இந்தியா-சீனா இடையேயான பேச்சுவார்த்தை இழுபறி; ஒப்பந்தம் ஏற்படவில்லை


இந்தியா-சீனா இடையேயான  பேச்சுவார்த்தை இழுபறி; ஒப்பந்தம் ஏற்படவில்லை
x
தினத்தந்தி 11 Oct 2021 5:16 AM GMT (Updated: 11 Oct 2021 5:16 AM GMT)

இந்தியா-சீனா இடையேயான நடந்த பேச்சுவார்த்தை இழுபறியில் இருப்பதாகவும், எல்லை பிரச்சினை தொடர்பாக ஒப்பந்தம் எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

புதுடெல்லி

கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து, கடந்தாண்டு மே மாதத்திலிருந்து படை குவிக்கப்பட்டு பதற்றம் நீடித்துவந்தது. படைகளைத் திரும்பப்பெற்று அமைதியை நிலைநாட்ட படைத்தளபதிகள் தலைமையிலான ராணுவ ரீதியான பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் கலந்து கொண்டது.

கடந்த பிப்ரவரியில் நடந்த 10ஆம் கட்ட பேச்சுவார்த்தையின் பலனாக கிழக்கு லடாக்கின் பாங்காங் சோ ஏரியின் வடக்கு, தெற்கு கரைகளிலிருந்து இரு நாடுகளின் படைகள் திரும்பப்பெறப்பட்டன. இதையடுத்து, பல மாதங்களாக நீடித்துவந்த பதற்றம் தணிந்தது.

இதையடுத்து, ஏப்ரல் 9ஆம் தேதி லடாக் எல்லையில் மீதமுள்ள படைகளை விலக்கிக்கொள்வது தொடர்பாக இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள்  பங்கேற்ற 11ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், லேயை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டுவரும் 14 வது படைப்பிரிவின் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் பி.ஜி.கே. மேனன் தலைமையிலான குழுவினர் இந்தியா சார்பில் பங்கேற்றனர்.

இச்சந்திப்பில் இந்திய சீன எல்லைப்பகுதியில் நிலவும் பிரச்சினை குறித்தும், கோக்ரா, ஹாட்ஸ்பிரிங்ஸ், தெபாங் சமவெளிப்பகுதி போன்ற இடங்களிலிருந்து படைகளை விலக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, நடைபெற்ற 11 மற்றும் 12 கட்ட பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்றன.

12 வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தையில், இந்தியா மற்றும் சீனா கிழக்கு லடாக் பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கிடையேயான உராய்வு புள்ளிகளில் ஒன்றான ரோந்துப் புள்ளி 17ஏஇலிருந்து படைகளை விலக்க ஒப்புக்கொண்டன.

இந்த நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இந்திய மற்றும் சீனப் படையினர் மோதலில் ஈடுபட்டனர்.இரு தரப்புக்கும் இடையே  கடந்த வாரம்  நேருக்கு நேர் மோதல் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

படைகள்  விலகுவதற்கு முன்பு சில மணிநேரங்கள் மோதல் நீடித்தது மற்றும் இந்திய படை வீரர்கள் அந்த இடத்தில் சீனர்களை விட அதிகமாக இருந்தனர். இருதரப்புக்கும் இடையில் நடந்த இந்த மோதலில் இந்திய பாதுகாப்பு படைக்கு எந்த சேதமும் இல்லை என்றும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான 13-வது சுற்று பேச்சுவார்த்தை  நேற்று  தொடங்கியது. 

லடாக்  எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் சீன பகுதிக்குள் அமைந்துள்ள மோல்டோ பகுதியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் லே-ஐ மையமாக கொண்டு செயல்பட்டு வரும் 14-வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே.மேனன் தலைமையிலான அதிகாரிகள் இந்தியா சார்பில்  கலந்து கொண்டனர்.பேச்சுவார்த்தை, காலை 10:30 மணிக்கு தொடங்கி மாலை 7 மணிக்கு முடிந்தது,

இந்தியா-சீனா இடையேயான நடந்த பேச்சுவார்த்தை இழுபறியில் இருப்பதாகவும், எல்லை பிரச்சினை தொடர்பாக ஒப்பந்தம் எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்திய மற்றும் சீன ராணுவத் தளபதிகளுக்கிடையேயான 13 வது சுற்றுப் பேச்சு  வார்த்தை   பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வையும் அளிக்கவில்லை என்று இந்திய இராணுவம் திங்களன்று தெரிவித்துள்ளது. 

சீன தரப்பு படைகளை விலக்கி கொள்வதற்கு உடன்படவில்லை . இதனால்  வேறு  திட்டங்களையும் வழங்க முடியாது" என்றும் ராணுவம் கூறி உள்ளது

"பேச்சுவார்த்தை போது, ​​மீதமுள்ள பகுதிகளில் உள்ள பிரச்சினைகளை  தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகளை இந்தியத் தரப்பு முன்வைத்தது, ஆனால் சீனத் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை, மேலும் எந்த முன்னோக்கு திட்டங்களையும் சீனா வழங்கவில்லை. இதனால் மீதமுள்ள பகுதிகளின் பிரச்சினைகள் குறித்து  தீர்வு எதுவும் ஏற்படவில்லை" என இந்திய ராணுவம் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

 எந்த தீர்வும் எட்டப்படவில்லை என்றாலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் இந்த பேச்சுவார்த்தையின் நிலைத்தன்மையை உறுதி செய்வது என்றும் இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டு இருப்பதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும், இரு தரப்பினரும் தகவல்தொடர்புகளை பராமரிக்கவும், நிலத்தில் ஸ்திரத்தன்மையை பராமரிக்கவும் ஒப்புக்கொண்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. "சீனத் தரப்பு இருதரப்பு உறவுகளின் ஒட்டுமொத்த முன்னோக்கை கணக்கில் எடுத்துக்கொள்வதோடு, மீதமுள்ள பிரச்சினைகளுக்கு முன்கூட்டியே தீர்வு காண வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு" என்றும் ராணுவம்  கூறியுள்ளது.

Next Story