தொழில்நுட்பங்கள் வழியே... நம்பிக்கை விதைக்கும் நல் உள்ளம்


தொழில்நுட்பங்கள் வழியே... நம்பிக்கை விதைக்கும் நல் உள்ளம்
x
தினத்தந்தி 31 July 2021 10:38 AM GMT (Updated: 31 July 2021 10:38 AM GMT)

‘‘ஒவ்வொரு காலகட்டத்திலும், புதுமையான தொழில் முயற்சிகள் பெண்களுக்கு கைகொடுத்தன. உதாரணத்திற்கு, ஒருகாலகட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள், பெண்களை ஒருங்கிணைக்கவும், அவர்களுக்கு புதுப்புது தொழில் பயிற்சி மற்றும் முயற்சிகளில் ஈடுபடுத்தவும் உதவியது.

அவை, பல பெண்களின் குடும்ப நிலைகளையும் உயர்த்தின. அந்த வகையில், புதுமையான தொழில்நுட்பங்கள், இக்கால பெண்களுக்கு புதுமையான வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருக்கின்றன. வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்... போன்ற சமூக வலைத்தளம் வழியே, வீட்டிற்குள் இருந்துகொண்டே நவீன சந்தைகளை ஒருங்கிணைக்கிறார்கள், நடத்துகிறார்கள்’’ என்று முதல் அறிமுகத்திலேயே பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார், ஜானகி.

கோவையை சேர்ந்தவரான இவர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு, நவீன தொழில் வாய்ப்புகளை பற்றி எடுத்துக்கூறுவதுடன், அதற்கான தொழில்நுட்ப பயிற்சிகளையும் வழங்கி வருகிறார்.

‘‘சமூக வலைத்தளங்கள் மூலமாக ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோக பொருட்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஏன்..? மருந்து பொருட்கள் வரை விற்பனையாகிறது. சந்தை பொருட்களை ‘வாட்ஸ் ஆப்’, ‘பேஸ்புக்’ மற்றும் ‘இன்ஸ்டாகிராம்’ குழுக்கள் அல்லது ஸ்டேட்டஸ்களில் பகிர்வது, பொருட்கள் வைத்திருப்பவர்களையும், வாங்குபவர்களையும் சமூக வலைத்தளங்களில் ஒருங்கிணைப்பது, பொருட்களின் நிலவரத்தை கண்காணிப்பது, பொருள் உரியவரிடத்தில் சேர்ந்ததா என்பதை சோதிப்பது... இப்படி சின்ன சின்ன வேலைகளை வீட்டில் இருந்துக்கொண்டே, ஸ்மார்ட்போன் மூலமாக செய்து பணம் சம்பாதிக்க, நவீன தொழில்நுட்பங்கள் வழிவகை செய்திருக்கின்றன.

அதை தெரிந்துகொண்டு செயல்படுத்தி பார்த்ததுடன், ஏழை பெண்களுக்கான எளிமையான வேலைவாய்ப்பாகவும் அதனை உருவாக்க ஆசைப்பட்டேன். பெரிய முதலீடு தேவையில்லை, அலைச்சல் இல்லை.... ஸ்மார்ட்போன் பயன்படுத்த தெரிந்திருந்து, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்தால் போதும். சிறப்பாக பணியாற்றலாம். அதற்காக ‘பஸார்வே’ என்ற குழுவை உருவாக்கி, அதன் மூலம் பெண்களை ஒருங்கிணைத்து, பயிற்சி கொடுப்பதுடன், அவர்களுக்கு எளிமையான, நவீன தொழில்பாதையை அமைத்துக்கொடுக்கிறேன்’’ என்று பொறுப்பாய் பேசும் ஜானகி, புதுப்புது தொழில்நுட்பங்களில் ஒளிந்திருக்கும் வேலைவாய்ப்புகளை பெண்கள் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள, வழிவகுக்கிறார்.

குறிப்பாக கடலைமிட்டாய், தேன்மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், மலை தேன், மூலிகை சோப்பு கட்டிகள், மூலிகை எண்ணெய்... இப்படி வீட்டிலிருந்தபடியே பெண்கள் தயாரிக்கும் பொருட்களை விற்கவும், தொழில்நுட்பம் வழியே, பாதை அமைத்து கொடுக்கிறார்.

‘‘அப்ளிகேஷன், சமூக வலைத்தளம்... இப்படி நவீன தொழில்நுட்பமாக வெளிவரும் எதுவாக இருப்பினும், அதில் பெண்களுக்கான தொழில்வாய்ப்புகளை உருவாக்குவது பற்றி ‘பஸார்வே’ குழுவினருடன் கலந்து பேசுவோம். பெண்களுக்கு எளிமையான தொழில்நுட்பமா அது?, அதை பயன்படுத்துவதில் சிரமம் இருக்குமா?, கூடுதல் பயிற்சி தேவைப்படுமா..? போன்றவற்றை அலசி ஆராய்ந்து, அதற்கு ஏற்ப பெண்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்குவோம். இந்த முயற்சியினால், பெண்களின் வாழ்வாதாரம் கொஞ்சம் உயர்ந்தாலும், அதுவே எங்களுக்கு போதும்’’ என்று மனநிறைவாய் பேசும் ஜானகி, இருமுறை சாலை விபத்தில் சிக்கி, உயிர் பிழைத்தவர். அதன் காரணமாய், விபத்தில் சிக்கி இயல்பு வாழ்க்கையையும், வேலையையும் தொலைத்த பெண்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துகிறார். விபத்து அனுபவங்களில் இருந்து மீண்டு வர, நவீன தொழில் வாய்ப்புகள் மூலமாக தன்னம்பிக்கையும் கொடுக்கிறார்.

‘‘கடந்த 10 ஆண்டுகளாக இந்த சேவையை தொடர்ந்து வருகிறேன். நிறைய குடும்ப பெண்களுக்கு, சமூக வலைத்தளங்கள், நிலையான வருமானத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. சில பெண்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்திருக்கிறது. பணம் சம்பாதிக்கவும், வாழ்க்கையில் உயரவும், நமக்குள் கொஞ்சம் ‘நம்பிக்கை’ இருந்தால் போதும்’’ என்று நிறைவாய் பேசி முடித்தார்.

Next Story