குடிசை வீட்டு இளவரசியின் மாடலிங் கனவுகள்


குடிசை வீட்டு இளவரசியின் மாடலிங் கனவுகள்
x
தினத்தந்தி 1 Aug 2021 5:23 PM GMT (Updated: 1 Aug 2021 5:23 PM GMT)

சமூகவலைத்தளங்கள் மூலம் ஒரே இரவில் வைரலாகி உலகின் கவனத்தை தங்கள் வசப்படுத்துபவர்களின் பட்டியலில் இணைந்திருக்கிறார், மலிஷா கார்வா. 13 வயதாகும் இவர் மும்பையின் கடற்கரை பகுதியான பாந்த்ராவில் உள்ள குடிசை பகுதியில் வசித்து வருகிறார்.

‘மும்பையின் குடிசை பகுதி இளவரசி’ என்று செல்லமாக அழைக்கப்படும் மலிஷாவுக்கு மாடலிங் மீது ஈர்ப்பு உண்டாகி இருக்கிறது. தான் ஒரு ‘சூப்பர் மாடல்’ ஆக மாறவேண்டும் என் பதுதான் மலிஷாவின் கனவு. அதற்கு உயிர் கொடுத்து கொண்டிருக்கிறார், பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ஹாப்மேன். மலிஷாவை தனது வளர்ப்பு மகளாக அறிவிக்கும் அளவுக்கு இருவருக்கும் இடையேயான உறவு பந்தம் வலுப்பட்டிருக்கிறது.

மலிஷாவின் தந்தை தொழில் நிமித்தமாக குஜராத்தில் வசித்து வந்திருக்கிறார். மலிஷாவின் குழந்தை பருவ நாட்கள் அங்குதான் கழிந்திருக்கிறது. சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு இருந்து மும்பைக்கு குடி பெயர்ந்திருக்கிறார்கள். தனது காலனிக்கு அருகில் உள்ள அரசு பள்ளியில் மலிஷா படித்து வருகிறார்.

படிப்பின் மீது முழு கவனம் செலுத்துபவர் சரளமாக ஆங்கிலம் பேசும் அளவுக்கு மொழி புலமையை வளர்த்து கொண்டிருக் கிறார். அவர் பேசும் ஆங்கிலத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருக்கிறவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். ஆங்கில வார்த்தை களை உச்சரிக்கும்போது அவரது முக பாவனைகள் விதவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. அத்தகைய சரளமான ஆங்கில உச்சரிப்புதான் ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ஹாப்மேனின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ஹாப்மேன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்புக்காக மும்பை வந்திருக்கிறார். இசை சார்ந்த வீடியோவை படமாக்குவது அவரது திட்டமாக இருந்திருக்கிறது. அந்த சமயத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அவரால் நாடு திரும்ப முடியவில்லை. மும்பையில் தங்கியவர் பாந்த்ராவுக்கு சென்றபோது மலிஷாவை சந்தித்து பேசி இருக்கிறார்.

மலிஷா பேசிய சரளமான ஆங்கில உச்சரிப்பு இருவருக்குமிடையேயான தகவல் தொடர்பை எளிமையாக்கிவிட்டது. மலிஷாவின் முக பாவனையும், அப்பாவித்தனமும் ஹாப்மேனுக்கு பிடித்து போகவே அவரை வைத்தே போட்டோஷூட் எடுக்க தீர்மானித்தார். மலிஷாவை விதவிதமான போஸ்களில் புகைப்படம் எடுத்து அழகு பார்த்தவர், அவர் தொழில்முறை மாடலிங் ஆவதற்கான தகுதியை வளர்த்துக்கொள்வதற்கு பக்கபலமாக இருக்கிறார்.

மலிஷா பெயரில் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தை உருவாக்கி, அதில் மலிஷாவின் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். மலிஷாவின் குழந்தைத் தனமும், இயல்பான வாழ் வியல் முறையும் ஒரே இரவில் அவரை பிரபலமாக்கிவிட்டது. தனது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை யதார்த்தமாக வீடியோக்கள் எடுத்து பதிவிட்டு வருகிறார். யூடியூப், இன்ஸ்டாகிராமில் அவரை ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள். வீடியோ, படங்களை பார்வையிடுகிறார்கள். அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹாப்மேனே நிர்வகித்து வருகிறார்.

மலிஷாவுக்கு ‘குடிசை வாழ் இளவரசி’ என்றும் பெயர் சூட்டி இருக்கிறார். மலிஷாவின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக #கோ பண்ட் மீ என்ற பெயரில் நிதி திரட்டும் இணையத்தையும் நடிகர் ஹாப்மேன் உருவாக்கி இருக்கிறார். மலிஷா மாடலாக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற குறைந்தபட்சமாக 15 லட்சம் ரூபாய் இலக்கு நிர்ணயித்து இருக்கிறார். மேலும், ஹாப்மேன், மலிஷாவை தனது வளர்ப்பு மகள் என்றே அழைக்கிறார்.

மலிஷாவிடம் உள்ளூர் மொழியில் சரளமாக பேசுவதற்காக இந்தியும் கற்றுக்கொண்டு வருகிறார். அவருக்கு மலிஷாவே இந்தி ஆசிரியராக மாறி இருக்கிறார். இருவரும் சேர்ந்து அன்றாட வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படுகின்றன. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

13 வயதிலேயே பிரபலமாகி இருக்கும் மலிஷாவின் முகத்தில் எப்போதும் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தாலும், குடும்பத்தில் வறுமை குடிகொண்டிருக்கிறது. ‘‘இப்போது சமூகத்தில் எனக்கென்று ஒரு அடையாளம் கிடைத்திருக்கிறது. இருப்பினும் நான் குடிசை பகுதியிலேயே வாழ விரும்புகிறேன். என் குடும்பம் இங்குதான் இருக்கிறது. அவர்களுடன்தான் வாழ விரும்பு கிறேன். கடின உழைப்பும், அதிர்ஷ்டமும் கைகொடுத்து நான் மாடலாக வளர்ந்தால், நிச்சயமாக என் குடும்பத்தை இந்த சோகமான வாழ்க்கையில் இருந்து மீட்டெடுப்பேன்’’ என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.

Next Story