சிறப்புக் கட்டுரைகள்

பாலைவனத்தில் குட்டி சோலைவனம் + "||" + Small desert in the desert

பாலைவனத்தில் குட்டி சோலைவனம்

பாலைவனத்தில் குட்டி சோலைவனம்
அத்வைதா சர்மா, அபுதாபியில் வாழ்ந்து வரும் 34 வயதான இந்தியர். இவரின் மனைவி பிராச்சி. இவர்கள் வீட்டின் பின் புறத்தில் உள்ள 24 சதுர மீட்டர் நிலத்தில் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் விளைய வைக்கும் தோட்டத்தை உருவாக்கியுள்ளனர். அதுவும் பாலைவன நிலமான ஐக்கிய அரபு அமீரகத்தில், இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பச்சை போர்வை போர்த்தியது போன்ற தோட்டம் என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.
இவர்கள் வளர்க்கும் தோட்டத்தில் மரங்கள், செடிகள் நெருக்கமாக வளர்க்கப்படுகின்றன. தங்கள் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை விளைய வைக்கிறார்கள். இதன் மூலம் காய்கறி வாங்குவதற்கான செலவு கணிசமாகக் குறைந்துள்ளதாக இந்த தம்பதியர் கூறுகிறார்கள்.

இது குறித்து அத்வைதா சர்மாவிடம், கேட்டபோது, “எங்கள் வீட்டில் நாங்கள் யாரும் அசைவம் சாப்பிடுவதில்லை. என்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார். நான் எப்போதும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்படாத சுத்தமான காய்கறிகளை சமையலில் சேர்க்க வேண்டும் என்று நினைப்பேன். மக்கும் தன்மையுள்ள கழிவுகளை குப்பையில் வீசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவற்றை குப்பையில் போடாமல் வீட்டில் உள்ள தொட்டி செடிகளுக்கு உரமாக மாற்றுவது என்னுடைய பழக்கம். என் மனைவிக்கு கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான காய்கறி, பழங்களை சாப்பிட கொடுக்க வேண்டும் என்று யோசித்தேன். எங்கள் வீட்டின் பின்புறம் கொஞ்சம் நிலம் இருந்தது. அதில் செடிகளை வளர்க்கலாம் என்று முடிவு செய்தோம்.

இது பாலைவன நிலம் என்பதால் இதில் செடி, மரங்களை வளர வைப்பதற்கு எந்த மாதிரியான முறையை பின்பற்றலாம் என்று இணையத்தில் தேடி பார்த்தோம். நண்பர்களிடமும் விசாரித்தோம். பின்பு சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள சில தாவர வளர்ப்பு முறைகளை கையாண்டோம். குறிப்பாக ஜப்பானிய காடு வளர்ப்பு முறையான மியாவாக்கி முறையை பயன்படுத்தியுள்ளோம்.

ஒரு காடு என்பது உயர்ந்த மரங்கள், சிறு மரங்கள், புதர் செடிகள், படரும் கொடிகள், கிழங்கு வகை செடிகள் என பல்வகை செடிகளால் ஆனது. இந்த முறையில் மிக அடர்த்தியான மரங்கள், செடிகள் நெருக்கமாக ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து வளரும். இம்முறையைப் பயன்படுத்தி, வேம்பு, சுரைக்காய், புடலங்காய், தர்பூசணி, துளசி, இனிப்பு துளசி, புதினா, பசலைக்கீரை உள்பட 30 விதமான தாவர வகைகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ரகங்களை மிகவும் குறைவான இடத்தில் வளர்க்கிறோம். ஆங்கிலேயே தோட்டக்கலை வல்லுநர் ராபர்ட் ஹார்ட்டால் உலகெங்கும் கொண்டு சேர்க்கப்பட்ட காடு வளர்ப்பு திட்டத்தின் சில அம்சங்களையும் பயன்படுத்தியுள்ளோம்.

குறைந்த அளவு தண்ணீரில் அதிக காய்கறிகளை விளைய வைப்பதற்காக ஒல்லா என்ற பழங்கால பாசன திட்டத்தையும் பயன்படுத்துகிறோம். ஒல்லா என்பது செடிகள் உள்ள இடத்தில் குழி தோண்டி தண்ணீர் நிரப்பப்பட்ட மண் பானையை, மண்ணுக்குள் வைத்து மேல்புறம் சிறிய மூடி போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் தண்ணீர் ஊற்றும் முறையாகும். இதன் மூலம் செடிகளின் வேர்களுக்கு தொடர்ச்சியாக பல மணி நேரம் தண்ணீர் கிடைக்கும். தண்ணீர் வீணாகாமல் இருக்க, தண்ணீரை தக்க வைத்துக்கொள்ளும் பிரத்யேக மண்ணை பயன்படுத்தியுள்ளோம்.

வீட்டில் உருவாகும் காய்கறி கழிவுகளை உரமாக மாற்றி செடிகள், மரங்களுக்கு உபயோகப்படுத்துகிறோம். அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள், பால், ஒருசில பருவ காலத்தில் கிடைக்காத சில காய்கறிகள், திண்பண்டங்களை மட்டும் வார இறுதி நாட்களில் கடையில் வாங்குகிறோம். இருப்பினும் காய்கறிகள் வாங்கும் செலவு கணிசமாக குறைந்துள்ளது. எங்கள் வீட்டின் தேவைக்கு அதிகமாகவே காய்கறிகள், பழங்கள் விளையும். அவற்றை அண்டை வீட்டார், நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கிறோம்’’ என்றார்.

அத்வைதா சர்மாவைப் பின்பற்றி, வீட்டை சுற்றி இடம் உள்ளவர்கள், மாடியில் காலி இடம் உள்ளவர்கள் தோட்டம் அமைத்தும், தொட்டியில் காய்கறி செடிகள் வளர்க்கவும் முனைப்பு காட்டுகிறார்கள்.

வீட்டில் தோட்டம் அமைப்பது காய்கறி செலவு குறையும் என்பதை கடந்து குடும்பத்தினரின் ஆரோக்கியத்துக்கு நலம் சேர்க்கும். அதனை கருத்தில் கொண்டாவது காய்கறி செடிகளை வளர்க்கலாமே!