யோகாவும், ஓவியமும் சந்தித்தால்...!


யோகாவும், ஓவியமும் சந்தித்தால்...!
x
தினத்தந்தி 1 Aug 2021 1:18 PM GMT (Updated: 1 Aug 2021 1:18 PM GMT)

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எம்மா பே எனும் பெண்மணி எதையும் வித்தியாசமாக சிந்திப்பவர். வியக்க வைக்கும் ஓவியங்களை வரைபவர். பொதுவாக, ஓவியர்கள் ஓவியம் வரைய அட்டைகளை கேட்பார்கள். ஆனால், இவர் மனித உடலையே ஓவியம் வரையும் கேன்வாஸாகப் பயன்படுத்தி அசத்துகிறார்.

1987-ம் ஆண்டு பிறந்த எம்மா பே, நுண்கலை படித்தவர். 'பாடி ஆர்ட்' கலையில் ஆர்வம் கொண்டவர். அதில் தன் திறமையைக் காட்டிவருகிறார். ‘இயற்கையின் அதிசயம்' என்ற தலைப்பில் வரைந்த ஓவியங்கள் மூலம், உலகளவில் சிறந்த ‘பாடி ஆர்ட்டிஸ்' என்று புகழ்பெற்றார். இதற்காக வாட்டர் கலர்களைப் பயன்படுத்தும் எம்மா பே, இதுவரை நூற்றுக்கணக்கான உடல் ஓவியங்களை வரைந்து சக ஓவியர்களையே ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

ஓர் ஓவியம் வரைய பல மணி நேரம் உழைக்கும் எம்மா பே, முதலில் மாடல்களைத் தேர்வு செய்து, எந்த நிலையில் இருந்தால் எந்த உருவம் வரையமுடியும். அதற்கு எத்தனைப் பேர் தேவைப்படுவார்கள் என துல்லியமாக திட்டமிடுகிறார். அதையே மனதிற்கு ஒரு வரைபடமாக நிறுத்திக்கொள்கிறார். அதன்படி மாடல்களை நிற்கவைத்து ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுகிறார். பிறகு அதே நிலையில் மாடல்களை வைத்து புகைப்படங்களை எடுக்கிறார். தற்போது இங்கிலாந்து மக்களிடையே இவருடைய ‘பாடி ஆர்ட்' புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சமீபத்தில் ‘யூனியன் ஆப் யோகா' என்ற தலைப்பில் எம்மா பே வரைந்த ஓவியங்கள் உலகளவில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளன. இதற்காக நீண்ட காலம் யோகா பயிற்சி மேற்கொள்ளும் மாடல்களைத் தேர்வுசெய்து, யோகா நிலையில் இருக்கும் மாடல்களின் உடலில் வரிக்குதிரை, ஜிராபி, குரங்கு, பாம்பு, கம்பளிப்பூச்சி, முயல் எனப் பல உருவங்களைத் தீட்டி மிரட்டியிருக்கிறார். புகைப்படங்களைப் பார்த்து ‘ஆஹா... ஓஹோ...' என பாராட்டுகள் குவிவதுடன் அவரோடு ‘செல்பி’ எடுக்க கூட்டம் அலைமோதுகிறது.

Next Story