சிறப்புக் கட்டுரைகள்

தாய்மைக்கு பிறகும் சாதிக்கலாம்..! + "||" + Achieve even after motherhood ..!

தாய்மைக்கு பிறகும் சாதிக்கலாம்..!

தாய்மைக்கு பிறகும் சாதிக்கலாம்..!
துபாயில் செட்டிலாகி, ஒரு குழந்தைக்கு தாயாகிய லிடியா ஸ்டாலின் என்ற சாதனை பெண்ணின், சுவாரசிய கதை இது. ஓட்டப்பந்தயத்தில் பேரார்வம் கொண்ட இவர், தாய்மைக்கு பிறகும் அதில் சாதித்துக் கொண்டிருக்கிறார். அவரது வாழ்க்கையை புரட்டி பார்ப்போம்.
திருமணத்திற்கு பிறகு பெண்களின் வாழ்க்கையும், ஆசையும் முற்றிலுமாக மாறிவிடும் என்ற கருத்தை நான் ஏற்கவில்லை. அதற்கு நானே உதாரணமாக இருக்கிறேன். ஓட்டப்பந்தயத்தில் சாதிக்க ஆசைப்பட்டேன். பயிற்சி எடுத்தேன். ஓடினேன். வென்றேன்.

லிடியா ஸ்டாலின் (வயது 29) தமிழகத்தின் நாகர்கோவிலை சேர்ந்தவர். இப்போது துபாயில் உள்ள சார்ஜா பகுதியில் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் ஸ்டாலின் ரகு  லதா.

இவர் தனது பள்ளிப் படிப்பை அபுதாபியில் உள்ள பள்ளிக்கூடத்தில் நிறைவு செய்திருக்கிறார்.

இளநிலை பொறியியல் படிப்பை (பி.இ. மெக்கானிக்கல்) துபாயில் உள்ள மணிப்பால் பல்கலைக்கழகத்தில் படித்தார்.

இதனையடுத்து கடந்த 2015ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. கணவர் பெயர் விபின் தாஸ் (வயது 35) . இவர் துபாயில் உள்ள அரசுத்துறையில் பொறியாளராக வேலை செய்து வருகிறார்.

திருமணத்தை தொடர்ந்து தனது கணவரின் அனுமதியோடும், தனது தாயாரின் விருப்பத்தின்படியும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். எனப்படும் முதுநிலை பொறியியல் படிப்பை படித்தார். தற்போது ஆய்வுப் படிப்பில் சேர்ந்துள்ளார்.

‘‘சிங்கப்பூர் சென்றபோது அங்குள்ள மக்களை பார்த்ததும் உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

அந்த நாட்டில் ஒவ்வொருவரும் உடல் நலத்தை உறுதியுடன் வைத்துக்கொள்ள நடைப்பயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சியில் ஈடுபட்டது என்னை வெகுவாக கவர்ந்தது. மேலும் மாலை நேரங்களில் குடும்பத்தோடு மொத்தமாக உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

இதனைத் தொடர்ந்தே நானும் நடைப்பயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தேன்.

குறிப்பாக ஓட்டப்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தினேன்’’ என்றவர், நிறைய ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்றிருக்கிறார். சிங்கப்பூரில் நடந்த 10 கிலோ மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டார். அதேசமயம் 15 மாடியில் ஏறி இறங்கும் போட்டிகளில் கலந்து கொண்டு, 54 நிமிடத்தில் இலக்கை கடந்திருக்கிறார்.

‘‘தொடர் பயிற்சி மற்றும் போட்டிகள் காரணமாக எனது உடல் எடை குறைய தொடங்கியதுடன், உடல் நலத்துடன் இருப்பதற்கும் உதவியாக அமைந்தது. துபாய் திரும்பிய பின்னரும் ஓட்டப்பயிற்சியை தொடர்ந்தேன். அமீரகத்தில் அதிக அளவில் நடக்கும் ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டேன். இதற்கு எனது கணவர் விபின் தாஸ் உந்து சக்தியாக திகழ்ந்தார். கடந்த 2017ம் ஆண்டு துபாய் பாலைவனத்தில் நடந்த 10 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றதுடன், முதல் இடம் பிடித்து அசத்தினேன்’’ என்றவர், தொடர் ஆர்வத்தின் காரணமாக மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பயிற்சியாளரிடம் சிறப்பு பயிற்சி பெற்றார். இதனால் சர்வதேச ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொள்ளும் ஆசை பிறக்கவே சிங்கப்பூர், ஓமன், சென்னை, கன்னியாகுமரி, புஜேரா, அபுதாபி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த, உலகத்தர போட்டிகளில் பங்கேற்றதுடன், பல வெற்றிகளையும் தனதாக்கி கொண்டார்.

‘‘ஓமன் நாட்டில் நடந்த 10 கிலோ மீட்டர் போட்டியில் மூன்றாவது இடத்தையும், ஓமன் நாட்டின் சலாலாவில் 2018ம் ஆண்டு நடந்த அரை மாரத்தான் போட்டியில் மூன்றாவது இடத்தையும், சென்னையில் நடந்த மாரத்தான் போட்டியில் 10 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் இடத்தையும், கன்னியாகுமரியில் நடந்த 10 கிலோ மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்தேன்’’ என்று ஓட்டப்பந்தய வெற்றிகளை பட்டியலிடும், லிடியா அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார்.

‘‘தாய்மைக்கு பிறகு பெரும்பாலான பெண்கள் விளையாட்டு வாழ்க்கையிலிருந்து விலகிவிடுவதுண்டு. ஆனால் நான் ஓட்டப்பந்தயத்தில் இருந்து விலகுவதாக இல்லை. என் கணவரும், குடும்பத்தினரும் என்னுடைய விருப்பத்திற்கு இசைந்து கொடுக்கவே, குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே மீண்டும், ஓட்டப்பயிற்சி பெற ஆரம்பித்தேன். என் கணவரும், என்னுடன் ஓட்டப்பந்தய பயிற்சி மேற்கொண்டார்.

கடந்த வாரம் துபாய் மெய்தான் பகுதியில் நடந்த மாரத்தான் ஓட்டப்போட்டியில் பங்கேற்று பெண்கள் பொது பிரிவில் 5 கிலோ மீட்டர் தூரத்தை, இரண்டாவது இடத்தில் நிறைவு செய்து வெற்றிபெற்றேன். எனது கணவர் ஆண்கள் பொது பிரிவில் 5 கிலோ மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டதோடு, மூன்றாம் இடத்தை பிடித்தார்’’ என்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும், லிடியா, ஓட்டப்பந்தயம் மட்டுமின்றி கல்வியையும் நேசிக்கிறார். எதிர்காலத்தில் கல்லூரி பேராசிரியையாக பணிபுரிய ஆசைப்படுவதுடன், உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆவலாய் இருக்கிறார்.

‘‘திருமணத்திற்கு பிறகு பெண்களின் வாழ்க்கையும், ஆசையும் முற்றிலுமாக மாறிவிடும் என்ற கருத்தை நான் ஏற்கவில்லை. அதற்கு நானே உதாரணமாக இருக்கிறேன். ஓட்டப்பந்தயத்தில் சாதிக்க ஆசைப்பட்டேன். பயிற்சி எடுத்தேன். ஓடினேன். வென்றேன். இதற்கிடையில் என் குடும்ப வாழ்க்கையையும் கவனித்துகொண்டேன். தாய்மை அடைந்த பிறகும், என் ஆசையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன். இனியும் சிறப்பாக ஓடுவேன்’’ என்று மற்ற பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் லிடியாவிற்கு, மிகப்பெரிய ஆசை ஒன்று இருக்கிறது.

‘‘ஒலிம்பிக்’ போட்டியில் பங்கேற்பது, என் வாழ்நாள் ஆசை. ஒரு நாள் நிச்சயம் அது நிறைவேறும்’’ என்று விடைபெற்றார்.