ஸ்பெஷல் தோழிகள்


ஸ்பெஷல் தோழிகள்
x
தினத்தந்தி 16 Sep 2021 1:15 PM GMT (Updated: 16 Sep 2021 1:15 PM GMT)

கொரோனா பொதுமுடக்கத்தில் சிலர் தோட்டக்கலை மீது ஆர்வம் செலுத்தினர். ஒருசிலர் தங்களது பால்ய கால திறமைகளை வெளிக்கொண்டுவந்தனர்.

சிலரோ தங்களுக்குள் ஒளிந்திருந்த புதுவிதமான திறமைகளைப் பொதுமுடக்கத்தின்போதுதான் கண்டுபிடித்தனர். ஆனால், புனேவைச் சேர்ந்த ராதிகா சோனாவானே என்ற இளம்பெண் கொரோனா காலத்தை இனிமையான நாட்களாக மாற்றியுள்ளார். அவர் ஒரு நாள் வீட்டின் பால்கனியில் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தார். அப்போது கிளி ஒன்றுக்கு உணவு வைத்திருக்கிறார். அன்றிலிருந்து அந்தக் கிளி தினந்தோறும் உணவு தேடி ராதிகாவின் வீட்டிற்கு வந்திருக்கிறது. அந்தப் பெண்ணும் கிளிக்கு தினமும் இரை கொடுத்துவந்திருக்கிறார். இன்று ராதிகாவின் வீட்டில் அதிகாலையில் 30 முதல் 40 கிளிகள் வரை ஒன்று கூடி உணவு சாப்பிடுகின்றன. வீட்டின் பால்கனி பகுதி கிளிகளுக்கு உணவு வழங்கு வதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. காலையில் கிளிகளின் ‘கீச்’ குரலைக் கேட்காமல் ராதிகாவின் அன்றைய நாள் தொடங்குவதில்லை. இவர் வங்கித் துறையில் பணியாற்றி வருகிறார். ஒரு சில கிளிகள் ராதிகாவின் கையாலேயே உணவு சாப்பிடும் அளவிற்கு பழகுகின்றன. இந்தக் கிளிகள் அவரின் குடும்பத்தில் ஒரு அங்கமாக மாறிவிட்டன.

‘‘எனக்கு நிறைய தோழிகள் உண்டு. இருப்பினும் இவர்கள் எனக்கு மிகவும் ஸ்பெஷலானவர்கள். கொரோனா பொதுமுடக்கத்தின்போது, எனக்கு துணையாக இருந்தவர்கள். என்னை உற்சாகப்படுத்தியவர்கள்’’ என்று பச்சைக்கிளிகளை புகழ்கிறார், ராதிகா.

Next Story