‘ஆதார்’ படத்தை எதிர்க்கும் ஆதார் அமைப்பு


‘ஆதார்’ படத்தை எதிர்க்கும் ஆதார் அமைப்பு
x
தினத்தந்தி 1 Aug 2021 5:29 PM GMT (Updated: 1 Aug 2021 5:29 PM GMT)

ஆதார்.. இந்த அடையாள அட்டை இந்தியாவில் முக்கியத்துவம் பெற்றதாக மாறிவிட்டது. ஆதார் அடையாள அட்டை இல்லாமல், அரசாங்கத்திடம் இருந்து மக்கள் எந்த சலுகைகளையும் பெற முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொண்ட ஆதார் அடையாள அட்டையை மையமாக வைத்து, பாலிவுட்டில் ஒரு படம் தயாராகி இருக்கிறது.

இந்தப் படத்தை பெங்காலியில் பல வெற்றிப்படங்களை இயக்கிய சுமன்கோஷ் இயக்கியிருக்கிறார். பேராசிரியர், பொருளாதார நிபுணர், திரைப்பட இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட இவர், பெங்காலியில் இயக்கிய முதல் படமே தேசிய விருதைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து சுமன்கோஷ் 9 பெங்காலி படங்களை இயக்கினார். இதில் சில படங்கள், வெளிநாடுகளில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளன. 10-வதாக ‘ஆதார்’ என்ற திரைப்படத்தை, இந்தியில் இயக்கினாா். இந்தப் படம் 2019-ம் ஆண்டே தயாராகி விட்டது. அந்த வருடம் அக்டோபர் மாதத்தில் பூசன் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. படத்திற்கு இணையதள விமர்சகர்கள் 10-க்கு 8 மதிப்பெண்கள் வரை வழங்கியிருந்தார்கள்.

ஆனால் இந்தப் படம் இன்னும் இந்தியாவில் வெளியாகவில்லை. படத்தை வெளியிடுவதற்கு, ஆதார் அடையாள அட்டையை வழங்கும் நிறுவனமே முட்டுக்கட்டைப் போட்டு வருவது, இயக்குனர் சுமன் கோஷை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. தணிக்கைக் குழுவினர் படத்தை பார்த்து சான்றிதழ் வழங்கிவிட்ட நிலையிலும், ஆதார் அட்டை வழங்கும் அமைப்பு, படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஆதார் அட்டை பற்றிய தவறான தகவல்கள் படத்தில் இருப்பதாக குற்றம் சாட்டும் அந்த அமைப்பு, படத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறதாம்.

ஆனால் அப்படி இருக்கும் காட்சிகளை நீக்கினால், படத்தை வெளியிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்கிறார், இயக்குனர் சுமன் கோஷ். மேலும் அவர் “ஆதார் அடையாள அட்டைக்கு ஆதரவான படத்தை, அதை வழங்கும் அமைப்பே எதிர்ப்பது ஆச்சரியமாக உள்ளது. பொதுவாக ஒரு குழுவை அமைத்து அவர்கள் படம் பார்த்து பிறகு முடிவு செய்யட்டும்” என்கிறார்.

‘திரைப்பட தணிக்கைக்குழுவே ஒப்புதல் அளித்துவிட்ட நிலையிலும், படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல.. இப்படியே செய்து கொண்டிருந்தால் நல்ல படங்களைக் கொடுக்கும் எண்ணத்தோடு வரும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மனம் உடைந்து போவார்கள்’ என்பது பாலிவுட் சினிமாத் துறையினரின் ஆதங்கமாக இருக்கிறது.

படத்தின் கதை:

வட இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில், ஆதார் அட்டை வாங்கினால் குடும்பத்திற்கு ஆகாது என்ற தவறான நம்பிக்கை இருக்கிறது. அந்த மூடநம்பிக்கையை கடந்து, அந்த கிராம இளைஞன் ஒருவன், ஆதார் அட்டையை வாங்கிவிடுகிறான். அந்த இளைஞனுக்கு திருமணமாகி மனைவி இருக்கிறாள்.

குடும்பத்தினரின் வற்புறுத்தலால் அந்த இளைஞன், கிராம பூசாரியிடம் கொண்டு போய் ஆதார் அட்டையைக் கொடுக்கிறான். அதை வாங்கி அதில் உள்ள எண்களை கூட்டி கழித்துப் பார்க்கும் பூசாரி, “இந்த எண் உன் குடும்பத்திற்கு ஆகாது உன் மனைவி இறந்துவிடுவாள்” என்று ``குறி’’ சொல்கிறாா்.

இதனால் மனம் குழம்பிய அந்த இளைஞன், தன்னுடைய ஆதார் அட்டையில் இருக்கும் எண்ணை மாற்ற முயற்சிக் கிறான். அதனால் என்ன நடக்கிறது என்பது ‘ஆதார்’ திரைப் படத்தின் கதையாக சொல்லப்பட்டிருக்கிறது.

Next Story