யோகா பயிற்சியை எளிமையாக்கும் செயலி


யோகா பயிற்சியை எளிமையாக்கும் செயலி
x
தினத்தந்தி 16 Sep 2021 3:50 PM GMT (Updated: 16 Sep 2021 3:50 PM GMT)

மத்திய ஆயுஷ் அமைச்சகம் ‘யோகா-பிரேக்' என்னும் செயலியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அரசு, தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பணி சூழலில் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், புதிய உற்சாகத்துடன் பணியில் கூடுதல் கவனம் செலுத்தவும் வழிவகை செய்யும் நோக்கத்தில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப பணியிடங்களில் 5 நிமிட யோகா இடைவேளையை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் செய்வதற்கு ஏற்ற எளிமையான யோகாசனங்கள், பிராணாயாமம், தியானம் போன்ற அம்சங்கள் இந்த செயலியில் உள்ளன. இந்தியாவின் ஆறு முன்னணி யோகா நிறுவனங்களுடன் இணைந்தும், யோகாசன பயிற்சியாளர்கள், நிபுணர்களுடன் கலந்தாலோசித்தும் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் மூலம் 717 நபர்களுக்கு இந்த யோகாசன பயிற்சிகள் 15 நாட்கள் சோதனை முயற்சியாக வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய 6 நகரங்களில் இந்த யோகா பயிற்சி முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அனைத்து அரசு துறைகளும் தங்களுடைய ஊழியர்களுக்கு ஐந்து நிமிட யோகா இடைவெளியை வழங்க வேண்டும் என்று மத்திய பணியாளர் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த செயலியில் இடம்பெற்றிருக்கும் பயிற்சிகள் அனைத்தும் 45 விநாடிகள் முதல் 1.2 நிமிடங்களுக்குள் செய்து முடிக்கும் வகையில் வீடியோ காட்சிகளாக இடம்பெற்றுள்ளன. இந்த ஆசனங்களை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றி இந்தி, ஆங்கில மொழியில் பின்னணி குரல் ஒலிக்கிறது. அத்துடன் ஒவ்வொரு அசைவையும் எப்படி மேற்கொள்ள வேண் டும் என்பதும் ஒவ் வொரு படி நிலைகளாக ஆங்கிலம், இந்தி மொழிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் தங்கள் தினசரி வாழ்க்கையில் 5 நிமிடங்களை யோகா பயிற்சிக்கு ஒதுக்குவதன் மூலம் மன அழுத்தத்தை குறைத்து செயல் திறனை அதிகப்படுத்த முடியும். ஊழியர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் எளிமையாக இந்த ஆசன பயிற்சிகளை மேற்கொள்ளலாம், கூகுள் பிளே ஸ்டோரில் இதனை பதிவேற்றம் செய்து பயன்படுத்தலாம் என்றும் ஆயுஷ் அமைச்சகம் கூறியுள்ளது.

Next Story