சிறப்புக் கட்டுரைகள்

பச்சோந்தி போல நிறம்மாறும் கடல் குதிரை + "||" + Like a chameleon Discoloration Sea horse

பச்சோந்தி போல நிறம்மாறும் கடல் குதிரை

பச்சோந்தி போல நிறம்மாறும் கடல் குதிரை
கடலில் இருக்கும் உயிரினங்களிலேயே கடல் குதிரை மிகவும் வித்தியாசமான உடலமைப்பைக் கொண்டது. இது பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
* ‘கடல் குதிரை’, ஒரு வகை மீன் இனம் ஆகும். குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு போன்ற வால், முதலை போன்ற உடல் பகுதியைக் கொண்டிருக்கும். இந்த கடல் குதிரையிலும் மற்ற மீன்களைப் போல துடுப்பு, செதில் பகுதிகள் உண்டு.

* உலகில் மொத்தம் 35 வகையான கடல் குதிரைகள் காணப்படுகின்றன. இது 4 செ.மீ. முதல் 17 செ.மீ. வரை வளரும். எடையானது, 4 கிராம் முதல் 14 கிராம் வரை இருக்கும். இலங்கையில் ஒரு முறை பிடிபட்ட கடல் குதிரை அதிகபட்சமாக 27 செ.மீ. உயரம் இருந்தது.

* கடல் குதிரையின் வால் பகுதியானது, தாவரங் களைப் பற்றிக்கொள்ளவும், சிறிய வகையான உயிரினங்களை பிடித்துக் கொள்ளவும் பயன்படுகின்றன. அதிக நீரோட்டம் உள்ள பகுதியில் தண்ணீரில் அடித்துச் செல்லாமல் இருப்பதற்காக, இவை தாவரங்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்கின்றன.

* கடல் குதிரை ஆழம் குறைந்த பகுதியில், கடல்புற்கள், பவளப்பாறைகள் நிரம்பிய இடங்களில்தான் வாழும். மெதுவாக நீந்தும் தன்மை கொண்ட இவை, ஆபத்து காலங்களில் தாவரங்களுக்கு இடையேயும், பவளப்பாறைகளின் இடுக்குகளிலும் சென்று மறைந்துகொள்ளும்.

* கடல் குதிரையின் முக்கியமான உணவு, சிறிய அளவிலான இறால்கள்தான். இவற்றின் கண்கள், 360 டிகிரியில் எந்த பக்கமானாலும் சுழலும் அமைப்பு கொண்டிருக்கும். அதன்மூலம் உணவுகளை பிடிக்கவும், ஆபத்துகளில் இருந்து தப்பவும் செய்கின்றன.

* கடல் குதிரைகள், பச்சோந்தியைப் போல நிறம் மாறும் தன்மை கொண்டவை. ஆனால் இவை தன்னுடைய ஜோடியைக் கவர்வதற்காக மட்டுமே தங்களின் நிறத்தை மாற்றிக்கொள்கின்றன. ஆண், பெண் என இரண்டு கடல் குதிரைகளுமே தங்களின் நிறத்தை மாற்றிக்கொள்ளும்.

* உலகில் உள்ள அனைத்து உயிரினங்களிலும், பெண் இனம்தான் முட்டையிடும், அல்லது குட்டி போடும். அதில் ஓரிரு முரண்பாடுகளும் உள்ளன. அதில் ஒன்றுதான் கடல் குதிரை. இந்த கடல் குதிரையில் ஆண்தான் தன்னுடைய குஞ்சுகளை பொரிக்கும்.

* பெண் கடல் குதிரையானது, தன்னுடைய கரு முட்டையை, ஆண் கடல் குதிரையின் உடலில் உள்ள பை போன்ற இடத்தில் நிரப்பி விடும். அந்த முட்டைகள் மீது, ஆண் கடல் குதிரை தன்னுடைய விந்தணுவை தெளித்து இனப்பெருக்கம் செய்கின்றன. இதற்காக ஆண் கடல் குதிரையின் வாலின் கீழ் பகுதியில் ஒரு பை இருக்கும்.

* பெண் கடல் குதிரை, ஒரே நேரத்தில் 200 முட்டைகள் வரை, ஆண் கடல் குதிரையின் கருப்பை மீது இடும். ஆனால் அவை குஞ்சாக பொரிந்து வரும் போது, சுமார் 50 முதல் 100 குஞ்சுகளே வெளிவருகின்றன. பிறந்த கடல் குதிரைகள் சுமார் 1 செ.மீ. உயரம் மட்டுமே இருக்கும்.