இயற்கை கொசு விரட்டி


இயற்கை கொசு விரட்டி
x
தினத்தந்தி 8 Oct 2021 12:10 AM GMT (Updated: 8 Oct 2021 12:10 AM GMT)

தமிழ்நாட்டில் கொசுக்களுக்கு சீசனே கிடையாது. மழைக்காலத்தைப் பற்றி சொல்லவே தேவையில்லை. கொசு கடித்தால் மலேரியா, டெங்கு வந்துவிடுமே என்று கொசுவர்த்தியை வைத்துவிட்டு தூங்குபவர்களில் சிலருக்கு காலையில் மூக்கு ஒழுகி, தொண்டை கட்டிக்கொண்டு, கண் எரிச்சலும்கூட வந்து விடுகிறது.

ஒரு கொசுவர்த்தியை எரிக்கும்போது வெளிவரும் நுண்துகள் 75 முதல் 137 சிகரெட்களை புகைக்கும்போது வருகிற நுண்துகளுக்கு சமம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். காற்றில் கலந்துள்ள எல்லா நுண்துகளுமே சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிப்பவைதான். அதிலும் கொசு விரட்டியில் இருந்துவரும் நுண்துகள் மோசமானது. இது 2.5 மைக்ரோ மீட்டர் விட்டம் மட்டுமே கொண்டது. அதனால் எளிதாக நம் நுரையீரலுக்கு சென்று பல நோய்களை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

சரி, அப்படியானால் தூக்கத்தை தொந்தரவு செய்யும் கொசுக்களை எப்படி விரட்டுவது? இயற்கை வழியிலேயே கொசுவை விரட்டலாம். கொசு விரட்டும் மேட், திரவம், ஸ்பிரே போன்றவையும் உடல்நலத்துக்குக் கேடு விளைவிப்பவைதான். இவற்றுக்குப் பதிலாகக் கொசுவுக்குப் பிடிக்காத நறுமணம் பரப்பும் செடிகளை வீட்டில் வளர்ப்பதன் மூலம் இயற்கை முறையில் கொசுக்களை விரட்டலாம்.

சாமந்திப்பூ, இச்செடியில் இருந்துவரும் தனித்தன்மை கொண்ட வாசனையைப் பூச்சிகளும், உயிரினங்களும் விரும்புவதில்லை. இச்செடிகளைக் கடந்து வீட்டுக்குள் செல்லக் கொசுக்கள் தயங்குகின்றன. இச்செடியை நிழலில் வைத்தால் வளர்ச்சி தாமதமடையும் என்பதால், வெயிலில் வளர்ப்பது நல்லது. அசுவினி உள்ளிட்ட பூச்சிகளையும் அழிக்கும் தன்மை கொண்டது என்பதால், விவசாயத் தோட்டத்திலும் இதை வளர்க்கலாம்.

சிட்ரோநெல்லா புல்: இலைகளைக் கசக்கினால் எலுமிச்சை மணம் தூக்கலாக வீசுவதுதான், இந்தப் புல்லின் தனிச்சிறப்பு. இதில் இருந்து எடுக்கப்படும் சிட்ரோ நெல்லா எண்ணெய் வாசனைப் பொருளாக வும், மூலிகைத் திரவமாகவும் பயன்படுகிறது. இந்த எண்ணெயை மெழுகுவர்த்தி, விளக்குகளில் ஊற்றி எரித்தோ, சருமத்தில் தேய்த்துக்கொண்டோ கொசுக்களில் இருந்து காத்துக்கொள்ளலாம்.

ஹார்ஸ் மின்ட்: ஒரு வகை புதினா செடியான இதன் மணம் சிட்ரோநல்லா புல்லைப் போலவே இருக்கும். வெப்பமான இடங்களிலும், மணற்பாங்கான பகுதியிலும்கூட நன்றாக வளரும். பல்லாண்டு தாவரம் என்பதால், ஒரு முறை நட்டுவிட்டால் நான்கைந்து ஆண்டுகளுக்கு இது கொசுவிரட்டியாக செயல்படும்.

லாவண்டர் என்ற வாசனை செடி கொசுக்களை விரட்டும் அற்புத செடி. இதற்கு, அதிகத் தண்ணீர் தேவையில்லை. கவனிப்பும் அதிகம் தேவையில்லை என்பதால், வீட்டில் எளிதாக வளர்க்கலாம். லாவண்டர் எண்ணெயை தண்ணீரில் கலந்து, ரசாயனம் இல்லாத கொசுவிரட்டி லோஷனைத் தயாரிக்கலாம். ரோஸ்மேரி செடியை வீட்டில் வளர்த்தால், கொசுக்கள் மட்டுமின்றி மற்ற பூச்சிகளும் வீட்டை அண்டாது. இச்செடி அதிகக் குளிரைத் தாங்காது என்பதால் கார்த்திகை, மார்கழி மாதங்களில் வீட்டுக்குள் வைத்து வளர்க்கலாம். இவற்றைத் தவிர நமக்கு நன்கு அறிமுகமான வேப்பமரம், துளசி, கிராம்புச் செடி போன்றவற்றையும் வீட்டில் வளர்த்து கொசுக்களை விரட்டலாம்.


Next Story