அன்னை தெரசா


அன்னை தெரசா
x
தினத்தந்தி 2 Aug 2021 2:57 PM GMT (Updated: 2 Aug 2021 2:57 PM GMT)

‘ஆக்னஸ் கோஞ்செ பொயாஜியூ’ என்ற இயற்பெயரைச் சொன்னாலோ, ‘கோன்ஸோ’ என்ற செல்லப் பெயரைச் சொன்னாலோ பலருக்கும் அந்தப் பெண்மணியைத் தெரியாது.

‘ஆக்னஸ் கோஞ்செ பொயாஜியூ’ என்ற இயற்பெயரைச் சொன்னாலோ, ‘கோன்ஸோ’ என்ற செல்லப் பெயரைச் சொன்னாலோ பலருக்கும் அந்தப் பெண்மணியைத் தெரியாது. அதுவே ‘அன்னை தெரசா’ என்று கூறினால், இந்த உலகத்தில் எவருக்கும் அவரைத் தெரியாமல் இருக்காது.

அந்த அளவுக்கு அன்பை மக்களிடையே விதைத்தவர். தன்னுடைய தன்னலமற்ற சேவையின் மூலமாக அனைவரின் மனதிலும் ஆழப்பதிந்தவர், அன்னை தெரசா. இவர் பிறந்தது யூகோஸ்லோவியாவில் உள்ள ஸ்கோப்ஜி நகரம். 1910-ம் ஆண்டு பிறந்த இவருக்கு, 12-வது வயதில் சமூக சேவை பற்றிய சிந்தனை உதித்தது.

ஜாம்பிரன் கோவிக் என்ற பாதிரியார் தொடங்கியிருந்த, பெண்களுக்கான சமுதாய இயக்கத்தில் 1923-ம் ஆண்டு தன்னை இணைத்துக் கொண்டார். சில நாட்களிலேயே தன்னுடைய சேவையின் மூலமாக அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார்.

இந்த நிலையில்தான் இந்தியாவின் மேற்குவங்கம் சென்று திரும்பிய சில பெண்களிடம் இந்தியாவைப் பற்றிக் கேட்டறிந்தார். அவருக்கு இந்தியாவின் மீதான கனவுகள் விரிந்தன. 1928-ம் ஆண்டு கன்னியாஸ்திரியாக மாறினார். அவர் கன்னியாஸ்திரியாக இருந்த அமைப்பு, அவரை மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு அனுப்பியது.

1929-ம் ஆண்டு மேற்குவங்கத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபையை வந்தடைந்தார். அங்குள்ள விதிப்படி அவரது பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்றனர்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தெரசா மார்ட்டின் என்பவர், ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் பணிவிடை செய்வதற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க நினைத்தவர். ஆனால் காசநோய் காரணமாக அவரது வாழ்க்கை 24 வயதிலேயே முடிந்துவிட்டது. அவரது நினைவாக தன்னுடைய பெயரை ‘தெரசா’ என்று மாற்றிக்கொண்டார்.

அது முதல் 87 வயதில் அவர் இறக்கும் தருவாய் வரை அவர் ஆற்றியத் தொண்டை இந்த நாடே அறியும். தொழு நோயாளிகள் என்றுகூட பார்க்காமல், முகம் சுளிக்காமல் அவர்களின் புண்களை சுத்தம் செய்து, அவற்றுக்கு மருந்துபோடும் அரும்பணியைச் செய்தவர், அன்னை தெரசா.

இவரது சிறப்பான சேவைக்காக இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது, பத்மஸ்ரீ விருது ஆகியவை கிடைத்துள்ளன. மேலும் அமைதிக்கான நோபல் பரிசையும் இவர் பெற்றிருக்கிறார்.

சுமார் 50 ஆண்டுகாலம் சமூகப் பணியில் ஈடுபட்டு வந்த அன்னை தெரசா, 1983-ம் ஆண்டு இருதய நோயால் பாதிக்கப்பட்டார். 1997-ம் ஆண்டு கொல்கத்தாவில் இறந்தார்.

‘கோன்ஸோ’ என்பதற்கு அல்பேனிய மொழியில் ‘சின்னஞ்சிறு மலர்’ என்று பொருள். அந்தச் சிறிய மலர் எப்போதும் மலர்ச்சியாக இருப்பதைப் போலவே, தன் வாழ்நாள் முழுவதும் சிரித்த முகத்தோடு, ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் தொண்டு செய்தவர், அன்னை தெரசா.

Next Story