ஆட்டோமேடிக் கியர் மாடலில் போர்டு பிகோ


ஆட்டோமேடிக் கியர் மாடலில் போர்டு பிகோ
x
தினத்தந்தி 4 Aug 2021 12:13 PM GMT (Updated: 4 Aug 2021 12:13 PM GMT)

அமெரிக்காவைச் சேர்ந்த போர்டு நிறுவனத்தின் பிரபல தயாரிப்புகளில் போர்டு பிகோ மாடல் மிகவும் பிரசித்தி பெற்றது.

அமெரிக்காவைச் சேர்ந்த போர்டு நிறுவனத்தின் பிரபல தயாரிப்புகளில் போர்டு பிகோ மாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நிறுவனம் இந்தியாவுக்கான மாடல்களை சென்னை அருகே மறைமலை நகரில் உள்ள ஆலையில் தயாரிக்கிறது. இங்கிருந்து அருகில் உள்ள நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிறுவனம் தனது பிரபலமான பிகோ மாடலில் ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஹேட்ச்பேக் மாடலாக வந்துள்ள இந்த காரில் டைட்டானியம் மற்றும் டைட்டானியம் பிளஸ் ஆகிய இரண்டு மாடலும் ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்டதாக அறிமுகமாகியுள்ளது. டைட்டானியம் மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.7.75 லட்சம். டைட்டானியம் பிளஸ் மாடலின் விலை சுமார் ரூ.8.20 லட்சம். இப்புதிய பிகோ மாடலில் 6 கியர்கள் உள்ளன. பாதுகாப்புக்கு இதில் 6 ஏர் பேக்குகள் உள்ளன. டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஹில் லாஞ்ச் அசிஸ்ட் போன்ற வசதிகளும் இதில் உள்ளது.

இது 96 பி.எஸ். திறனையும், 119 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். மழை உணர் சென்சார் கொண்ட வைபர், பேட்டரியில் இயங்கும் ரியர் வியூ மிரர், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் பக்கவாட்டுப் பகுதியிலும் ஏர் பேக் இருப்பது கூடுதல் பாதுகாப்பாக உள்ளது. வெள்ளை, சிவப்பு, சில்வர், கிரே உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கும்.

போர்டுபாஸ் செயலி இணைப்பு வசதியும் கொண்டது. இந்த செயலி மூலம் காரின் கட்டுப்பாடுகள் சிலவற்றை மேற்கொள்ள முடியும். காரை ஸ்டார்ட் செய்வது, நிறுத்துவது, கார் இருப்பிடத்தை அறிந்துகொள்வது உள்ளிட்ட வசதிகள் உள்ளன. 1 லட்சம் கி.மீ. மற்றும் 3 ஆண்டு உத்திரவாதம் அளிக்கப்படும். கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் போர்டு இணையதளம் மூலம் இந்தக் காருக்கு முன்பதிவு செய்யலாம். வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே டெலிவரி தரப்படும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story