விதை இல்லாத எலுமிச்சைக்கு கிடைத்திருக்கும் மவுசு


விதை இல்லாத எலுமிச்சைக்கு கிடைத்திருக்கும் மவுசு
x
தினத்தந்தி 22 Aug 2021 3:58 PM GMT (Updated: 22 Aug 2021 3:58 PM GMT)

எலுமிச்சம் பழங்களிலேயே வித்தியாசமான ரகம் ஒன்று அசாம் மாநிலத்தில் விளைவிக்கப்படுகிறது. அங்குள்ள சிராங் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பன்பாரி கிராமத்தில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் இந்த எலுமிச்சை ‘காஜி நெமு’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த எலுமிச்சையில் விதை இருப்பதில்லை.

‘இது எலுமிச்சம் பழம் தானா?’ என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அதன் வடிவமும் மாறுபட்ட தோற்றத்தை கொண்டிருக்கிறது. வெளிர் பச்சை நிறத்தில் நீள் வட்ட வடிவில் காட்சி தருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இந்த கிராம விவசாயிகள் 1200 கிலோ வரை இந்த எலுமிச்சை ரகத்தை விளைவித்திருக்கிறார்கள். இது எலுமிச்சை ஜூஸ் மற்றும் சமையலில் மட்டுமின்றி மருந்து பொருட்கள் தயாரிப்புகளிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் உள்ளூர் மார்க்கெட்டில் ஒரு பழத்தின் விலை ஒரு ரூபாய் என்ற அளவிலேயே விற்கப்படுகிறது.

இதனால் உரிய விலை கிடைக்காமல் வேதனையில் இருந்த விவசாயிகளுக்கு வெளிநாட்டு வணிகம் மன ஆறுதல் அளித்திருக்கிறது. இங்கிருந்து இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் இயங்கும் சர்வதேச சந்தைக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. லண்டனுக்கு ஒரு பழத்தை 2 ரூபாய் 50 காசு என்ற விலையில் விற்பதற்கு பன்பாரி கிராம விவசாயிகள் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அதனால் இந்த எலுமிச்சை ரகத்துக்கு ஓரளவு விலை கிடைத்திருப்பதுடன் அதிக அளவில் விளைச்சல் செய்வதற்கும் வழிவகை ஏற்பட்டுள்ளது.

‘‘வழக்கத்துக்கு மாறாக நீள் வட்ட வடிவமுள்ள இந்த எலுமிச்சையில் மற்ற ரகத்தைவிட சாறும் அதிகமாக இருக்கும். இது அசாமின் பாரம்பரிய உணவுகளில் வழக்கமாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான கிராம மக்கள் தங்கள் வீட்டின் பின் பகுதியில் இந்த எலுமிச்சை மரத்தை வளர்க்கிறார்கள். எங்கள் மாவட்டத்தில் மட்டும் சுமார் 800 விவசாயிகள் 300 ஹெக்டேர் பரப்பளவில் இந்த ரகத்தை வளர்க்கிறார்கள்.

இந்த எலுமிச்சை விதை இல்லாதது மட்டுமின்றி நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாது. தனித்துவமான வாசனையும், சுவையும் கொண்டது’’ என்கிறார், அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி உபேந்திரா போரோ. இவர் இயற்கை விவசாயம் சார்ந்த நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

லண்டனுக்கு இந்த ரகத்தை ஏற்றுமதி செய்யும் விவசாயிகளில் உபேந்திராவும் ஒருவர். ஆரம்பத்தில் ரசாயன உரங்களை பயன்படுத்தியே விவசாயம் செய்து வந்திருக்கிறார். 2016-ம் ஆண்டு முதல் இயற்கை விவசாயத்துக்கு மாறிவிட்டார். விவசாய திட்டங்கள், அரசு வழங்கும் மானியங்கள் குறித்து விவசாயிகளிடம் விளக்கி நிறைய பேரை இயற்கை விவசாயம் மேற்கொள்ள வைத்திருக்கிறார். அதுசார்ந்த கள பயிற்சியும் வழங்குகிறார்.

2019-ம் ஆண்டு முதல் முதலாக இந்த அசாம் ரக எலுமிச்சை துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டபோது அங்கு நல்ல வரவேற்பை பெற்றது. வழக்கமான எலுமிச்சை ரகங்களுடன் ஒப்பிடும்போது இது அளவில் பெரியது. ஒரு மரத்தில் 200 எலுமிச்சை வரை விளையும்.

‘‘இந்த எலுமிச்சையை 30-32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்து வைத்தால் ‘பிரஷ்ஷாகவே’ காட்சி அளிக்கும். ஒரு மாதம் வரை நிறமும் மாறாமல் அப்படியே இருக்கும். போதிய சந்தை வாய்ப்புகள் இல்லாததால் நியாயமான விலை கிடைக்காத நிலை இருந்தது. இப்போது சர்வதேச ஒப்பந்தங்கள் சாதகமாக அமைந்திருப்பதால் விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம்’’ என்கிறார் மற்றொரு விவசாயி மதன்.

Next Story