150 பேருக்கு ஒரு டாக்டர்


150 பேருக்கு ஒரு டாக்டர்
x
தினத்தந்தி 21 Sep 2021 2:31 PM GMT (Updated: 21 Sep 2021 2:31 PM GMT)

முதன்மை மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கும் விருப்பத்தில் இருந்து கியூபாவும் அதன் தலைவரான பிடெல் காஸ்ட்ரோவும் எந்த இடத்திலும் தடுமாறவே இல்லை. என்றாலும், மிகவும் கடினமான பொருளாதாரச் சூழலில் இருந்த ஒரு வளரும் நாட்டின் வரம்புக்குள் இந்த மருத்துவ அமைப்பு வடிவமைக்கப்பட்டு, கட்டாயமாக்கப்பட வேண்டி இருந்தது.

இதற்கிடையே கியூபாவின் புரட்சிகரமான மருத்துவத் திட்டங்களை முறியடிக்க அமெரிக்கா பல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. பொருளாதார தடைகள், இதர நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்துதல், ஊடக தாக்கம், கியூப மருத்துவர்களை தன் பக்கம் இழுத்தல், உள்நாட்டு போராட்டங்களை தூண்டுதல் போன்றவை அடங்கும். இந்த தடைகளை பிடெல் காஸ்ட்ரோ வெற்றிகரமாக சமாளித்தார்.

அனைவருக்கும் சுகாதாரச் சேவை என்ற இலக்கை நோக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டதில் கியூபாவைப் போன்று வேறு எந்த நாடும் நிலையாகவும் தொடர்ச்சியாகவும் செயல்படவில்லை. கியூபாவின் குழந்தை இறப்பு விகிதம் பெருமளவு குறைந்தது. மக்களின் ஆயுட்காலம் அதிகரித்தது. இதர உலக நாடுகளைவிட அதிக மருத்துவர்களைக் கியூபா உருவாக்கி உள்ளது. காஸ்ட்ரோவின் ஆட்சிக்கு முன்பு 1958-ல் கியூபாவின் 1,050 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையே இருந்தது. அதே 2009-ம் ஆண்டில் ஒவ்வொரு 150 பேருக்கும் ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் இருந்தனர். 2009-ல் மொத்தம் 74,880 மருத்துவர்கள் உருவாகி இருந்தனர்.

1984-ம் ஆண்டில் பிடெல் காஸ்ட்ரோ ஆற்றிய ஓர் உரையில், 2000-ம் ஆண்டில் கியூபா 75,000 மருத்துவர்களை உருவாக்கும் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் 2009-ல் மேற்கு ஐரோப்பாவில் மக்கள்-மருத்துவர் விகிதம் 330:1 ஆகவும், அமெரிக்காவில் இந்த விகிதம் 417:1 ஆகவும் இருந்ததை நாம் கவனிக்க வேண்டும்.

உலகின் எந்தப் பகுதியில் மருத்துவர்கள் இல்லையோ அங்கெல்லாம் மருத்துவச் சேவை செய்ய வேண்டும் என்பது காஸ்ட்ரோவின் கனவாக இருந்தது. கியூபாவின் அனைத்து மருத்துவ பள்ளிகளிலும் கியூபா மாணவர்களுக்கு இணையாக, வெளிநாட்டு மாணவர்களும் படித்தனர். கியூபாவின் இந்த சுவரற்ற பல்கலைக்கழகங்கள் மூலம் நடமாடும் மருத்துவர்களை உருவாக்கும் திட்டத்தில் இருந்து, சமுதாய மருத்துவத்துக்கு கியூபா அரசு கொடுத்த முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்.

மருத்துவ கல்வியை போலவே, மருந்துகளின் விலையை பிடெல் காஸ்ட்ரோ முதலில் குறைத்தார். பின்பு படிப்படியாக அவற்றை முற்றிலும் இலவசமாக மாற்றினார். மற்றொருபுறம் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் விழிப்புணர்வு கல்வித்திட்டமும் மருத்துவ கல்விச்சேவையும் பரவலாக்கப்பட்டது. உலகில் முதன்முதலாக மக்களின் குடிசைகளில் மருத்துவர்கள் கியூபாவில் வாழ்ந்தனர். கிராம சமுதாயங்களுடனும், குடும்பங்களுடனும் அவர்கள் ஒன்றாக இணைந்தனர். வீடுகளுக்கே சென்று மக்களின் மருத்துவ தேவைகளை நிறைவேற்றினர். 1970-ம் ஆண்டில் கியூபாவில் பல்துறை மருத்துவமனைகள் நிறுவப்பட்டன.

இப்படியாக மருத்துவத்தில் கியூபா நிகழ்த்திய புரட்சியை வேறு எந்த நாடும் செய்யவில்லை என்பது உலக மருத்துவ துறையை கவனித்து வரும் அறிஞர்களின் கருத்தாக இருக்கிறது.


Next Story