60 கிலோ எடை குறைந்து ஆச்சரியப்படுத்தும் இளைஞர்


60 கிலோ எடை குறைந்து ஆச்சரியப்படுத்தும் இளைஞர்
x
தினத்தந்தி 1 Aug 2021 1:38 PM GMT (Updated: 1 Aug 2021 1:38 PM GMT)

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார், பாலாஜேபள்ளி சிவராம் சாஸ்திரி. 29 வயது இளைஞரான இவர் 9 மாதங்களில் 60 கிலோ எடை குறைந்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

அதாவது 130 கிலோ எடை இருந்தவர் கடுமையான உணவு பழக்கம், உடற்பயிற்சியை பின்பற்றி 60 கிலோ குறைந்து 70 கிலோவாக உடல் எடையை தக்கவைத்திருக்கிறார். சிவராமின் பூர்வீகம் ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீகாகுளம். சிறுவயது முதலே உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டிருக்கிறார்.

9-ம் வகுப்பு படிக்கும்போது 66 கிலோ இருந்திருக்கிறார். அதனால் சக மாணவர்களின் கேலி - கிண்டலுக்கு இலக்காகி இருக்கிறார். கஷ்டப்பட்டு எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படித்திருக்கிறார். 2013-ம் ஆண்டு வேலை தேடி மும்பைக்கு சென்றிருக்கிறார். அங்கு வெளியே சென்று களப்பணியில் ஈடுபட வேண்டியிருந்திருக்கிறது. அதனால் உடல் நிலை மீது அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. துரித உணவுகளையே அதிகம் சாப்பிட நேர்ந்திருக்கிறது. அதுவும் உடல் பருமன் பிரச்சினை அதிகரிப்பதற்கு காரணமாகி விட்டது. வேலைக்கு சென்ற சில வருடங்களிலேயே தங்கை அரியவகை நோய் காரணமாக பார்வை இழப்புக்கு ஆனார். அதனால் வேலையை விட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்திருக்கிறார்.

அடுத்தடுத்து தாய்-தந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. குடும்பத்தினர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதால் சிவராம் மிகுந்த வேதனைக்கு ஆளாகி இருக்கிறார். தனது உடல் நிலையை கருத்தில் கொள்ளாமல் இருந்ததால் உடல் பருமன் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. குடும்ப சுமையை குறைப்பதற்கு நல்ல வேலை அமைய வேண்டும் என்று முடிவு செய்தவர் அரசு வேலைக்கான போட்டித்தேர்வுகளை எழுதி இருக்கிறார்.

2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் கப்பல் துறை பணியில் சேர்வதற்கான போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆனால் உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறார். அப்போது தான் 130 கிலோ எடை இருந்த காரணத்தால் நிராகரிக்கப்பட்டேன் என்று வேதனையோடு சொல்கிறார். குடும்ப மருத்துவரை அணுகி உணவு திட்டத்தை உருவாக்கியவர் நடைப்பயிற்சியையும், குறைந்த கலோரிகளை கொண்ட உணவுகள் மற்றும் தினை வகை உணவு களை உண்ணும் பழக்கத்தையும் தீவிரப்படுத்தி இருக்கிறார்.

‘‘நான் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே சாப்பிடுவேன். அதன் பிறகு எதுவும் சாப்பிட மாட்டேன். அத்தகைய உணவு கட்டுப்பாடு உடல் எடை சில கிலோ குறைவதற்கு வழிவகுத்தது. உணவில் அதிக கலோரிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த கார்போஹைட்ரேட்டு கலந்த உணவுகளை குறைக்க வேண்டியிருந்தது. எனவே, வேகவைத்த அரிசி, தோசை மற்றும் இட்லி சாப்பிடுவதை நிறுத்தினேன்’’ என்பவர் கொரோனா காலகட்டத்திலும் இத்தகைய உணவு பழக்கத்தை கைவிடவில்லை.

‘‘2020-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 60 கிலோ வரை எடை குறைந்து 70 கிலோவுக்கு மாறினேன். என் குடும்ப மருத்துவரை சந்திக்க சென்றேன். அவரால் என்னை அடையாளம் காண முடியவில்லை. அது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்’’ என்கிறார்.

Next Story