சவுந்தர்யா வாழ்க்கை வரலாற்றில் ராஷ்மிகா


சவுந்தர்யா வாழ்க்கை வரலாற்றில் ராஷ்மிகா
x
தினத்தந்தி 19 Sep 2021 3:41 PM GMT (Updated: 19 Sep 2021 3:41 PM GMT)

கர்நாடகாவைச் சேர்ந்தவர், நடிகை சவுந்தர்யா. 1992-ம் ஆண்டு கன்னட படத்தின் வாயிலாக சினிமா உலகில் அடியெடுத்து வைத்த இவர், 1993-ம் ஆண்டு ‘பொன்னுமணி’ படத்தில் கார்த்திக் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக நடித்து ரஜினியுடன் ‘அருணாச்சலம்’, ‘படையப்பா’, கமலுடன் ‘காதலா காதலா’, அர்ஜூனுடன் ‘மன்னவரு சின்னவரு’, விக்ரமுடன் ‘கண்டேன் சீதையை’, விஜயகாந்துடன் ‘தவசி’, ‘சொக்கத்தங்கம்’, பார்த்திபனுடன் ‘இவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து உச்ச நடிகையாக இருந்தார்.

இது தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் 2004-ம் ஆண்டு தேர்தலின் போது, பா.ஜ.க.வுக்காக ஓட்டு சேகரித்தார். வாக்கு சேகரிப்புக்காக அவர் சென்றபோது ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். இவரது வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் முயற்சி, கன்னட திரையுலகில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அதே கர்நாடகாவைப் பூர்வீகமாகக் கொண்டவரும், தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவருமான ராஷ்மிகா மந்தனா, சவுந்தர்யாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க ஆவலாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். சமீப காலங்களில் பழம்பெரும் நடிகை சாவித்ரி, ஜெயலலிதா ஆகியோரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்ட நிலையில், ‘யாருடைய வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, மேற்கண்ட பதிலை, ராஷ்மிகா மந்தனா கூறியிருக்கிறார்.

Next Story