சிறப்புக் கட்டுரைகள்

ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பழங்குடியின குழந்தைகள் + "||" + Indigenous children preparing for the Olympics

ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பழங்குடியின குழந்தைகள்

ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பழங்குடியின குழந்தைகள்
டெல்லியைச் சேர்ந்த ஓட்டப்பந்தய பயிற்சியாளர் கரண் சிங். இவருக்கு ஒலிம்பிக் தடகள போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவிற்குத் தங்கப் பதக்கம் பெற்றுத்தர வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. ஆனால், தனது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரது கனவு பாதியிலேயே கரைந்து போனது. எனினும், தனது ஆசையைக் கைவிடாத அவர் பத்து பழங்குடியின சிறுவர்-சிறுமிகளைத் தேர்வு செய்து பயிற்சியளித்து வருகிறார்.
தற்போது இவரிடம் பயிற்சி பெற்று மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் ஜொலிக்கத் தொடங்கியுள்ள தடகள வீரர்கள், 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். கரண் சிங் தனது பள்ளிக் காலத்தில் நீளம் தாண்டுதல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது முழங்காலில் கடுமையான காயம் ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால் அவருடைய விளையாட்டுத் திறனில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. அச்சமயத்தில் அவர் மாநில ஜூனியர் கிரிக்கெட் அணியில் அங்கம் வகித்துக்கொண்டிருந்தார். அவரின் அறுவை சிகிச்சைக்குப் பிறகான ஓய்வின் பொழுது விளையாட்டு எதிர்காலம் குறித்து சிந்திக்க அதிக நேரம் கிடைத்தது.

‘‘அப்போதுதான் ஓட்டப் பந்தய பிரிவில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். பின்னர் கடின முயற்சிக்குப் பிறகு ஓட்டப்பந்தயப் பயிற்சியாளராக மாறினேன். இனி என்னால் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வெல்வதற்கு வாய்ப்பு குறைவு என்பதை உணர்ந்து கொண்டபோது, அமெரிக்காவில் சர்வதேச பயிற்சியாளர்களுடன் கிடைத்த ஆறு ஆண்டுகள் அனுபவத்தை இந்தியாவில் பயன்படுத்த நினைத்தேன்’’ என்றவர், அச்சமயத்தில் இந்தியாவில் ஓட்டப்பந்தய வீரர்களுக்கு சர்வதேச அளவில் திறம்படச் செயல்படுவதற்கு முறையான பயிற்சியாளர்கள் இல்லை என கருதினார்.

இதன் காரணமாக 2013-ம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர் அதற்கான பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். ஊர் திரும்பிய உடனே ‘இந்தியன் டிராக்’ என்ற கிளப்பை ஆரம்பித்து வாரணாசியைச் சேர்ந்த ஐந்து பழங்குடியின சிறுவர்-சிறுமிகளைத் தேர்வு செய்து பயிற்சி வழங்கினார். அவர்களுக்கான முழு செலவையும் தாமே ஏற்றுக்கொண்டதால் பயிற்சியைத் தொடர்ந்து வழங்க அவரால் முடியவில்லை. இதனால் பயிற்சி பாதியிலேயே கைவிடப்பட்ட நிலையில், மீண்டும் அதற்கான முயற்சியில் இறங்கினார்.

இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டும் நீலகிரிக்கு அவர் மனைவியுடன் குடியேறினார். அங்கு இந்தியன் டிராக் பவுண்டேஷனை தொடங்கி ஜார்க்கண்டைச் சேர்ந்த மேலும் ஐந்து பழங்குடியின சிறுவர்-சிறுமிகளைப் பயிற்சிக்காகத் தேர்வு செய்தார். தற்போது இவரிடம் மொத்தம் பத்து பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களின் படிப்பு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தனக்குக் கிடைக்கும் நிதியுதவி மூலம் பயிற்சியாளர் கரண் சிங் பார்த்துக் கொள்கிறார்.

தற்போது இவர்கள் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கின்றனர். இருந்தாலும் 2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.