சிறப்புக் கட்டுரைகள்

உழைக்கிறார், படிக்கிறார்..! + "||" + Working, studying ..!

உழைக்கிறார், படிக்கிறார்..!

உழைக்கிறார், படிக்கிறார்..!
சொந்தக் கடையையும் நடத்திக் கொண்டு படிப்பிலும் கெட்டிக்காரராக விளங்கும் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த நந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
வீட்டில் ஏழ்மை இருந்தபோதிலும், கடுமையாக உழைத்து உயரத்தை எட்டியுள்ளார் நந்து. இந்த ஆண்டு எம்.ஜி. பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ. படிப்பில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார்.

நந்துவின் தந்தை நாராயணன், தாயார் இந்து ஆகியோர் மகனுக்குப் பக்க பலமாக இருந்து வருகிறார்கள். சிறு வயதிலிருந்தே நந்து படிப்பில் கெட்டிக் காரர். 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஏ-பிளஸ் கிரேடில் தேர்ச்சி பெற்றார்.

அவருக்கு புள்ளியியல், கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் பாடங்கள் பிடிக்கும். தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் கே.இ. கல்லூரியைத் தேர்வு செய்து பி.சி.ஏ. படித்தார். படிக்கும்போது, கல்லூரி கட்டணத்தைத் தானே உழைத்துக் கட்டியுள்ளார். அதோடு குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு தங்கையின் கல்விச் செலவையும் அவர் சமாளித்து வருகிறார்.

“என் தந்தைதான் எனக்கு ரோல் மாடல். புதுப்புது வேலைகளை பார்ப்பதையே என் தந்தை விரும்புவார். ஒரே இடத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் சிறிய அளவில் தங்க நகை வியாபாரம் செய்தார். தற்போது பெட்டிக் கடை வைத்துள்ளார். புதிதாக கற்றுக் கொள், அது உன் வாழ்க்கையில் பயன்படும் என்று என் தந்தை ஊக்குவித்துக் கொண்டே இருப்பார். மேல் படிப்புக்காக நான் பணத்தைச் சேமித்து வைத்துள்ளேன். பி.சி.ஏ. படித்ததும் ஒரு சிறிய வேலை கிடைத்துள்ளது. ஆனால், எம்.சி.ஏ. படித்து நல்ல வேலையில் அமர வேண்டும் என்பதுதான் என் லட்சியம்” என்றார், நந்து.