30 நிமிடத்தில்... 134 உணவுகள்: குடும்ப தலைவியின் ருசியான சாதனை!


30 நிமிடத்தில்... 134 உணவுகள்: குடும்ப தலைவியின் ருசியான சாதனை!
x
தினத்தந்தி 16 Sep 2021 1:22 PM GMT (Updated: 16 Sep 2021 1:22 PM GMT)

‘‘30 நிமிடத்திற்குள் என்ன செய்யமுடியும்..?’’ என்ற கேள்வியை, மதுரை திருமங்கலத்தை சேர்ந்த இந்திரா ரவிச்சந்திரனிடம் கேட்டால், அவர் சொல்லி முடிக்கும் பதிலுக்கு 30 நிமிடங்கள் தேவைப்படும்.

ஆம்...! இவர், 30 நிமிடத்திற்குள், 134 வகையான உணவுகளை சமைத்து அசத்தக்கூடியவர். சமீபத்தில் அதையே சாதனையாகவும், செய்து அசத்தியிருக்கிறார்.அதை ருசியாக நம்மிடம் பரிமாறுகிறார்.

உங்களைப் பற்றி சுருக்கமாக கூறுங்கள்?

மதுரை திருமங்கலம் என் சொந்த ஊர். கணவர் கடற்படையில் பணியாற்றுவதால், இப்போது விசாகபட்டினத்தில் செட்டிலாகி இருக்கிறோம். பி.ஏ.பொருளாதாரம் முடித்திருக்கிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சமைக்க பிடிக்குமா?

சிறுவயது முதலே கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்ததால், புதுமையான உணவுகளை சமைக்க பழகியிருந்தேன். அதேசமயம், கூட்டுக்குடும்பத்திற்கு ஏற்ப, நிறைய உணவுகளை, வெகுவிரைவில் சமைக்கவும் பழகி இருந்தேன்.

சமையல் கலையில் சாதிக்கும் எண்ணம் வந்தது எப்படி?

கொரோனா பொது முடக்கத்தில்தான், அப்படியொரு எண்ணம் தோன்றியது. பொதுவாகவே, என்னால் வேகமாக சமைக்க முடியும். அதை கவனித்த என் கணவர், வேகமாக சமைப்பதை கொண்டே சாதனை படைக்க ஊக்குவித்தார்.

30 நிமிடத்தில், 134 உணவு சமைக்க முடியும் என்று நம்பினீர்களா?

(சிரிக்கிறார்) ஆரம்பத்தில் இதுகுறித்து இணையதளங்களில் தேடிப்பார்த்தோம். அப்போது, ஒருவர் 33 நிமிடங்களில், 33 உணவுகளை சமைத்ததே சாதனையாக பதிவாகி இருந்தது. அதை முறியடிக்கவே, நான் தயாராகிக் கொண்டிருந்தேன். ஆனால் ஒருசில மாதங்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த சிறுவன், 60 நிமிடத்தில் 172 உணவு வகைகளை சமைத்து, புதிய சாதனை படைத்திருந்தான். அதனால், 30 நிமிடத்தில் 86 உணவிற்கு மேல் சமைக்கவேண்டிய நிர்பந்தம் உருவானது.

சாதனைக்கு எப்படி தயாரானீர்கள்?

85 உணவுகளை சமைத்தாலே போதுமானதாக இருந்த நிலையில், நான் 100 உணவு வகைகளை சமைக்க ஆயத்தமானேன். 3 மாதங்கள், வீட்டிலேயே சாதனை முயற்சிக்கான பயிற்சி எடுத்தேன். குறிப்பாக வார இறுதி நாட்களில், எவ்வளவு வேகமாக, எத்தனை உணவுகளை சமைக்க முடியும்? என சோதித்து பார்த்துக்கொண்டேன். ஆரம்பத்தில் ஒரு மணி நேரத்தில் 36 உணவுகளே சமைக்க முடிந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக, 50, 87, 90... என உணவு வகைகளின் எண்ணிக்கை உயர்ந்தது. கூடவே என்னுடைய நம்பிக்கையும் உயர்ந்தது.

சாதனை நாளில் என்னென்ன சமைத்தீர்கள்?

16 வகையான கப் கேக்குகள், 16 வகை இட்லி, 16 வகை கொழுக்கட்டை-புட்டு உணவுகள், 12 வகையான பணியாரம், 16 வகையான தோசை-ஊத்தாப்பம், 10 வகையான பழச்சாறுகள், 10 வகையான ரைத்தா, 3 வகையான சட்னி, 3 வகையான பழ சாலட், இவை மட்டுமின்றி, மீன் வறுவல், சிக்கன் கிரேவி, ஆம்லேட், பாயசம், வடை வகைகள், பஜ்ஜி, சாண்ட்விச்.... என மொத்தம் 134 வகையான உணவுகளை, வெறும் 30 நிமிடங்களில் சமைத்து முடித்தேன். இது சாதனையாக இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்டில் பதிவாகி இருக்கிறது.

எத்தனை அடுப்புகள் பயன்படுத்தப்பட்டன?

9 அடுப்புகளை பயன்படுத்தினேன். ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு உணவு வகைகள் தயாராகிக் கொண்டிருந்தது. இதுபோக, சாலட், சாண்ட்விச், ரைத்தா, பழச்சாறு என நெருப்பின்றி சமைக்கும் உணவுகளும், விறுவிறுப்பாக தயாரானது.

ஒரு அடுப்பில், உணவு சமைப்பது என்றாலே தீக்காயம் படும். 9 அடுப்புகளை சமாளித்திருக்கிறீர்கள். ஏதாவது காயம் ஏற்பட்டதா?

பயிற்சியின் போதும் நிறைய தீக்காயங்களை பரிசாக பெற்றேன். அதேபோல, சாதனை நிகழ்விலும், ஒருசில காயங்கள் ஏற்பட்டன. இருப்பினும் ‘சாதனை’ இவை அனைத்திற்கும் மருந்து பூசியது.

அவசர கதியில் தயாரான உணவில் ருசி இருந்ததா?

30 நிமிடத்திற்குள், 134 உணவுகளை சமைத்திருந்தாலும், உணவின் சுவையிலும், தரத்திலும் அதிக கவனம் செலுத்தினேன். எல்லா உணவுகளும், உணவுக்கேற்ற ருசியுடனே தயாராகின. சாதனை நிகழ்வை பார்க்க வந்திருந்தவர்கள், உணவுகளை ருசிபார்த்து அவரவர் வீடுகளுக்கும் கொண்டு சென்றனர். அந்தளவிற்கு ருசியாகவே உணவு சமைத்தேன்.

மேலும் என்னுடைய கணவர் உணவின் ருசியில் எந்தவித சமரசமும் செய்ய அனுமதிக்கவில்லை. ஒருமுறை வீட்டில் சமைத்து பார்த்தபோது, கப் கேக்கில் சர்க்கரையின் அளவு கூடிவிட்டது. அப்போதுதான், 100-க்கும் மேற்பட்ட உணவுகளை 30 நிமிடத்திற்குள் சமைத்து முடித்து, களைத்திருந்தேன். இருப்பினும், விடாப்பிடியாக மீண்டும் கப் கேக்குகளை சமைக்க வைத்தார். சரியான சர்க்கரை சுவை கிடைத்த பிறகே, ஓய்வெடுக்க அனுமதித்தார்.

உங்களுடைய சாதனை முயற்சிக்கு, குடும்பத்தினரின் ஆதரவு கிடைத்ததா?

வீட்டில் 3 மாதம் சமையல் பயிற்சி மேற்கொண்டபோது, நிறைய பாத்திரங்கள் சேர்ந்துவிடும். சமையல் அறையும் அசுத்தமாகிவிடும். மொத்த குடும்பமும் ஒன்றிணைந்துதான், வீட்டை சுத்தமாக்குவோம். என்னுடைய கணவரின் ஊக்கமும், குழந்தைகளின் உறுதுணையும் சிறப்பாக கிடைத்தது.

எவ்வளவு செலவழித்திருப்பீர்கள்?

பயிற்சி, சாதனை முயற்சி... என ரூ.60 ஆயிரத்திற்கும் மேல் செலவாகி இருக்கும்.

30 நிமிட சமையல் என்பதில், என்னென்ன வேலைகள் அடங்கும்?

அடுப்பில் வேகவைக்கும் நேரம்தான், 30 நிமிட சமையல் நேரம். மற்றபடி, உணவு வகைகளுக்கான காய்கறி நறுக்குவது, மாவு பிசைவது, பொருட்களை எடுத்துவைப்பது, கேக்குகளுக்கான மாவு கரைப்பது, கொழுக்கட்டை மாவு பிடிப்பது... இவை எல்லாம் அந்த 30 நிமிடத்திற்குள் அடங்காது.

Next Story