போக்ஸ்வேகன் டைகுன் அறிமுகம்


போக்ஸ்வேகன் டைகுன் அறிமுகம்
x
தினத்தந்தி 29 Sep 2021 4:13 PM GMT (Updated: 29 Sep 2021 4:13 PM GMT)

போக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் என்ற பெயரில் புதிய எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது.

போக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் என்ற பெயரில் புதிய எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் இரண்டு வேரியன்ட்கள் டைனமிக் லைன் மற்றும் பெர்பார்மன்ஸ் லைன் என்ற பெயரில் வந்துள்ளன. இது ஒரு லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் என்ஜினைக் கொண்டது. இதே பிரிவில் ஹூண்டாய் கிரெடா மற்றும் கியா செல்டோஸ் மாடலுக்குப் போட்டியாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது. பகலில் ஒளிரும் டி.ஆர்.எல். விளக்குடன் இணைந்த எல்.இ.டி. முகப்பு விளக்கு, இரண்டு பகுதிகளைக் கொண்ட குரோம் கிரில், கீழ்பகுதியில் பம்பர் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களோடு 5 வண்ணங்களில் இது வந்துள்ளது. உள்பகுதியில் 10 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இயங்குதளம் கொண்டது.

மேலும் மை போக்ஸ்வேகன் செயலியும் உள்ளது. இத்துடன் 8 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. தானியங்கி குளிர் சாதன வசதி, யு.எஸ்.பி. டைப் சி போர்ட், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, மேற்கூரை ஆகியவற்றுடன் 17 அங்குல சக்கரங்களைக் கொண்டுள்ளது. பாதுகாப்புக்கு இதில் 6 ஏர் பேக்குகள் உள்ளன. ஏ.பி.எஸ்., இ.பி.டி., இ.எஸ்.சி. உள்ளது. டயர் காற்றழுத்தம் மற்றும் வெடிக்கும் சூழல் இருந்தால் அதுகுறித்த எச்சரிக்கை, பார்க்கிங் கேமரா, குழந்தைகள் பயணிக்க ஐ-சோபிக்ஸ் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டது. இதற்கு நான்கு ஆண்டுகள் மற்றும் ஒரு லட்சம் கி.மீ. தூரம் வரை உத்திரவாதம் அளிப்பதாக இந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த மாடலை வாங்க இதுவரை 12,221 பேர் முன் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஒரு லிட்டர் என்ஜின் உள்ள மாடல் 115 ஹெச்.பி. திறன் மற்றும் 175 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இது நான்கு சிலிண்டர், 6 கியர்களைக் கொண்டது. நிசான் கிக்ஸ், ஸ்கோடா குஷாக், டாடா ஹாரியர், எம்.ஜி. ஹெக்டார் உள்ளிட்ட மாடலும் இதற்குப் போட்டியாக இருக்கும் எனத் தெரிகிறது.

Next Story