தலைமுறைகளாக தொடரும் மர சிற்பக்கலை


தலைமுறைகளாக தொடரும் மர சிற்பக்கலை
x
தினத்தந்தி 29 Aug 2021 3:15 PM GMT (Updated: 29 Aug 2021 3:15 PM GMT)

பண்டைய கால பாரம்பரிய அடையாளங்களை தாங்கி நிற்கும் கட்டிடங்கள், இன்றளவும் பொலிவு மாறாமல் உயிர்ப்புடன் காட்சி அளிப்பதற்கு அதில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்ப வேலைப்பாடுகள்தான் காரணம். முன்னோர் செதுக்கி வந்த சிற்ப கலையை தலைமுறை தலைமுறையாக பேணி பாதுகாத்து வரும் சிற்பக்கலைஞர்கள், கலைநயம் மாறாமல் தங்கள் சிற்ப வடிவமைப்புகளை தத்ரூபமாக அதே பொலிவுடன் மிளிரவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுள் 13-வது தலைமுறையாக சிற்பங்கள் வடிக்கும் குடும்பம் ஒன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகையில் வசித்து வருகிறது. மர சிற்ப கலைஞர்களான இவர்கள் கோவில்களுக்கு தேர், சாமி சிலைகள், ரதங்கள் போன்றவற்றை செய்து கொடுத்து வருகின்றனர். இவர்களின் கைவண்ணங்களில் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து கொண்டிருக்கும் தங்கள் சிற்ப பணி பற்றி பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோவில் ஸ்தபதி ரங்காச்சாரி சொல்கிறார்.

‘‘கடந்த 1947-ம் ஆண்டு என்னுடைய தாத்தா குப்பாச்சாரி திருப்பதி கோவிலுக்கு தேர் செய்து கொடுத்தார். திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில், தட்டாம்பாளையம் மாரியம்மன், கருப்பூர் முத்துமாரியம்மன், திருக்கோவிலூர் உலகளந்தபெருமாள் கோவில், பரனூர் கோலாகல கோவில், காங்கிருப்பு அங்காளம்மன், மேல்மலையனூர் அங்காளம்மன், திருவம்பட்டு, செஞ்சி, புதுச்சேரி வரதராஜபெருமாள் கோவில், விலங்கல்பட்டு முருகன்கோவில், திருக்கடையூர் கல் சிற்பம் போன்றவை எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தயார் செய்து கொடுத்தவை. என்னுடைய தந்தை ராஜாமணி 85 வயதிலும் எங்களுக்கு பக்க பலமாக இருந்து சிற்ப நுணுக்கங்களை கற்றுக்கொடுத்து வழிகாட்டிக்கொண்டிருக்கிறார். அவரும் பல்வேறு கோவில்களுக்கு தேர் செய்து கொடுத்து இருக்கிறார்’’ என்பவர் மர சிற்பங்களை செதுக்குவதில் இருக்கும் சவால்களை விளக்குகிறார்.

‘‘மற்ற சிற்பங்களை போல் மர சிற்பங்களை அவ்வளவு எளிதாக செதுக்கி விட முடியாது. 5 வகையான தாளங்கள் இருந்தால் தான் சிற்பம் அதன் முழு வடிவத்தை பெறும். அதாவது தச தாளம், நவ தாளம், அஷ்ட தாளம், சப்த தாளம், பஞ்ச தாளம் ஆகிய 5 தாளங்களும் மிக முக்கியம். தச தாளம் சிவபெருமான், பெருமாள் சிலைகளில் இடம்பெற்றிருக்கும். நவ தாளம் அனைத்தும் அம்மன் சிலைகளில் இருக்கும். அஷ்ட, சப்த தாளங்கள் சுப்பிரமணியர், ஸ்கந்தர், முருகன் சிலைகளில் காணப்படும். பஞ்ச தாளம் விநாயகர் சிலைகளில் இருக்கும்.இதுதவிர அன்ன, கஜ, சிம்ம, சூரிய, சந்திர பிரபை, குதிரை, பஞ்ச, பூத, கைலாய, கிளி, காமதேனு, கற்பக விருட்சிகம், மூஷிகம், புலி போன்ற பல்வேறு வகையான வாகனங்களையும், ரதங்களையும் தயார் செய்து கோவில்களுக்கு வழங்கி வருகிறோம்’’ என்பவர் சிலை, தேர் வடிப்பதற்கான மரங்களை பல இடங்களில் இருந்து வரவழைக்கிறார்.

‘‘எல்லா மரத்திலும் சிலை, தேர்களை உருவாக்கி விட முடியாது. அதற்கென பிரத்யேக மரங்கள் உள்ளன. குறிப்பாக மாவலிங்க மரம், அத்திமரம், வேங்கை, தேக்கு, கருவை ஆகியவற்றில் தான் சிற்ப படைப்புகளை செதுக்க முடியும். இலுப்பை, நல்வாகை மரத்தில்தான் தேர்களை அதிக அளவில் செய்து வருகிறோம். சிவகங்கை போன்ற ஒரு சில இடங்களில் மருத மரத்திலும் தேர்கள் செய்யப்படுகின்றன’’ என்பவரின் பேச்சில் மர சிற்ப தொழில் நலிவடைந்து வரும் வேதனை வெளிப்படுகிறது. கொரோனா காலகட்டம் இவர்களின் வாழ்வாதாரத்தையும் முடக்கி இருக்கிறது.

‘‘ஆரம்ப காலத்தில் எங்கள் குடும்பத்தில் 100-க்கும் மேற்பட்டோர் மர சிற்ப வேலையில் ஈடுபட்டனர். நாளுக்கு நாள் மர சிற்ப தொழில் நலிவடைந்து வருவதால் பலர் மாற்று தொழிலுக்கு மாறி விட்டனர். இதனால் இந்த தொழில் வீழ்ச்சி அடைந்து வருகிறது. தற்போது மிக குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே மர சிற்ப தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். திருவிழா சமயங்களில் குடும்பம், குடும்பமாக வீடுகளில் சாமி சிலைகள் செய்யும் பணி விறு, விறுப்பாக நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த கொரோனா காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம்.

கோவில்கள் மூடப்பட்டு இருந்ததால், சிற்ப வேலைகள் எதுவும் நடைபெறவில்லை. ஏற்கனவே ஆர்டர் கொடுத்த வேலைகளையும் முடிக்க முடியாமல் சிரமப்படும் சூழல் உருவானது. எங்களுக்கு வங்கியில் கடன் தர மறுக்கிறார்கள். இதனால் வட்டிக்கு கடன் வாங்கி செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். எங்களை போன்ற மர சிற்ப கலைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றிட தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். வங்கியில் கடன் வழங்க வழிவகை செய்ய வேண்டும்’’ என்றார்.


Next Story