‘ஒலிம்பிக்’ களத்தில் உருவான திரைப்படங்கள்


‘ஒலிம்பிக்’ களத்தில் உருவான திரைப்படங்கள்
x

எங்கும் ஒலிம்பிக் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. வெற்றி - தோல்விகளுக்கு இடையே அல்லாடும் பல மனிதர்களின் வாழ்வை ஒலிம்பிக்கின் பின்னணியில் பார்க்க முடியும். உலகமெங்கும் இருந்தும் கலவையான மனிதர்கள் பங்கேற்கும் ஒலிம்பிக் விளையாட்டுக்களம் உயிரோட்டமான பல கதைகளின் போராட்ட களமாகவும் உள்ளது. அப்படியான கதைகளின் அடிப்படையில் உருவான ரசனையான திரைப்படங்களில் சிலவற்றை பார்ப்போம்.

ஒலிம்பியா (1938)

ஹிட்லரின் ஆட்சி காலத்தில் பெர்லின் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி (1936) ‘ஒலிம்பியா: பெஸ்டிவல் ஆப் நேஷன்’, ‘ஒலிம்பியா: பெஸ்டிவல் ஆப் பியூட்டி’ என 2 பாகங்களில் ஆவண திரைப்படமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நடிப்பு, ஒளிப்பதிவு, தயாரிப்பு, நடனம், எடிட்டிங் என பன்முகத்திறமை கொண்ட லெனிரை பென்ஸ்தால் என்ற பெண் இயக்குநரின் ஆக்கத்தில் உருவான இப்படங்கள், அதன் தொழில்நுட்ப உத்திகளுக்காக இன்றளவும் பேசப்படுகின்றன.

டோக்கியோ ஒலிம்பியாட்

நாஜி ஆட்சிக்கால ஜெர்மனி தன்னை உலகப் பார்வையில் நல்லவிதமாக காண்பித்துக்கொள்ள ஆவணமாக்கிய ‘ஒலிம்பியா’ போல, இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஜப்பான் மேற்கொண்ட முனைப்பே ‘டோக்கியோ ஒலிம்பியாட்’ திரைப்படம். டோக்கியோவில் (1964) நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் தொடக்கவிழா முதல், நிறைவு விழா வரையிலான நிகழ்வுகளை திரைப்படமாக காட்சிப்படுத்தினார்கள். ஒலிம்பியா போல டோக்கியோ ஒலிம்பியாடும் இன்றும் பேசப்பட அதன் ஆவண உத்தியே காரணம்.

ரன்னிங் பிரேவ்

அமெரிக்க இந்தியராக பிறந்து அந்நாட்டுக்காக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பில்லி மில்ஸின் கதையே ‘ரன்னிவ் பிரேவ்’ திரைப்படம். வறிய குடும்பம், தாய் தந்தையை இழந்து அநாதையானது போன்ற துயர வாழ்க்கையை விட, அமெரிக்க இந்தியராக தனக்கான அடையாள தேடலே பில்லி மில்ஸை ஓடவைத்தது. குத்துச்சண்டை, கால்பந்து என தனக்கு பயிற்றுவிக்கப்பட்டதைத் தவிர்த்துவிட்டு மில்ஸ் ஓட ஆரம்பித்ததற்கு இதுவே காரணம். இனவெறி பாகுபாடுகளைக் கடந்து அமெரிக்க ஒலிம்பிக் அணியில் இடம்பிடித்த மில்ஸ், ஒரு வழியாய் டோக்கியோ ஒலிம்பிக்கில் 10 கி.மீ. ஓட்டத்தில் பங்கேற்கிறார். ஓட்டக்களத்தில் சக வீரர்களால் இடையூறை எதிர்கொண்ட போதும், அசராது மில்ஸ் எல்லைக்கோட்டை தாண்டுவதை ‘ரன்னிங் பிரேவ்’ துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது.

பிரிபாண்டெய்ன்

நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரராக அமெரிக்க தேசத்தால் கொண்டாடப்பட்டவர் ஸ்டீவ் பிரிபாண்டெய்ன். தேசிய சாதனைகள் படைத்த இந்த இளைஞர் அமெரிக்கா சார்பில் ம்யூனிக் (1972) ஒலிம்பிக்கில் பங்கேற்று கண நேரத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அடுத்த ஒலிம்பிக்கிற்கு நம்பிக்கையோடு தயாரான ஸ்டீவ், எதிர்பாராத விதமாய் கார் விபத்தில் பலியானபோது அவருக்கு வயது 24. அமெரிக்க இளைஞர்களை அதிகம் வசீகரித்த இவரது வாழ்க்கையை பிரிபாண்டெய்ன் (1997) என்ற படம் பதிவு செய்தது. இதே பாணியில் தொடர்ந்து வித்தவுட் லிமிட்ஸ் என்ற படமும் வெளியானது.

ம்யூனிக்

ஜெர்மனியின் ம்யூனிக் நகரில் 1972-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வந்திருந்த இஸ்ரேலிய வீரர்கள், பாலஸ்தீன தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் ஹாலிவுட் படங்கள் கணிசமாக எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் யூதரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரித்து இயக்கிய ‘ம்யூனிக்’ திரைப்படம் முதன்மையானது. 11 யூத விளையாட்டு வீரர்கள் சாவுக்கு காரணமான தீவிரவாதிகளை உலகம் முழுக்க தேடித்தேடி அழித்தொழிக்கும் இஸ்ரேலின் மொஸாட் உளவுக்குழு ரகசிய நடவடிக்கை பின்னணியில், தீவிரவாதத்துக்கு எதிரான அரசின் பயங்கரவாதத்தையும் அமைதியாக இப்படம் தோலுரித்தது.

மேரி கோம் (2014)

இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம் உலக மகளிர் குத்துச்சண்டை போட்டிகளில் தொடர்ச்சியாக 5 தங்கம் வென்றதோடு, லண்டன் (2012) ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார். இரண்டு குழந்தைகளின் தாயாக மணிப்பூரிலிருந்து ஒலிம்பிக் வரையிலான மேரி கோமின் கதை, அவரது பெயரிலேயே 2014-ல் படமானது. மேரி கோமாக பிரியங்கா சோப்ரா நடித்த வகையிலும் இந்த இந்தி படம் கவனம் ஈர்த்தது. வணிக ரீதியிலும் எதிர்பார்ப்புகளை ஈடுசெய்தது.

பாக் மில்கா பாக் (2013)

ரோம் (1960) ஒலிம்பிக்கில் நூலிழையில் வெண்கலத்தை பறிகொடுத்த இந்திய தடகள வீரரான மில்கா சிங் குறித்து, இந்திய-பாகிஸ்தான் பிரிவினையில் தொடங்கி இந்தியாவின் நிறைவேறாத ஒலிம்பிக் தடகள வெற்றி வாய்ப்பு வரை பேசும் படம் இது. ஜோக்குகளுக்கு அப்பாலும் ‘பறக்கும் சீக்கியர்’ என புகழ் பெற்றவர் மில்கா சிங். மில்காவின் தந்தை உயிர் அச்சத்தில் ‘ஓடு மில்கா ஓடு’ என்று விரட்டியது முதல் ஒலிம்பிக் வரை ஆதிக்கம் செலுத்தியதை இந்த இந்தி படம் பிரதிபலிக்கும்.

Next Story