அங்கீகாரம் அளிக்கப்படாத பெண் விவசாயிகள்


அங்கீகாரம் அளிக்கப்படாத பெண் விவசாயிகள்
x
தினத்தந்தி 31 Aug 2021 3:32 PM GMT (Updated: 31 Aug 2021 3:32 PM GMT)

நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை துறையின் பங்களிப்பு முக்கியமானது. 70 சதவீதம் பேர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயம் தொடர்புடைய தொழில்களையே சார்ந்திருக்கிறார்கள். பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் வருமானம் ஈட்டுவதற்காக கிராமங்களை விட்டு நகரங்களுக்கு இடம் பெயர்கிறார்கள்.

அதனால் பெண்கள்தான் குடும்ப பொறுப்புகளை சுமக்கும் நிலை இருக்கிறது. அத்துடன் தங்கள் குடும்பம் வசம் இருக்கும் விவசாய நிலங்களை நிர்வகிக்கவும் செய்கிறார்கள்.அப்படி விவசாயத்தில் ஈடுபடும் பெண்களின் பங்களிப்பு 78 சதவீதமாக இருப்பதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. ஒட்டுமொத்த விவசாய பணிகளில் 70 சதவீதம் பெண்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது. கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை, மீன் வளர்ப்பு போன்ற விவசாயம் சார்ந்த வேலைகளில் பெண்கள்தான் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுகிறார்கள்.இவை கிராமப்புற விவசாய வளர்ச்சியில் பெண்கள் முக்கிய பங்கு வகிப்பதை சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும் விவசாய பொருளாதாரத்தை பொறுத்தமட்டில் பெண்களின் பங்களிப்பு இன்னும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறது. அதாவது பாலின பாகுபாடு நடைமுறைகள் விவசாய துறையையும் விட்டுவைக்கவில்லை. விவசாயத்தில் ஆண்களை விட அதிகமாகவே பெண்களின் பங்களிப்பு இருந்த போதிலும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத நிலையே இருக்கிறது.

‘‘ஆண்களை போல் பெண்களையும் சம அளவில் விவசாய வளங்களை அணுக வைத்தால் விவசாய உற்பத்தி 30 சதவீதம் அதிகரிக்கும். இதன் விளைவாக, நாட்டின் மொத்த விவசாய உற்பத்தி 4 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும். இரவில் பசியுடன் தூங்குபவர்களின் எண்ணிக்கை 12 முதல் 17 சதவீதம் வரை குறையக்கூடும்’’ என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு கூறுகிறது.மற்றொரு அமைப்பு தனது ஆய்வறிக்கையில், ‘இந்தியாவில் முழுநேர விவசாயப் பணியாளர் களில் 75 சதவிகிதம் பெண்கள் உள்ளனர். நாட்டின் வருடாந்திர மகசூலில் 60 முதல் 80 சதவீதம் வரை அவர்களின் பங்களிப்பு இருப்பதாக’ குறிப்பிட்டுள்ளது. பருவ காலத்திற்கு ஏற்ப எந்தவிதமான பயிர்களை விளைவித்தாலும், விதைப்பு முதல் அறுவடை வரை பெண்கள் சுமார் 3,300 மணி நேரம் பணி செய்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. விவசாய நடவடிக்கைகளில் ஆண்கள் 1,860 மணி நேரமே செலவிடுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் தங்கள் பெற்றோர், கணவர் அல்லது மாமியாருக்கு சொந்தமான பண்ணைகளில் உழைக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது. நாட்டில் 12.8 சதவீத பெண்கள் தங்கள் பெயரில் நிலம் வைத்திருக்கிறார்கள். உலகளவில் கிட்டத்தட்ட 400 மில்லியன் பெண்கள் விவசாய வேலைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பெண்களுக்கு சம உரிமைகள் கிடைக்காத நிலையே நீடிக்கிறது.

Next Story