தொழில்முறை எம்.எம்.ஏ. விளையாட்டில் அசத்தும் ‘நாக்-அவுட்’ வீரர்


தொழில்முறை எம்.எம்.ஏ. விளையாட்டில் அசத்தும் ‘நாக்-அவுட்’ வீரர்
x

வெளிநாட்டவரின் ஆதிக்கம் நிறைந்த விளையாட்டுகளில் ‘எம்.எம்.ஏ.’ விளையாட்டும் ஒன்று. தமிழகத்தில், ஏன்..? இந்திய அளவிலும், இதற்கான வரவேற்பு குறைவுதான். இருப்பினும், சென்னையை சேர்ந்த சதீஷ், இந்த எம்.எம்.ஏ. விளையாட்டில் அசத்துகிறார். சமீபத்தில்கூட, சர்வ தேச அளவிலான போட்டியில் வென்று, உலக கவனத்தை ஈர்த்திருக்கிறார். அவருடன் சிறு நேர்காணல்...

* உங்களை பற்றிய அறிமுகம் கூறுங்கள்?

சென்னைதான் என் பூர்வீகம். கம்ப்யூட்டர் படிப்பில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். மேலும் விளையாட்டு தொடர்பான கூடுதல் படிப்புகளையும் படித்திருக்கிறேன்.

* ‘எம்.எம்.ஏ.பாக்ஸிங்’ விளையாட்டுகளில் ஆர்வம் பிறந்தது எப்படி?

10 வயதில் இருந்தே தற்காப்பு கலைகளை பயின்று வருகிறேன். கராத்தே பயிற்சியில் தொடங்கி, அதில் பிளாக் பெல்ட்டும் பெற்றிருக்கிறேன். பிறகு குத்துச்சண்டை விளையாட்டு மீது ஆர்வம் ஏற்பட, அதிலும் பயிற்சி எடுத்து, நிறைய போட்டிகளில் கலந்து கொண்டேன். தற்காப்பு கலை பயில்பவர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கும் ‘நாக்-அவுட்’ செய்து வெற்றியை ருசிப்பது என்பது சூப்பரான அனுபவம். ஆனால் கராத்தே போட்டியில் பாயிண்ட் அடிப்படையிலேயே வெற்றிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அதனால் ‘நாக்-அவுட்’ வெற்றி தரும் விளையாட்டுக்களை தேட ஆரம்பித்தேன். அப்படிதான், எம்.எம்.ஏ. அறிமுகம் ஆனது.

* அது என்ன ‘எம்.எம்.ஏ.’ விளையாட்டு?

மொய்தாய் (தாய்லாந்து பாக்ஸிங்), கிக் பாக்ஸிங் (கால்-கைகளை பயன்படுத்தும் குத்துச்சண்டை), ஜூடோ (ஜப்பானிய தற்காப்பு கலை), மல்யுத்தம், ஜூஜிட்சோ (பிரேசில் தற்காப்பு கலை)... போன்ற தற்காப்பு கலைகளின், கலவையே ‘எம்.எம்.ஏ.’ விளையாட்டு. அதாவது ‘மிக்ஸ்ட் மார்சல் ஆர்ட்ஸ்’ என்பதன் சுருக்கமே, இது. அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகளில் இது பிரபலமான விளையாட்டு. ஆக்ரோஷமான விளையாட்டு, அதேசமயம் ஆபத்தான விளையாட்டும் கூட.

* இந்தியாவிலும், தமிழகத்திலும், எம்.எம்.ஏ. விளையாட்டு பிரபலமானதா?

கடந்த சில வருடங்களில், நிறைய எம்.எம்.ஏ. பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. நிறைய இளைஞர்கள் பயிற்சி பெறுகிறார்கள். ஆனால் பயிற்சியும், போட்டிகளும் ‘அமெச்சூர்’ எனப்படும் பொழுதுபோக்கு நிலையிலேயே இருக்கிறது. தொழில்முறை போட்டியாளர்கள், தேசிய அளவில் மிக குறைவாகவே இருக்கிறார்கள். அந்த பட்டியலில், நானும் ஒருவனாய் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

* எம்.எம்.ஏ. விளையாட்டில் நீங்கள் சாதித்தது என்ன?

நிறைய ‘கேஜ் பைட்’ போட்டிக்களங்களில் பங்கேற்றிருக்கிறேன். என்னை விட உயரமான, எடை கூடுதலான போட்டியாளர்களையும் எதிர்கொண்டு, ‘நாக்-அவுட்’ செய்திருக்கிறேன்.

‘அமெச்சூர்’ பிரிவில் ஆசிய அளவிலான போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றிருக்கிறேன். ‘புரோ அமெர்ச்சூர்’ பிரிவில், 3 போட்டிகளில் கலந்துகொண்டு, இரண்டில் வெற்றி பெற்றிருக்கிறேன். தற்போது தொழில்முறை போட்டியாளராக மாறி, சர்வதேச அளவிலான முதல் போட்டியிலேயே வென்றிருக்கிறேன்.

* போட்டிக்களத்தில் மறக்கமுடியாத சம்பவம் உண்டா?

என்னைவிட, எடை அதிகமான போட்டியாளர் ஒருவரை, முதல் ரவுண்டிற்குள் ‘நாக்-அவுட்’ செய்ததை மறக்கவே முடியாது. அதேபோல, சமீபத்தில் வென்ற தொழில்முறை போட்டியில் சண்டையிட, உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தயாராக வேண்டியிருந்தது. கொரோனா நெருக்கடியால், என் தங்கை குழந்தையின் நகையை அடகு வைத்த பணத்தில்தான் அந்த போட்டியில் கலந்துகொண்டேன். அதையும் மறக்கவே முடியாது.

* எப்படி தயாராவீர்கள்?

ஒரு நாளில், 10 மணி நேர பயிற்சி அவசியமாகிறது. அப்போதுதான், இந்த ஆபத்தான விளையாட்டை எதிர்கொள்ள முடியும். அதேபோல, ஊட்டச்சத்து நிறைந்த உணவும், முறையான உணவு கட்டுப்பாடும் அவசியம்.

* பயிற்சி பெறுவது பற்றி?

திறமையான பயிற்சி கூட்டணி அமையும்போதுதான், வெற்றியை ருசிக்க முடியும். மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் சீனியர் வீரர் ராம் பர்வேஷ் மல்யுத்த பயிற்சி கொடுத்தார். குத்துச்சண்டைக்கு சரவணனிடமும், ஜூடோவிற்கு சி.எஸ்.ராஜகோபாலிடமும் பயிற்சி பெற் றேன். மேலும் யூ.எப்.சி. போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியர், பரத் கந்தாரே என்பவரிடம், எம்.எம்.ஏ. சிறப்பு பயிற்சி பெற்றேன்.

* எதிர்கால லட்சியம் என்ன?

எம்.எம்.ஏ. விளையாட்டில் நிறைய சாதிக்கவேண்டும். உலகளவிலான தொழில்முறை போட்டிகளில் பங்கேற்று, சாதனை படைக்கவேண்டும். அதற்கான பயிற்சிகளை தொடங்கி இருக்கிறேன். அதற்கு முன்பாக, வரும் அக்டோபர் மாதம் எகிப்தில் நடைபெற இருக்கும் கிக் பாக்ஸிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க ஆவலாய் இருக்கிறேன்.

Next Story