சத்துக்களின் குவியல் ‘குடை மிளகாய்’


சத்துக்களின் குவியல் ‘குடை மிளகாய்’
x
தினத்தந்தி 29 July 2021 6:29 AM GMT (Updated: 29 July 2021 6:29 AM GMT)

குடைமிளகாயில் அதிகளவில் ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. மற்ற காய்கறிகளைவிட குடைமிளகாயை சமையலில் குறைவாகவோ, எப்போதாவதோ தான் சேர்க்கும் வழக்கம் இருக்கிறது. ஆரோக்கியமான மற்றும் சமச்சீரான சத்துணவு சாப்பிட விரும்புபவர்கள் குடைமிளகாயை தவறாமல் சேர்த்துக்கொள்வது நல்லது. குடைமிளகாயின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம்.

வைட்டமின்-தாதுக்கள்: உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் குடைமிளகாயை தாராளமாக சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். இது அதிக நார்ச்சத்து கொண்டது. வயிற்றுக்கும் இதமளிக்கும். மேலும் இதில் அதிக அளவில் வைட்டமின் சி சத்தும் உள்ளது. இந்த ஊட்டச்சத்து உடலின் பெரும்பாலான உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியமானது. அதுபோல் வைட்டமின் ஏ சத்தும் குடைமிளகாயில் அதிகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும், இனப்பெருக்க அமைப்பையும் ஒழுங்குபடுத்த உதவும். குடைமிளகாயில் கொழுப்பு குறைவாக இருப்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

ஆன்டி ஆக்சிடென்டுகள்: உடலில் உள்ள செல்கள் சேதமடையாமல் தடுப்பதில் ஆன்டி ஆக்சிடென்டுகளின் பங்களிப்பு இன்றியமையாதது. குடைமிளகாயில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் செல்கள் 
சேதமடைவதை தடுத்து நிறுத்தும் செயல்முறையை துரிதப்படுத்த உதவும். குடைமிளகாயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் சிலவகை புற்றுநோய்களில் இருந்தும் பாதுகாக்கும் தன்மை கொண்டது. புரோஸ்டேட் புற்றுநோய் வளர்ச்சியை 75 சதவீதம் குறைக்க உதவும்.

குடைமிளகாயில் அதிக அளவு வைட்டமின் சி சத்தும் இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகளில் இந்த ஊட்டச்சத்து நிறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊட்டச்சத்துதான் உடல் இயக்க செயல்பாடுகளுக்கு ஊக்க சக்தியாக விளங்குகிறது.

கண்கள்: குடைமிளகாயில் லுடீன் மற்றும் ஜியாசாந்தைன் ஆகிய இரண்டு கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளன. அவை விழித்திரையை பாதுகாக்கக்கூடியவை. கண்களின் பார்வைத்திறனையும் மேம்படுத்தும் தன்மை கொண்டவை. இந்த கரோட்டினாய்டுகளை உட்கொள்வது கண்களை மாஸ் குலர் சிதைவிலிருந்து பாதுகாக்கவும் துணைபுரியும்.

எலும்பு: குடைமிளகாயில் உள்ள வைட்டமின் கே எலும்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் அதில் உள்ள மாங்கனீசும் எலும்புகளுக்கு நன்மை பயக்கும்.உணவில் குடைமிளகாயை சேர்த்தால் உடல் எடையை குறைப்பதற்கும் உதவும். ஏனெனில் இதில் இருக்கும் வைட்டமின் பி6, வளர்சிதை மாற்ற செயல்முறைக்கு நல்லது. குடைமிளகாயை சாலட்டாகவோ, உணவிலோ தினமும் சேர்த்தால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.

Next Story