அறிவியல் ஆராய்ச்சியும், அவசியமும்..!


அறிவியல் ஆராய்ச்சியும், அவசியமும்..!
x
தினத்தந்தி 16 Sep 2021 1:48 PM GMT (Updated: 16 Sep 2021 1:48 PM GMT)

அறிவியல் ஆராய்ச்சியின் அவசியத்தையும், தேவை பற்றியும் பேராசிரியர் ஆரோக்கிய ராஜ் விளக்குகிறார். இவர் தென்கொரியாவில் சியோல் நகரில் இருக்கும் செஜாங் பல்கலைக்கழகத்தில், உயிரி தொழில்நுட்ப துறையின் பேராசிரியராக பணியாற்றுகிறார். நிறைய மாணவர்களுக்கு அறிவியல் ஆராய்ச்சி பணிகளில் வழிகாட்டுகிறார்.

அறிவியல் ஆராய்ச்சிகள் ஏன் நடத்தப்பட வேண்டும்?

மனிதனின் வாழ்க்கை தரம் உயர, மனித தேவைகளை பூர்த்தி செய்ய, ஒரு கருத்தின் உண்மை தரத்தை ஆராய, ஆராய்ச்சிகள் கட்டாயமாகின்றன. அதேபோல ஒரு நாட்டை வளப்படுத்தவும், உலக அளவிலான கவனத்தை பெறவும், அறிவியல் ஆராய்ச்சிகள் உதவுகின்றன.

எவை எல்லாம், அறிவியல் ஆராய்ச்சிகளாக கருதப்படும்?

ஒரு கேள்வி, அதற்கான அறிவியல் விளக்கம், அதை நிரூபிக்கும் கூற்றுகள், அதை பல கட்டங்களாக சோதித்ததற்கான சான்றுகள், வெற்றி-தோல்வி விமர்சனங்கள், மக்களை சென்றடைதல்... இவை அனைத்தும் அடங்கியதுதான், முழுமையான ஆராய்ச்சி.

உலக அளவில் அறிவியல் ஆராய்ச்சிகள் நடக்கிறதா?

உலகளவில் நடக்கிறது என்பதைவிட, பள்ளிகள், கல்லூரிகள், தனியார் ஆராய்ச்சிக் கூடங்கள், மாநிலங்கள்-மாகாணங்கள்... இப்படி கீழ்மட்டத்தில் இருந்து, உலகின் மிகச்சிறிய நாட்டில் தொடங்கி, மிகப்பெரிய நாடு வரை பலவிதமான அறிவியல் ஆராய்ச்சிகள் நடக்கிறது.

அறிவியல் ஆராய்ச்சி பற்றிய தேவை, புரிதல், விழிப்புணர்வு இக்கால இளைஞர்களிடம் இருக்கிறதா?

தொழில்நுட்பம், அடிப்படை அறிவியல்... என ஆராய்ச்சியில் இருவகைகள் உண்டு. இதில் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிகள் மிகமுக்கியமானது.

புதுப்புது நோய்களுக்கான எதிர்ப்பு மருந்து ஆராய்ச்சி எல்லாம், இந்த அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில்தான் அடங்கும். இதற்கு அடித்தளமிடும் தாவரவியல், விலங்கியல், பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, எண்விரான்மென்டல் பயாலாஜி போன்ற அறிவியல் படிப்புகளில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. அதற்கு மாறாக, சமூக ஊடகங்களில் மூழ்கி கிடக்கின்றனர்.

இந்தியாவில் ஆராய்ச்சியும், ஆராய்ச்சியாளர்களும் ஊக்குவிக்கப்படுகிறார்களா?

யுனெஸ்கோவின் அறிவியல் அறிக்கை, இந்தியாவின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என்கிறது. ஏனெனில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஜி.டி.பி.யில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வெறும் 0.7 சதவீதம் நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இது மற்ற உலக நாடுகளைவிட, மிகமிக குறைவு.

1990-ம் ஆண்டுகளில் 10 ஆயிரம் இந்தியர்களில் 10 பேர் அறிவியல் ஆராய்ச்சியாளராக இருந்துள்ளனர். ஆனால் 2018-ம் ஆண்டு, 10 ஆயிரம் இந்தியர்களில் 11 பேர் மட்டுமே ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேசமயம் சீனாவில் 50 பேரும், ஜப்பானில் 130 பேரும், தென்கொரியாவில் 180 பேரும் ஆராய்ச்சியாளராக உருவாகி உள்ளனர். இதை ஒப்பிடுகையில், அறிவியல் மற்றும் ஆராய்ச்சி துறையில் இந்தியாவின் வளர்ச்சி பெரிய கேள்விக்குறியாகிறது.

அறிவியல் ஆராய்ச்சியை பொறுத்தவரை, உலக நாடுகளுக்கும், இந்தியாவிற்குமான வேறுபாடு என்ன?

எல்லா பள்ளிகளிலும் அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. அங்கு ஏராளமான அறிவியல் கருவிகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. அதை பார்க்கிறோம். ரசிக்கிறோம். அந்த மாணவனை பாராட்டுகிறோம். அவ்வளவுதான், அந்த அறிவியல் கருவி ஓரங்கட்டப்பட்டுவிடும்.

இதுவே வெளிநாடுகளில் நடந்திருந்தால், அந்த அறிவியல் கருவிக்கு, அந்த புதுமையான தொழில்நுட்பத்திற்கு அந்த மாணவனின் பெயரில் காப்புரிமை பெற்று தரப்படும். அதை பள்ளி-கல்லூரி நிர்வாகமே முன்னெடுத்து செய்து கொடுக்கும். இப்படி ஏராளமான புதிய தொழில்நுட்பங்களை இந்தியர்கள் உருவாக்கியும், அதற்கான உரிய காப்புரிமை இல்லாததால் வெளிநாட்டு நிறுவனங்களிடம் பறிகொடுத்திருக்கிறார்கள்.

பேராசிரியரின் பங்கு என்ன?

மாணவர்களை முறையான பாதையில் வழிநடத்துவதுதான், பேராசிரியரின் பணி. ‘புராஜெக்ட்’ உருவாக்கத்தில் தொடங்கி, அதற்கு காப்புரிமை பெறுவது, அறிவியல் அறிக்கை தயாரித்து வெளியிடுவது, சர்வதேச பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் நட்பு வட்டத்தை உருவாக்குவது, ‘பெலோஷிப்’ பணிகளுக்கு மாணவர்களை பரிந்துரைப்பது, புராஜெக்ட் மூலமாக தொழில் வளத்தை கட்டமைப்பது... என மாணவர்களை ஆராய்ச்சியாளனாக, தொழில்முனைவோராக மாற்றும் மிகமுக்கிய பொறுப்பு பேராசிரியர்களிடமே இருக்கிறது.

* அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டும் உலக நாடுகள் கொரோனா பேரிடரை கையாண்ட விதம் பற்றி கூறுங்கள்?

சீனா, கொரியா, ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் பெரும் அளவிலான ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த நாடுகள் கொரோனாவை சிறப்பாக கையாண்டன.

சுயசார்பு முறையில், ஆராய்ச்சியாளர்களை கொண்டு கொரோனா தடுப்பு பணிக்கு தேவையான கருவிகளை, உபகரணங்களை, மருந்துகளை தாங்களாகவே தயாரித்துக் கொண்டன. மிஞ்சிய பொருட்களை மற்ற உலக நாடுகளிடமும் விற்பனை செய்தன.

Next Story