கான மயில்களை பாதுகாக்கும் ‘சோக குயில்கள்’


கான மயில்களை பாதுகாக்கும் ‘சோக குயில்கள்’
x
தினத்தந்தி 1 Aug 2021 1:11 PM GMT (Updated: 1 Aug 2021 1:11 PM GMT)

ரா ஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனத்தில் அமைந்துள்ளது சுதாசரி பாலைவன தேசிய பூங்கா. அங்குள்ள ஜெய்சால்மர் நகரத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இது அழிந்து வரும் கான மயில் பறவைகளை பாதுகாக்கும் தேசிய பூங்காவாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இங்கு மயில்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இந்த கானமயில்களையும், மற்ற பறவை, வன விலங்கினங்களையும் பாதுகாக்கும் பொறுப்பில் இரண்டு பெண் வன காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வெப்பம் உமிழும் பாலைவன பகுதியில் வன பாதுகாவலர்களாக பெண்கள் பணிபுரிவது அசாதாரணமானது. இத்தனைக்கும் ராஜஸ்தானில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மிக குறைவு. இந்த மாநிலத்தில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 888 பெண் குழந்தைகளே உள்ளன. அத்துடன் பெண்கள் கல்வியிலும் மிக பின்தங்கிய மாநிலமாக இருக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் பெண் குழந்தைகளை எட்டாவது வகுப்புக்கு மேல் பெரும்பாலும் படிக்க வைக்கமாட்டார்கள். இதில் ஜாதி, ஏழை, பணக்காரர் என்று எந்த பாகுபாடும் இல்லை. வசதியானவர்களின் வீட்டு நிலையும் இதுதான்.

இவ்வளவு இடர்பாடுகள் மிகுந்த ராஜஸ்தான் மாநிலத்தில், பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ராஜஸ்தானின் மேற்கு பிராந்தியத்தைச் சேர்ந்த புஷ்பா, புஸ்தா என்ற இரண்டு பெண்கள் பட்டமேற்படிப்பு படித்து முடித்து, வனக் காவலர்களாக பணியாற்றுவது ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

கண்ணுக்கு எட்டிய தூரத்தில் எங்கு பார்த்தாலும் மணல் பரந்து விரிந்து காணப்படும் பாலைவன பகுதியில் இரண்டு மண் குடிசைகளும், வனத்துறையில் வேலை பார்ப்பவர்களுக்காக இடிந்த வனத்துறை அலுவலகம் மட்டுமே உள்ளது. எப்போதாவது குளிர் காலத்தில் யாராவது வருவார்கள். இங்கு வனக்காவலர்களாக வேலை பார்க்கும் புஷ்பா, புஸ்தா இரண்டு பெண்களுக்குமே ஏறக்குறைய ஒரே வயதுதான். ஆனால் இவர்களின் வாழ்க்கை கதையோ வேதனைகள் மிகுந்தது.

புஷ்பா ஷேக்வதி (26) விதவை. ஒரு குழந்தைக்கு தாய். நகுரார் மாவட்டத்தில் உள்ள கசும்பி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். விதவை திருமணம் என்பதை ராஜஸ்தானில் நினைத்து கூட பார்க்க முடியாது. இவரது கணவர் வீரேந்தர் பிரதாப் செகாவத், 2014-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு விபத்தில் பலியாகிவிட்டார். இளம் மனைவி, கைக்குழந்தையை விட்டு பிரிந்தார். அப்போது திருமணமாகியும் கூட புஷ்பா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். கணவன் விபத்தில் பலியான இழப்பை தாங்கிக் கொண்டு கல்லூரியில் தொடர்ந்து படித்து பட்டம் பெற்றார்.

புஷ்பா கஷ்டப்பட்டு படித்தது வீணாகவில்லை. வனக்காவலராக தேர்வு செய்யப்பட்டார். தனது குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு இந்த வேலையில் சேர்ந்துவிட்டார். “சினிமாவில் காண்பிப்பது போல் ராஜஸ்தானில் வாழ்க்கை இல்லை. எனது பெற்றோர் படிக்காதவர்கள். எனக்கு குழந்தை இருப்பதே அவர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு எல்லாமே ஆண் குழந்தைதான்” என்கிறார், புஷ்பா. ராஜஸ்தானில் விதவைகள் கடுமையான சடங்குகளுக்கு உட்படுத்தப்படுவார்கள், வீட்டை விட்டு வெளியேற அனுமதி இல்லை. தனது மாமனார் வீட்டார், படித்து முடித்து விட்டு, இந்த அசாதாரணமான வனக்காவலர் வேலையை பார்க்க அனுமதித்தனர் என்று நன்றியுடன் கூறுகிறார்.

இவருடன் வனக்காவலராக வேலை பார்க்கும் மற்றொருவரான புஸ்தா பவார் (27) பொக்ரானுக்கு அருகே உள்ள பலாட் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். புதிதாக திருமணம் ஆகி ஆயிரம் கனவுகளுடன் இருப்பவர். இந்த வேலையின் தன்மையால், கணவரிடம் இருந்து நீண்ட தொலைவில் பிரிந்து வாழ்கிறார். இவரது பெற்றோர் விவசாய குடும்ப பின்னணி கொண்டவர்கள். படிக்காதவர்கள். ஆனால் எல்லா குழந்தைகளையும் நன்கு படிக்க வைத்தனர்.

இவரது கிராமத்தில் பெரும்பாலான பெண்களுக்கு 18 வயதாகும் முன்பே திருமணம் செய்து விடுவார்கள். படித்து முடித்து விட்டு வேலை கிடைத்து சுயமாக நின்ற பிறகே திருமணம் செய்து கொள்வது என்று புஸ்தா உறுதியாக இருந்தார்.

வனக்காவலர்களான புஷ்பா, புஸ்தா ஆகிய இருவரும் தங்குவதற்கு அரசு குறைந்த வசதிகளுடன் மண் குடிசை வீடு ஒதுக்கியுள்ளது. இருவரும் சேர்ந்து சமையல் உள்பட, மற்ற வேலைகளை பகிர்ந்து கொள்கின்றனர். இவர்கள் கானமயிலுக்கு தேவையான தண்ணீர் தட்டுபாடு இல்லாமல் கிடைக்கின்றதா என்பதை தினசரி கண்காணிக்க வேண்டும். தண்ணீர் தீர்ந்து விட்டால், உடனே ஏற்பாடு செய்ய வேண்டும். அத்துடன் தேசிய பூங்காவில் ஆக்கிரமிப்பை தடுக்க கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.

“இது கஷ்டமான வேலை அல்ல. ஆனால் பெரும்பாலும் யாரும் இது போன்ற வேலைக்கு வர விரும்புவதில்லை. சொந்த கிராமத்தில் இருந்து நீண்ட தூரத்தில் வாழ வேண்டும். கோடை காலங்களில் வெப்பம் 50 டிகிரி செல்சியஸை தாண்டிவிடும். மணல் காற்று அடித்தால், வீட்டில் ஒரு அடி உயரத்திற்கு மணல் குவிந்துவிடும். சில வகை உணவுகள் மட்டுமே கிடைக்கும். நாங்கள் பெரும்பாலும் பயறு வகைகளையும், பால் சேர்க்காத தேநீர் மட்டுமே சாப்பிடுகிறோம். நாங்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அவர்கள் எங்கள் மீது வெறுப்பு காட்டுகிறார்கள். காரணம் நாங்கள் அவர்களது கால்நடைகளை தேசிய பூங்காவில் மேய்வதற்கு அனுமதிப்பதில்லை. பெரும்பாலோர் அவர்களின் கால்நடைகளுக்கு, நாங்கள் எதிரிகள் என எண்ணுகின்றனர். இதனால் அவர்களிடம் இருந்து பால் கூட வாங்குவதில்லை’’ என்று புஸ்தா கூறுகிறார்.

குடும்பத்தை பிரிந்து நீண்ட தொலைவில் வாழும் இவர்கள் இருவரும் போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கும் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். இதை விட குடும்பத்துடன் தங்கி வேலை செய்வது போல் நல்ல பணி கிடைக்க வேண்டும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இது கஷ்டமான வேலை அல்ல. ஆனால் பெரும்பாலும் யாரும் இது போன்ற வேலைக்கு வர விரும்புவதில்லை. சொந்த கிராமத்தில் இருந்து நீண்ட தூரத்தில் வாழ வேண்டும். கோடை காலங்களில் வெப்பம் 50 டிகிரி செல்சியஸை தாண்டிவிடும்

Next Story