பறவைகளின் வாழ்வாதாரமும் முக்கியம்


பறவைகளின் வாழ்வாதாரமும் முக்கியம்
x
தினத்தந்தி 26 Aug 2021 3:49 PM GMT (Updated: 26 Aug 2021 3:49 PM GMT)

‘பறவைகள், நம் வாழ்வியலில் முக்கியப் பங்காற்றுகின்றன. இயற்கை சுற்றுச் சூழலின் ஆரோக்கியத்திற்கும் பறவைகள் பேருதவி செய்வதாக ஆய்வுகள் சொல்கின்றன. நம்முடைய சுற்றுச்சூழலில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால், அவற்றை உணர்த்தும் உயிரினமாக பறவை இருக்கிறது. பறவைகளின் இருப்பும், இல்லாமையும், நாம் சுற்றுச்சூழலின் மீது எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும் என்பதை மறைமுகமாக சொல்பவை’ என்கிறார்கள்.

உலகத்தில் மொத்தம் 867 இந்திய பறவை இனங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை அழியும் நிலையிலும், ஒரு சில பறவைகளே பெருகும் வகையிலும் இருப்பதாக ஆய்வு களில் கணக்கிடப்பட்டுள்ளன. 300-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அழியும் தருவாயில் உள்ளதாகவும், 20-க்கும் குறைவான பறவை இனங்களே பெருகும் நிலையில் உள்ளதாகவும் சொல்கிறார்கள். இதற்கு, பறவைகளின் வாழ்விடங்கள் அழிந்து போவதும், அவற்றுக்கு உணவு பற்றாக்குறை இருப்பதும்தான் காரணம் என்கிறார்கள். பறவைகளின் வாழ்விடம் என்றால், அது பெரும்பாலும் மரங்கள்தான். அந்த வகையில் மரங்களின் அழிவு, பறவைகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் பேராபத்தை விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதனால்தான் பறவைகள் எண்ணிக்கை குறைந்தால், அது மனித வாழ்விலும் பிரதிபலிக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கழுகுகள், புலம்பெயரும் கடலோரப் பறவைகள், நீண்ட சிறகுகளைக் கொண்ட கடற்பறவைகள், ஆலாக்கள், வனங்களிலும், புல்வெளிப்பகுதியிலும் வசிக்கும் பறவைகள், சமவெளிப்பகுதிகளில் புலம்பெயரும் பறவைகள், மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் பறவை இனங்கள், ஊனுண்ணி பறவை போன்ற இனங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பறவை களின் பட்டியலில் உள்ளன. பறவை பாதுகாவலர்கள் இந்த பறவைகளின் பட்டியலை, அதிக கவனம் தேவைப்படும் பறவைகள், குறைவாக கவனம் கொள்ளப்பட வேண்டிய பறவை இனங்கள் என்று பிரித்துள்ளனர். இதில் மிகவும் அருகி வரும் பறவை இனங்களாக இந்திய பிணந்தின்னிக் கழுகு, கல்பொறுக்கி உப்புக்கொத்தி, கர்லூ உள்ளான், லீப் வார்பிலர், ரிச்சர்ட் நெட்டைக்காலி போன்ற இனங்கள் இருக்கின்றன. அதே போல் பெருகி வரும் பறவை இனங்களும் பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றில், சோளப்பட்சி, புறா, அன்றில், கதிர்க்குருவி, சாம்பல் கதிர்க்குருவி, இந்திய மயில் போன்றவை வருகின்றன.

தமிழக அளவிலும் 100-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அழிவுநிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றுள் 19 பறவைகளின் மீது அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆய்வுகள் கூறுகிறது. அதில் முக்கியமானது வீட்டுக்குருவி எனப்படும் சிட்டுக்குருவி இனம். அவைத் தவிர மிகவும் அழிவு நிலையில் இருக்கும் பறவைகளாக நீலகிரி சிரிப்பான், நீலகிரி நெட்டைக்காலி, நீலகிரி சோளக்கிளி, தென்னிந்திய பிணந்தின்னிக் கழுகு, காஷ்மீர் ஈபிடிப்பான், சிவப்பு கழுத்து வல்லூறு போன்றவை முக்கியமானவை.

வெறும் பறவைகள் தானே என்று நினைக்காமல், அவை மனித வாழ்வியலோடு சம்பந்தப்பட்டது என்ற அடிப்படையில் இவற்றை காப்பாற்ற, அரசும் மக்களும் முன்வர வேண்டும்.

Next Story