சிறப்புக் கட்டுரைகள்

21 வருடங்களுக்கு பிறகு நிறைவேறிய ‘ஆடிட்டர் ஆசை’..! + "||" + 'Auditor's wish' fulfilled after 21 years ..!

21 வருடங்களுக்கு பிறகு நிறைவேறிய ‘ஆடிட்டர் ஆசை’..!

21 வருடங்களுக்கு பிறகு நிறைவேறிய ‘ஆடிட்டர் ஆசை’..!
இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிய பிறகும், தன்னுடைய சிறுவயது கனவை நனவாக்கி இருக்கும் ‘செல்வபூபதி’ என்ற லட்சிய பெண்ணின் சவால் நிறைந்த வாழ்க்கை அனுபவம் இது.
‘‘படிப்பறிவின்றி, விவசாயம் செய்துகொண்டிருந்த பெற்றோருக்கு பிறந்த படிப்பு ஆசை நிறைந்த மூத்த மகள் நான். எங்கள் ஊர், திருப்பூர் மாவட்டத்திற்குள் இருக்கும் நல்லிப்பாளையம். ஊருக்கு அருகில் இருந்த அரசு பள்ளியில் படித்தேன். நிறைய கற்றுக்கொண்டேன். 10-ம் வகுப்பு வரை சுமூகமாக சென்றுக்கொண்டிருந்த வாழ்க்கை, அதற்கு மேல் கரடு முரடாக மாறியது. மேல்நிலை பள்ளிக்கு, 30 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியிருந்ததால், பெற்றோர் 10-ம் வகுப்போடு நிறுத்திக்கொள்ளச் சொன்னார்கள். ஆசிரியர்களின் உதவியோடு தந்தையை சமரசம் செய்து, அறிவியல் பிரிவில்பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கத் தொடங்கினேன். பிளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண்ணும் பெற்றேன்.

இருப்பினும், குடும்ப சூழல் என்னுடைய படிப்பு ஆசைக்கு, பிளஸ்-2 படிப்போடு முற்றுப்புள்ளி வைத்தது. இது நடந்தது 1997-ம் ஆண்டு’’ என சிறுவயது நினைவுகளை புரட்டிப்பார்க்கும் செல்வபூபதி, பள்ளிப் படிப்பிற்கு பிறகு பட்டுப்புழு வளர்ப்பிலும், விவசாய பணியிலும் ஆர்வம் காட்டினார். சில வருடங்களுக்கு பிறகு, 2006-ம் ஆண்டு திருமணம் முடிந்தது. கணவரும் விவசாய பின்னணியை சேர்ந்தவர். அடுத்த சில வருடங்களில், 2 குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார். அந்த சமயத்தில்தான் தம்பி வழியாக இடைநின்ற படிப்பை மீண்டும் தொடர ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்.

‘‘வறுமை காலங்களிலும், கஷ்டப்பட்ட காலங்களிலும், என் தம்பி தர்மராஜை படிக்க வைப்பதில் முழு மூச்சாக இருந்தேன். ஏனெனில் கல்வி இடைநிற்றலின் வலியையும் அது உண்டாக்கிய வேதனையையும் நான் நன்கு அறிந்திருந்தேன். அதனால் தம்பியின் கல்வி விஷயத்தில், யாரையும் சமரசம் செய்ய அனுமதிக்கவில்லை. அவனும், சிறப்பாக படித்து, சென்னையில் ஆடிட்டராக செட்டிலாகினான். அவன் நல்ல நிலையை எட்டவும், நான் திருமணமாகி, பொறுப்பான அம்மாவாக, குடும்ப தலைவியாக மாறவும், நேரம் சரியாக இருந்தது.

விவசாய பணிகளில் போதிய வருமானம் இன்றி தவித்தபோது, அதற்கு மாற்றாக தையல் கலை பழகலாமா என்று யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் என் தம்பி ‘இடைநின்ற கல்வியை மீண்டும் தொடர்ந்தால் என்ன?’ என்ற கேள்வியை என் உள்ளத்தில் ஆழமாக பதித்தான். 2012-ம் ஆண்டு அது. பிளஸ்-2 படிப்பை முடித்த 1997-ம் ஆண்டிற்கும், இந்த எண்ணம் மேலோங்கிய 2012-ம் ஆண்டிற்கும் இடையே 15 வருட இடைவெளி இருந்தது. அதோடு அப்போது என்னுடைய முதல் மகள், 1-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். இரண்டாவது மகன், ஒன்றரை வயது கைக்குழந்தையாக இருந்தான். இவ்வளவு சவால்களையும் தாண்டி சாதிக்க முடியுமா..? என்ற கேள்விக்கு கிடைத்த சிறப்பான பதில்தான், இன்றைய ‘ஆடிட்டர்’ அந்தஸ்து’’ என்று பொறுப்பாக பேசும், செல்வபூபதி, 15 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படிக்கத் தொடங்கி, 21 வருடங்களுக்கு பிறகு ஆடிட்டர் ஆக உயர்ந் திருக்கிறார்.

‘‘என்ஜினீயரிங் படிப்பதுதான், என் சிறுவயது ஆசை. இருப்பினும், வயது வரம்பு பிரச்சினை இல்லாத சி.ஏ. எனப்படும் ‘ஆடிட்டர்’ படிக்க ஆசைப்பட்டேன். அது கொஞ்சம் கடினமாக படிப்பு என்பதால், அதற்கு முன்பாக சி.எஸ். படிக்க விரும்பினேன். அது எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்ட சுயபரிசோதனையும் கூட. ஏனெனில் 15 வருட இடைவெளியில் எழுதவும், படிக்கவும் முற்றிலுமாக மறந்துவிட்டேன். வெகுநாட்களுக்கு பிறகு பேனாவை தொட்டபோது கை விரல்கள் வெடவெடத்தன. புத்தக பக்கங்களை புரட்டினால், கவனம் சிதறின. இப்படிப்பட்ட சூழலில், என்னை நானே பக்குவப்படுத்திக் கொள்ள, பிரத்யேக பயிற்சி படிப்பு தேவைப்பட்டது. அதனால் 2015-ம் ஆண்டு சி.எஸ்.படிப்பில் சேர்ந்து படித்தேன். யாரும் எதிர்பார்க்காத வகையில், அந்த படிப்பின் முதல் தேர்விலேயே 81 சதவீத மதிப்பெண்கள் பெற்றேன். இந்த வெற்றி கொடுத்த ஊக்கத்தினால், சி.எஸ். படிப்போடு சேர்ந்து, கடினமான படிப்பாக கருதப்படும் சி.ஏ. படிப்பையும் ஒருசேர தொடர்ந்தேன்.

கேட்பதற்கு கடினமாக இருந்தாலும், நான் இரு படிப்பையும் சுலபமாகவே கற்றுக்கொண்டேன்’’ என்று உணர்ச்சிவசப்படும் செல்வபூபதி, 2017-ம் ஆண்டு சி.எஸ். படிப்பை முடித்தார். தொடர்ந்து ஆடிட்டர் படிப்பையும் அதற்கு பிறகான 3 வருட கட்டாய பயிற்சியியையும் முடித்துவிட்டு, சமீபத்தில் ‘ஆடிட்டர்’ அந்தஸ்தையும் எட்டிவிட்டார். அதோடு, பொறுப்பான அம்மாவாகவும், ஆடிட்டராகவும் அசத்திக்கொண்டிருக்கிறார்.

‘‘ஒரு மாணவி, ‘ஆடிட்டர்’ ஆக மாறுவதே கடினம் என்ற சூழலில், இரு குழந்தைகளுக்கு தாயான பிறகும் ஆடிட்டராக உயர்ந்ததற்கு, என்னுடைய குடும்பத்தினரே முக்கிய காரணம். என் தம்பி, கணவர், பெற்றோர் மற்றும் குழந்தைகள் ரொம்பவே ஊக்கப்படுத்தினர். வீட்டு வேலைகளையும், குடும்ப பொறுப்புகளை முடிந்தவரை அவர்களுக்குள் பகிர்ந்து கொண்டு, என்னை சுதந்திரமாக படிக்கவிட்டனர். அதேபோல பயிற்சி ஆசிரியர் சி.ஏ.பேச்சி தங்கவேலின் ஊக்கமும் என்னை வலுப்படுத்தியது’’ என்பவர், சுயமாகவே படித்திருக்கிறார். எந்தவிதமான கோச்சிங் சென்டர் உதவிகளையும் இவர் நாடவில்லை. ஏனெனில் தேடி படிக்கும் தன்னார்வமும், தன்னால் படிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கையும், இவரைவழிநடத்தியிருக்கிறது.

‘‘நமக்குள் ஆசையும், கனவும், லட்சியமும் இருந்தால்போதும், அந்த நினைவுகள் நம்மை அதுசார்ந்த பாதையிலேயே வழி நடத்தி செல்லும். அதனால் என்னவாக ஆசைப்படுகிறீர்களோ, அதற்காக போராடுங்கள். அந்த போராட்டம், உங்களுக்கான வெற்றியை தேடி தரும். முன்னேற்ற பாதையில் பயணிக்க செய்யும்’’ என்று முடித்தார்.

எத்தகைய சிக்கல்களை சந்தித்தீர்கள்?

அரசுப்பள்ளியில், தமிழ்வழியில் படித்திருந்ததால், ‘ஆடிட்டர்’ படிப்பு சம்பந்தமான ஆங்கில வார்த்தைகளை புரிந்து கொள்வதில் சிக்கல்கள் இருந்தன. இருப்பினும் தெரியாத ஆங்கில வார்த்தைகளுக்கு ‘டிக்‌ஷனரி’ உதவியுடன் அர்த்தம் தேடிக் கொண்டேன். ஆரம்பத்தில், இப்படி ஒரு பக்கம் படித்து முடிக்கவே, 4 மணிநேரம் தேவைப்பட்டது.

படிப்பினால் தவறவிட்ட சந்தோஷம்?

குழந்தைகளோடு நேரம் செலவிடமுடியாமல் போனது. பயிற்சி மற்றும் பணிக்காக சென்னையில் தங்கியிருக்க வேண்டிய சூழலில், இரு குழந்தைகளையும் என்னுடைய பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டேன். கடந்த 3 வருடங்களாக, அவர்களோடுதான் வளர்கிறார்கள். விடுமுறையில் ஊருக்கு சென்று திரும்புகையில், குழந்தைகளின் கண்ணீர், என்னை உருக்குலைத்துவிடும்.