உடல் சொல்வதை கேட்போம்


உடல் சொல்வதை கேட்போம்
x
தினத்தந்தி 27 July 2021 12:26 AM GMT (Updated: 27 July 2021 12:26 AM GMT)

முடிந்த வரை உடலின் மருத்துவர் செய்யும் நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய வேண்டும். ஒத்துழைப்பு தர வேண்டும். அதற்கு முதலாவதாக எது நோய் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நோயிலிருந்து விடுபட்டு நலமடைவதற்கு நம்முடைய உடல் செய்யும் முயற்சிகள் எவை என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும்.

நம்முடைய சமூகப் பழக்க வழக்கம், வேலை, ஆர்வக்கோளாறு, நம் உடல் மீதுள்ள அதீத நம்பிக்கை போன்றவற்றால் உடலுக்கு ஒவ்வாத பல செயல்களை பல நேரம் நாம் செய்கிறோம். நாம் மனம் உவந்து செய்கிற காரியங்களை உடலால் தடுக்க முடியாது. சில நேரம் தடுக்க முயற்சிக்கும் .புகை பிடிக்க பழக ஆரம்பிக்கும்போது இருமல், நெஞ்செரிச்சல், சளி கட்டுதல் போன்றவை வரும். மது அருந்த பழகும் போது உமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, உணவுப் பாதையில் எரிச்சல், தலைவலி, உடல் சூடு, நீர்ச்சத்து குறைவதால் உடல் உலர்தல் என்று பல வழிகளில் நம்முடன் உடல் பேசி பார்க்கிறது, மன்றாடுகிறது. ஆனால், நாம் அப்படியெல்லாம் விட்டு விடுவோமா? விடாமல் பழகி உடலியக்கத்தின் ஆதாரங்களான கல்லீரல், சிறுநீரகம், சிறுகுடல், நரம்பு மண்டலம், எல்லாவற்றையும் பல நேரம் 
பாழ்படுத்தி விடுகிறோம்.

இது ஒரு புறம் என்றால் இரவு 12 மணிக்கு ரோட்டோர கடையில் சாப்பிடும் பரோட்டா, கெட்டுப்போன சால்னா உடலுக்குள் விஷமாக மாறி உடல்நலத்துக்கு நிரந்தரமாக தீமை செய்துவிடக் கூடாதென்று உடலின் மருத்துவர் உடனடியாக நடவடிக்கையில் இறங்குவார். அதிகமான நீர்ச்சத்தை சிறுகுடல், பெருங்குடலுக்கு அனுப்புகிறார். கெட்டுப்போன அந்த விஷத்தை குடல் உறிஞ்சி விடும் முன்பு எச்சரிக்கை செய்கிறார். வயிற்றில் வலியை ஏற்படுத்துகிறார். வயிறு கடமுடா என்று இரைகிறது. காலையிலேயே எழுப்பி விடுகிறது. வயிற்றுப்போக்கு உபாதையால் உடலின் நீர்ச்சத்து குறைகிறது. 
தாகம் எடுக்கிறது. உடல் சோர்வாய் இருக்கிறது. ஓய்வெடுக்கச் சொல்கிறது. மிகமிக எளிய உணவைச் சாப்பிடச் சொல்கிறது. முழு விஷத்தையும் வெளியேற்றிய திருப்தி வரும்வரை வயிற்றுப்போக்கு போகிறது. ஆக வயிற்றுப்போக்கு நோயல்ல. உடல் தன்னைத் தற்காத்துக் கொள்ள எடுக்கும் முயற்சி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால் நம்மில் பெரும்பாலானோர் உடனே மருத்துவரை பார்க்கிறோம். மலச்சிக்கலை உருவாக்கும் மருந்துகளை பலரும் கொடுக்கிறார்கள். அதை சாப்பிட்டதும் வயிற்றுப்போக்கு நின்று விடுகிறது. நமக்குத் திருப்தி. ஆனால் அதற்கடுத்த இரண்டு நாளைக்கு மலம் போக மாட்டேன் என்கிறது. வயிறு கனமாக, பசியின்றி மந்தமாக இருக்கிறது. மறுபடியும் மருத்துவரிடம் சென்று மலச்சிக்கலுக்கு மருந்து வாங்கிச் சாப்பிட்டு மலம் கழிக்கிறோம்.

இதற்குள் உணவு விஷத்தை வெளியேற்றுவதற்கு உடலின் மருத்துவர் செய்த அத்தனை முயற்சிகளையும், நாம் சாப்பிட்ட மருந்துகள் முறியடித்துவிட விஷம் உடலில் தங்கிவிடுகிறது. சரி, இரைப்பைக்கு போகும்போதே உடலுக்கு ஒவ்வாதது என்று தெரிந்துவிட்டால் வயிற்று தசைகளை முறுக்கி, வாந்தியை ஏற்படுத்துகிறது. இப்படி எல்லா வழிகளிலும் நம் நலத்தை பாதுகாக்க உடல் 
முயற்சிக்கிறது.

சிலவற்றுக்கு மட்டும் வெளியிலிருந்து மருந்து பொருட்களின் அவசியத்தைக் கோருகிறது நம் உடல். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் உடலின் மருத்துவர் செய்யும் நலமாக்கும் முயற்சிகளின்போதே, அதில் தலையிட்டு விடுகிறோம். நமது உடலை ஒரு எந்திரமாக நினைத்து, அலட்சியப்படுத்தி விடுகிறோம். ஆனால் நமது உடலும் அதன் இயக்கமும் கோடிக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து உயிரூட்டப்பட்ட அற்புத இயங்கியல் வளர்ச்சி.

Next Story