சிறப்புக் கட்டுரைகள்

இந்தியாவை வல்லரசு நாடுகளுக்கு இணையாக உயர்த்தியவர் அப்துல்கலாம் + "||" + India Raised on par with the superpowers Abdulkalam

இந்தியாவை வல்லரசு நாடுகளுக்கு இணையாக உயர்த்தியவர் அப்துல்கலாம்

இந்தியாவை வல்லரசு நாடுகளுக்கு இணையாக உயர்த்தியவர் அப்துல்கலாம்
அறிவியல் துறையில் சர்.சி.வி.ராமனுக்கும், சந்திரசேகருக்கும் அடுத்தபடியாக மிக உயர்ந்த விருது பெற்ற தமிழர் என்ற பெருமை படைத்தவர்.
தமிழகத்தின் தவப்புதல்வரான ஏ.பி.ஜே.அப்துல்கலாம் உலகின் கவனத்தை தம் பக்கம் திருப்பியவர். அறிவியல் துறையில் சர்.சி.வி.ராமனுக்கும், சந்திரசேகருக்கும் அடுத்தபடியாக மிக உயர்ந்த விருது பெற்ற தமிழர் என்ற பெருமை படைத்தவர். இவருடைய முழுப்பெயர் அவுல் பக்கிர் செயினுலாப்தின் அப்துல்கலாம் ஆகும். கடின உழைப்பும், முயற்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்க முடியும். நாட்டை ஆளமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்.

ராமேசுவரத்தில் கடந்த 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ந்தேதி செய்னுலாவுதீன் மரைக்காயர்-அசுமா அம்மாள் தம்பதியினருக்கு மகனாக அப்துல்கலாம் பிறந்தார். அப்துல்கலாம் தொடக்க கல்வியை ராமேசுவரத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்தார். ராமநாதபுரத்தில் உள்ள சுவார்ட்சு பள்ளியில் இறுதி வகுப்பை முடித்தார். அதன்பின்னர் அவர் சென்னையில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் எம்.ஐ.டி. படிப்பில் சேர்ந்தார். தம் சகோதரியின் உதவியாலும், அரசு உதவித்தொகையுடனும் ஏரோநாட்டிக்ஸ் (வான்பொறியியல்) படிப்பை முடித்தார். அந்த கல்லூரியிலேயே முதல் மாணவராக திகழ்ந்தார். அதன்பின் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தில் கல்வி பயின்றார்.

விமானப்படையில் சேர்ந்து விண்ணில் பறப்பதா, பாதுகாப்புத்துறையில் தொழில்நுட்ப பிரிவில் சேர்வதா என்று அப்துல்கலாமுக்கு குழப்பம் ஏற்பட்டது. விமானியாகும் வாய்ப்பு நூலிழையில் நழுவியது. அதனால் 1958-ம் ஆண்டு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அப்போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கினர்.

1963-ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார். அப்போது எஸ்.எல்.வி.-3 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவ முக்கிய பணியாற்றினார். பின்னர் 1980-ம் ஆண்டு ஏவப்பட்ட ரோகிணி செயற்கைகோள், ஆகாஷ் போன்ற ஏவுகணைகளை தயாரிக்க இயக்குனராக பணியாற்றினார்.

1982-ம் ஆண்டு ஐதராபாத்திலுள்ள அறிவியல் ஆராய்ச்சி கழகத்தின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998-ம் ஆண்டு மே மாதம் 11-ந்தேதி பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் இந்தியா தன்னை வல்லரசாக பிரகடனப்படுத்தியது. இதற்கு மூலகாரணமாக இருந்தவர் அப்துல்கலாம். இந்தியாவை வல்லரசு நாடுகளுக்கு இணையாக உயர்த்திய பெருமை அணு விஞ்ஞானி அப்துல்கலாமை சேரும். விண்வெளி, தேசபாதுகாப்பு என பலமுனைகளில் இந்தியாவின் வெற்றிக்கு துணை நிற்பவராக திகழ்ந்தார்.

ஏவுகணை தயாரிப்பதோடு கலாம் நின்றுவிடவில்லை. போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த எடையில் உலோக கருவிகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேஜ் மேக்கர் கருவிகள் போன்றவற்றையும் கண்டுபிடித்தார். இவை ஒருபுறம் இருந்தாலும் வீணை வாசிப்பதில் சிறந்த இசைமேதையாகவும் இருந்தார். தமிழ் இலக்கியங்களை கற்று தேர்ந்த மேதை எனது பயணம் என்ற கவிதை தொகுப்பை இயற்றியவர் அப்துல்கலாம்.

ஜி-8 எனப்படும் உலக பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெறவேண்டும். இளைய சமுதாயத்திற்கு தூண்டுகோலாக இருக்கக்கூடிய முன்மாதிரியான தலைவராக இருந்தார். இளைஞர்களின் சேவை இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியம் என்று அறிவுறுத்தினார். அவருக்கு சிறந்த மாமனிதன் என்ற முனைவர் பட்டமும், பத்மபூசன், பாரத ரத்னா போன்ற விருதுகளை வழங்கி இந்திய அரசு கவுரவித்தது. இந்தியாவின் ஜனாதிபதியாக பதவி வழங்கி மத்திய அரசு அவரை பெருமைப்படுத்தியது. கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ந்தேதி மேகாலயா மாநில தலைநகரான ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது அப்துல்கலாம் மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அப்துல்கலாம் உயிரிழந்தார். பின்னர் ஜூலை 30-ந்தேதி அவருடைய உடல் தனிவிமானம் மூலம் ராமேசுவரத்துக்கு கொண்டு வரப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. மாணவர்களை தன் பேச்சால் கவர்ந்த அப்துல்கலாம் மறைந்தாலும் அனைவருடைய மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ளார்.