நீர்க்குமிழி உறவுகள்‌


நீர்க்குமிழி உறவுகள்‌
x

திருமண உறவுகளை ‘ஆயிரங்காலத்து பயிர்’ என்று சொல்வது கேள்விக்குறியாகிவிட்டது. ‘நீர்க்குமிழி உறவுகள்’ என்று சொல்லும் அளவிற்கு சில திருமண பந்தங்கள் அற்ப ஆயுளில் முடிகின்றன. அதனால்‌ விவாகரத்துகளின் எண்ணிக்கை மின்னல்‌ வேகத்தில்‌ உயர்ந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக இந்த உறவுச்சிக்கல்‌, தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில்‌ அதிகமாக உள்ளது. அதனால்‌ திருமண உறவுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய தென்னிந்தியா, விவாகரத்துக்களின்‌ அதிகரிப்பிற்கு எடுத்துக்காட்டாக மாறிவிடுமோ என்ற அச்சம்‌ எழுந்துள்ளது.

மாலினி பெங்களூருவை‌ சேர்ந்தவள்‌. கல்லூரிப்படிப்பில்‌ தங்கப்பதக்கம்‌, அடுத்து ஆய்வுப்‌ படிப்பிலும்‌ முதலிடம்‌. மும்பையில்‌ உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தில்‌, கைநிறைய அல்ல... பை நிறைய சம்பளம்‌. தன்னோடு வேலை பார்த்த அபிஷேக்கை காதல்‌ திருமணம்‌ செய்து கொண்டாள்‌. அவளுடைய பெற்றோரும்‌ ஆரத்தி எடுத்து வரவேற்றுக்‌ கொண்டார்கள்‌. மணமான ஆறே மாதத்தில்‌ கணவன்‌-மனைவிக்குள்‌ சின்னச்சின்ன பிரச்சினைகள் எழுந்தன‌. அதைப்‌ பற்றி தன்‌ பெற்றோரிடம்‌ அவள்‌ முறையிட, அவர்கள்‌ இதுதான்‌ நல்ல வாய்ப்பு என்று நினைத்து, மகளை உடனே பெங்களூரு‌ ஆய்வகத்திற்கு வேலை மாற்றல்‌ வாங்கிவிட்டு வர செய்தார்கள்‌. இவர்களும்‌ அவளுடன்‌ போய்‌ தங்கினார்கள்‌. மாலினிக்கும்‌- அபிஷேக்குக்கும்‌ இடையே இருந்த சின்னச்‌ சின்ன மோதல்களை பெரிதாக்கி விவாகரத்தில்‌ கொண்டுபோய்‌ விட்டுவிட்டார்கள்‌.

* ஷைனியும்‌, விவேக்கும்‌ ஒரே மருத்துவக்கல்லூரியில்‌ படித்தவர்கள்‌. அவள்‌ சாதாரண குடும்பத்தை சேர்ந்தவள்‌. விவேக்‌ பெரிய தொழிலதிபர்‌ குடும்பத்து செல்லப்பிள்ளை. இருவரும்‌ காதலித்த விஷயம்‌ விவேக்கின்‌ பெற்றோருக்கு தெரிந்தது. அவர்கள்‌ காதலின்‌ எதிரியாக தங்களை காட்டிக்கொள்ளவே இல்லை. தங்களை எளிமையின்‌ எஜமானர்கள்‌ போல்‌ காட்டிக்கொண்டு சிம்பிளாக கல்யாணத்தை முடித்துவைத்தார்கள்.

ஷைனியின்‌ சொந்த ஊரிலே ‘கிளினிக்‌' திறந்து சேவை செய்ய வைத்தார்கள். மூன்றே மாதங்களில் அவர்களுக்குள்‌ உரசல்‌. குழந்தை பெற்றுக்கொள்வது எப்போது? என்பதில்‌ அவர்களுக்குள் மோதல். ஆஹா அதுதான்‌ சரியான நேரம்‌ என்று உள்ளே புகுந்து, புத்திசாலித்தனமாக காய்களை நகர்த்தி ஷைனி-விவேக்‌ இடையே மோதலை உருவாக்கி, விவேக்கை தங்களோடு அழைத்து சென்றுவிட்டார்கள். அடுத்த சில மாதங்களிலே இருவருக்கும் ‌விவாகரத்தாகிவிட்டது.

இந்த இரண்டு இளஞ்ஜோடிகளின் திருமண பந்தம் சிதைவதற்கு காரணம் ‌அவர் களுடைய பெற்றோர்கள்தான்‌. முன்பெல்லாம்‌ மகனோ, மகளோ காதலித்தவரை திருமணம்‌ செய்துவைக்க வற்புறுத்தினால்‌, `எங்கள்‌ பிணத்திற்கு மேல்தான் திருமணம் நடக்கும்’, ‘நீ காதல்‌ திருமணம்‌ செய்து கொண்டால்‌ அதோடு உன்னை தலைமுழுகிவிடுவோம்’ என்றெல்லாம் சொல்லி பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். அதற்கு முன்பு அரிவாளைத் தூக்கிக்கொண்டு வெட்டிப்போட்டு விடுவேன்‌ என்று மிரட்டினார்கள். இப்போது அப்படி உணர்ச்சிகளை வெளிக்காட்டி பிரச்சினைகளை வளர்ப்பதில்லை. கமுக்கமாக கல்யாணத்தை நடத்தி முடித்து வைத்துவிடுகிறார்கள்.

அவர்களிடம் நல்ல பெயர் வாங்கிவிட்டு, ‘அடுத்து எப்போது அவர்களுக்குள் லேசான உரசல் வரும். உள்ளே புகுந்து தங்கள் திறமையைக்காட்டி இருவரையும் பிரித்துவிடலாம்’ என்று கண்கொத்திப் பாம்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிரித்தும் விடுகிறார்கள். மாலினியைப்‌ போன்ற இன்றைய இளம்‌ பெண் களில்‌ சிலரும்‌, விவாகரத்தை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்‌ கொள்வதில்லை. அடுத்த ஓராண்டுக்குள்‌ இன்னொரு நகரத்திற்கு வேலை மாற்றல்‌ வாங்கிச்‌ சென்றால்‌ அங்கு தனது சொல்லை கேட்கும்‌ அளவிற்குரிய இன்னொருவரை திருமணம்‌ செய்து கொள்ளலாம்‌ என்று நினைக்கிறார்கள்‌. பெரிய தொகை அவர்களுக்கு சம்பளமாக இடைப்பதும்‌, அவர்களின்‌ நட்பு வட்டம்‌ பல்வேறு விதத்தில்‌ உயர்ந்த அந்தஸ்தில்‌ இருப்பதும்‌ அவர்களை விவாகரத்தை பெரிய விஷயமாக நினைக்க வைப்பதில்லை. ஒரு சில பெண்களோ விவாகரத்து செய்வதை ஒரு பேஷன்‌ என்று நினைக்கும்‌ நிலையும்‌ உருவாகி இருக்கிறது.

ஷைனி, விவேக்‌ விவாகரத்து விஷயத்தை எடுத்துக்‌ கொண்டால்‌ விவேக்கின்‌ பெற்றோர் தங்கள் அந்தஸ்தை வெளிப்படுத்துவதற்காக பல லட்சங்களை வாரிக்கொடுத்து அவருக்கு மருத்துவக்கல்லூரியில் ேவலை வாங்கிக்கொடுத்தார்கள். அவருடைய திருமணத்தின் மூலம் தங்கள் அந்தஸ்தை மேலும் பெருக்கிக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் தகுதி அடிப்படையில் மருத்துவக்கல்லூரியில் இடம் பெற்ற ஏழைப்பெண் ஷைனி மீது அவருக்கு காதல் ஏற்பட்டது. அவர்கள் விரும்பியபடி திருமணம் செய்துவைத்துவிட்டு, நேரம் வரும் வரை காத்திருந்து மகனை தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்துவிட்டார்கள்.

இன்றைய காலகட்டத்திலும் திருமண உறவுகள்‌ ‘பணத்தால்‌ சிதையும்‌ பந்தங்களாக’ மாறிக்கொண்டிருக்கும் அவலம் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. இதனை முறியடிக்க இளம் தம்பதியருக்குள் புரிதல் உணர்வு இருக்க வேண்டும். அது மட்டுமே திருமண பந்தத்தை வலுவாக்கும். மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கும்.


Next Story