உருவாக்கம் பற்றிய சிந்தனை மேலோங்கியது. எலெக்ட்ரிக் வாகன உருவாக்கத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் எல்லாமே, அங்கு சுலபமாக கிடைத்தன. அதனால் ‘லெட் ஆசிட்’ வகை பேட்டரிகளை கொண்டு, பேட்டரியில் இயங்கக்கூடிய சைக்கிளை உருவாக்க திட்டமிட்டேன். எனக்கு தேவையானவற்றை அங்கிருந்து வாங்கிக்கொண்டு, தமிழகம் திரும்பினேன். பேட்டரிகளை பொருத்தும் வகையிலான, இரும்பு சைக்கிள் பிரேம் தயாரித்து, அதில் பேட்டரிகளை பொருத்தி, இயக்கினேன். சிறப்பாக ஓடியது.

வேறு என்ன உருவாக்கினீர்கள்?

எலெக்ட்ரிக் சைக்கிளுக்கு பிறகு, பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டரை உருவாக்கினேன். இதுவும் 3 வருடங்களுக்கு ஒருமுறை மாற்றக்கூடிய லெட் ஆசிட் பேட்டரிகளை கொண்டுதான் உருவாக்கினேன். பிறகு, பழைய கார் ஒன்றை வாங்கி, அதில் பேட்டரிகளை பொருத்தி, இயக்கி பார்த்தேன். ஆரம்பத்தில் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடியது. பிறகு கார் பேட்டரியில் சில மாற்றங்களை செய்து, பயணத்தூரத்தை அதிகரித்தேன். 20 கி.மீ., 40 கி.மீ., 80 கி.மீ. என இப்போது, 120 கி.மீ.வரை தொடர்ந்து இயங்குகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், வேலூரில் இருந்து சென்னை சென்றுவிடலாம்.

எல்லோருமே, எலெக்ட்ரிக் வண்டி இயக்குகிறார்கள். உங்களுடைய வாகனத்தின் தனித்துவம் என்ன?

விலைக்கு வாங்கிய எலெக்ட்ரிக் வண்டிக்கும், சொந்தமாகவே உருவாக்கிய வண்டிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதேசமயம் என்னுடைய எலெக்ட்ரிக் வண்டிகள், இயல்பை விட அதிகதூரம் ஓடக்கூடியவை. அதேசமயம், குறைவான மின்சாரத்தை நுகரக்கூடியவை. பொதுவாகவே, 60 கி.மீ. தூரம் பயணிக்க, 10 யூனிட் மின்சாரம் தேவைப்பட்டால், என்னுடைய வண்டிகளுக்கு, 3.3 யூனிட் மின்சாரமே போதுமானது. அந்தளவிற்கு பேட்டரியில் சில மாற்றங்களை செய்திருக்கிறேன்.

அது எப்படி சாத்தியமானது?

2009-ம் ஆண்டிலிருந்தே எலெக்ட்ரிக் வாகன ஆராய்ச்சியில்தான் ஈடுபட்டிருக்கிறேன். அதோடு எலெக்ட்ரிக் வண்டி மற்றும் பேட்டரியின் திறனை கணக்கிட்டு, குறிப்பெடுத்து வருகிறேன். எந்த வேகத்தில் சென்றால், எவ்வளவு தூரம் பயணிக்க முடிகிறது?, பேட்டரியை எவ்வளவு நாட்களில் மாற்றுவது?, பேட்டரியை மேம்படுத்த முடியுமா..?, சார்ஜ் செய்யும் மின்சார அளவு பேட்டரியில் ஏன் குறைகிறது?, அதை தடுக்கமுடியுமா..? என்பது போன்ற பல கேள்விகளுக்கு, ஆராய்ச்சியின் வழியே பதில் தேடி என்னுடைய வாகனங்களை மேம்படுத்தி இருக்கிறேன்.

புதுமையான முயற்சிகள் எதுவும் உண்டா?

என்னுடைய எலெக்ட்ரிக் வாகனங்களின் நிலைபாட்டை அறிந்து கொள்ள பிரத்யேக ‘ஆண்ட்ராய்டு ஆப்’ ஒன்றை உருவாக்கி இருக்கிறேன். இது என்னுடைய எலெக்ட்ரிக் வாகனங்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. எலெக்ட்ரிக் வண்டியின் செயல்பாடு, மின்சார கையிருப்பு, பேட்டரியின் சேத விவரம், பேட்டரி செல் நிலைப்பாடு, பேட்டரி எப்போது மாற்ற வேண்டும், வாகனம் நல்ல நிலையில் இருக்கிறதா? இல்லையா? போன்றவற்றை இந்த ஆப் மூலமாக, தெரிந்து கொள்ளலாம். கூடுதலாக, சார்ஜ் செய்யும்போது வோல்டேஜ் பிரச்சினை ஏற்பட்டால் வண்டி தானாகவே ‘ஆப்’ ஆகும் வகையிலும், இந்த ஆப் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சோதனை முயற்சிகளில் மறக்கமுடியாத அனுபவம் உண்டா?

சமீப காலமாக, எலெக்ட்ரிக் வண்டி பற்றி பேசுகிறார்கள். விசாரிக்கிறார்கள். ஆனால் நான் முயன்று பார்த்த 2009-ம் ஆண்டுகளில், இதுபற்றிய புரிதலே யாரிடமும் இல்லை. அந்தசமயத்தில், எலெக்ட்ரிக் வண்டியை பரிசோதிப்பது, சாலைகளில் ஓட்டிப்பார்ப்பது, சார்ஜ் இன்றி நடுவழியில் நிற்பது, தெரியாத நபர்களிடம் சார்ஜ் செய்து கொள்ள உதவி கேட்பது... என நிறைய மறக்கமுடியாத அனுபவங்கள் உண்டு.

எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு பிரபலமில்லாத காலத்தில், அதை உருவாக்கிய அனுபவம் எப்படி இருந்தது?

பேட்டரி தேர்வில்தான் கொஞ்சம் தடுமாறினேன். ஏனெனில் லெட் ஆசிட், லித்தியம் அயான், நிக்கல் மெட்டல் ஹைட்ரயிட், அல்ட்ராகெபாசிட்டர்... என ஏராளமான பேட்டரிகள் இருப்பதால், நம் தேவைக்கு ஏற்ற பேட்டரிகளை தேர்ந்தெடுப்பது, அதை வெளிநாடுகளில் இருந்து தேடிப்பிடித்து வாங்குவது, பராமரிப்பது... இதுபோன்ற பணிகள்தான் சிரமமாக இருந்தன.

பல வருடங்களாக எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துகிறீர்கள்? இதை பராமரிப்பதும், தொடர்ந்து பயன்படுத்துவதும் சுலபமாக இருந்ததா?

இதை பராமரிப்பது ரொம்ப சுலபம். பேட்டரியை மட்டும் சரியான கால அளவில் மாற்றினால், வண்டிக்கு கூடுதல் பராமரிப்பு கவனமே தேவைப்படாது. மழைக்காலங்களிலும் பேட்டரி வண்டிகளை இயக்கலாம். ஆனால் பேட்டரி தண்ணீரில் மூழ்காத படி பார்த்துக் கொள்ளவேண்டும்.

* பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டது. இருப்பினும் நீங்கள் அந்த கவலையின்றி உலா வருவதை எப்படி உணர்கிறீர்கள்?

அலாதியான உணர்வு அது. பெட்ரோலில் இயங்கக்கூடிய இருசக்கர வாகனத்தில் 60 கி.மீ. தூரத்தை கடக்க, 100 ரூபாய் செலவு செய்கிறார்கள். ஆனால் நான் வெறும் 3.3 யூனிட் மின்சாரத்திலேயே கடந்துவிடுகிறேன். அதாவது, எனக்கு வெறும் 20 ரூபாய்தான் செலவாகிறது. சிலருக்கு பயண அனுபவம் மகிழ்ச்சியை கொடுக்கும். ஆனால் உண்மையில் எனக்குதான், அது முழுமையான மகிழ்ச்சியை கொடுக்கும்.

Next Story