காந்தியடிகளின் தமிழ் பற்று


காந்தியடிகளின் தமிழ் பற்று
x
தினத்தந்தி 15 Aug 2021 9:16 AM GMT (Updated: 15 Aug 2021 9:16 AM GMT)

மகாத்மாவாக அறியப்படாத காலத்தில் இருந்தே தமிழ் மக் களுடனும் தமிழ்நாட்டோடும் தொடர்பில் இருந்தார் காந்தியடிகள்.

மகாத்மாவாக அறியப்படாத காலத்தில் இருந்தே தமிழ் மக் களுடனும் தமிழ்நாட்டோடும் தொடர்பில் இருந்தார் காந்தியடிகள். அவர் 1986-ம் ஆண்டு முதல் 1946-ம் ஆண்டு வரை, 20 முறை தமிழகத்திற்கு வந்து இருக்கிறார். ‘தம்முடைய தலைமையில் நடைபெறும் அகிம்சை போராட்டத்துக்கு உறுதுணையாக தமிழ் மக்கள் இருப்பார்கள்’ என்ற நம்பிக்கை காந்தியடிகளிடம் இருந்தது. அதனால் தான் தமிழகத்துக்கு அடிக்கடி வந்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சில முக்கிய முடிவுகளை தமிழக பயணத்தின் போது தான் காந்தியடிகள் எடுத்தார்.

1921-ம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்துக்காகவும், 1927-ம் ஆண்டு கதர் இயக்கத்துக்காகவும், 1934-ம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு இயக்கத்திற்காகவும் தமிழக பயணத்தை மேற்கொண்ட போது, அவை எல்லாவற்றிலும் தன்னை முதன்மைப்படுத்தி கொண்டது தமிழகம்.

“அசைக்க முடியாத நம்பிக்கையோடு, எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல், உணர்வூட்டி என்னை திறமையாக வழிநடத்தியவர்கள். ஆகையால் தமிழர் கூட்டம் ஒன்றுக்கு வரும் போது ரத்த பாசம் உள்ள உறவினர்களின் கூட்டத்துக்கு வருவதாகவே நான் உணர்கிறேன்” என காந்தியடிகள் கூறியுள்ளார்.

தமிழர்களுக்கு தான் என்ன கைமாறு செய்வது என யோசித்த காந்தி தமிழ் மொழியை கற்றுக்கொண்டு அவர்களின் தாய்மொழி யில் பேசவாவது செய்யலாம் என்று முடிவெடுத்து தமிழ் எழுத, படிக்க கற்றுக் கொண்டார்.

தமிழர்களோடு அவருக்கு ஏற்பட்ட பந்தம் ஏறத்தாழ 55 ஆண்டு கள் தொடர்ந்திருந்தன. காந்தியடிகளுக்கு தென்ஆப்பிரிக்காவில் உறுதுணையாக இருந்தவர் வின்சென்ட் லாரன்ஸ். இவர் சென்னையில் உள்ள ஜார்ஜ்டவுன் பகுதியில் பிறந்து வளர்ந்தவர். 6 வருடங்கள் காந்திக்கு தனி உதவியாளராக பணியாற்றியவர். இவரால்தான் காந்திக்கு தமிழர் பற்றிய அறிமுகம் கிடைத்தது. மற்றொரு உதவியாளர் ஜோசப் ராயப்பன் என்கிற தமிழர்.

முதல் முறையாக 1896-ம் ஆண்டு சென்னை வந்த போதே, தமிழை கற்று கொள்ள வேண்டும் என்பதற்காக சென்னை அண்ணாசாலையில் உள்ள புத்தக கடையில் தமிழ் புத்தகங்களை 5 ரூபாய்க்கு வாங்கி சென்றார் காந்தியடிகள். அப்போது அவருக்கு வயது 27 தான்.

காந்தியடிகள் என்று சொன்னவுடன் அனைவருடைய மன திலும் நிற்கும் உருவம் இடுப்பில் ஒரு வேட்டியும், மேலே ஒரு துண்டும்தான். இந்த எளிமையான உடைக்கு காந்தியை மாற்றியது மதுரை. இந்த சம்பவம் நடந்தது 1921-ம் ஆண்டு.

மதுரை மேலமாசி வீதியில் காந்தியடிகள் தங்கியிருந்த அந்த வீடு இப்போது கண்காட்சி கூடமாக பாதுகாக்கப்படுகிறது. காந்தியடிகள் தன் 78 வருட வாழ்க்கையில் 6 முறை மதுரைக்கு வந்து இருக்கிறார். 13 நாட்கள் மதுரையில் தங்கி இருந்தார்.

வன்னீர்வலசு என்ற கிராமம் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இருந்து பழனி செல்லும் வழியில் உள்ளது. 2 மைல் உள்ளே செல்ல வேண்டும். அங்கு ஒரு அரிஜன குடி யிருப்பு இருந்தது. அங்கு 2 மைல் தூரம் காந்தியடிகள் நடந்து செல்ல கூட முடியாத அளவு இருந்தது.

இதை அறிந்த தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக வேலை செய்து வந்த அப்பாவு என்பவர் மனம் தளரவில்லை. 10 நாட் களுக்குள் 2 மைல் தூரம் பாதை ஏற்படுத்தி கொடுத்தார். 1934-ம் ஆண்டு அந்த புதிய சாலையில் காந்தியடிகள் காரில் பயணித்து வன்னீர்வலசு கிராமத்தை அடைந்தார். இதை பற்றி ‘அரிஜன’ நாளிதழில் ‘மாதிரி கிராமம்’ என்று வன்னீர்வலசை குறிப்பிட்டு தலையங்கமே எழுதி இருக்கிறார் காந்தியடிகள்.

1919-ம் ஆண்டு தமிழகம் வந்த போது ராஜாஜி குடியிருந்த வீட்டில் தான் காந்தியடிகள் தங்கியிருந்தார். அப்போது, மகா கவியும், மகாத்மாவும் சந்தித்துப் பேசிக்கொண்டனர்.

Next Story