தண்ணீர் தட்டுப்பாடுக்கு இதுவும் ஓர் தீர்வு


தண்ணீர் தட்டுப்பாடுக்கு இதுவும் ஓர் தீர்வு
x
தினத்தந்தி 21 Sep 2021 3:51 PM GMT (Updated: 21 Sep 2021 3:51 PM GMT)

ஆடு, மாடு போன்ற வீட்டு விலங்குகளின் சிறுநீர், சாணம் போன்றவை நீண்டகாலமாக விவசாயத்தில் உரமாகப் பயன்பட்டு வருகின்றன. இதைப் போலவே, மனிதக் கழிவான சிறுநீர், ரசாயன உரங்களுக்கு மாற்றாக உரமாக உள்ளது.

ஆடு-மாடுகள் குறைந்துவிட்ட இந்தக் காலத்தில் இயற்கை வேளாண்மையை வலியுறுத்தும்போது, இதையும் சேர்த்துப் பேச வேண்டும். மனித சிறுநீரில் தழைச்சத்து (நைட்ரஜன்) அதிக அளவிலும், மணிச்சத்து (பாஸ்பரஸ்), சாம்பல் சத்து (பொட்டாசியம்) குறிப்பிடத்தக்க அளவிலும் உள்ளன. சரி, இந்தச் சத்துக்களை எப்படிப் பிரித்தெடுத்துப் பயன்படுத்துவது? என ேகட்கலாம்.

சூழலியல் காக்கும் கழிவறை என்பது சிறுநீர், மலம், உடலைச் சுத்தம் செய்த தண்ணீரை தனித்தனியே பிரித்து உரமாக்குகிறது. இன்று பரவலாக உள்ள தண்ணீர் பற்றாக்குறைக்கு, இவ்வகை கழிவறைகள் நிரந்தர தீர்வாக அமையும். மேலும் கடினப் பாறைகள், ஆற்றுப் படுகைகளில் சாதாரண வகை கழிவறைகளை கட்ட முடியாது. சூழலியல் காக்கும் கழிவறைகள் பூமிக்கு மேற்பரப்பில் கட்டப்படுவதாலும், மேற்பரப்பிலேயே பாதுகாப்பான முறையில் கழிவு சேமிக்கப்பட்டு, மக்க வைக்கப்படுவதால் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில்லை.

இந்தியாவில் பரவலாகக் கட்டப் படுகிற செப்டிக் டேங்க், தேன்கூடு வகை கழிவறைகளை பயன்படுத்த அதிகத் தண்ணீர் தேவை. இதில் செப்டிக் டேங்க் கழிவு, நீர்நிலைகளில் கலப்பதால் சுற்றுச்சூழல் சீர்கெடுகிறது. நிலத்தடி நீரும் மாசடைகிறது. இந்தியாவில் சூழலியல் காக்கும் கழிவறை அமைப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. இக்கழிவறையைப் பரவலாக்க 'நிர்மல் பாரத் அபியான்' என்ற திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.

Next Story