சிறப்புக் கட்டுரைகள்

சர்வதேச போட்டியில் வென்று அசத்திய தமிழக மாணவர் + "||" + Tamil Nadu student won an international competition

சர்வதேச போட்டியில் வென்று அசத்திய தமிழக மாணவர்

சர்வதேச போட்டியில் வென்று அசத்திய தமிழக மாணவர்
‘ஒலிம்பியாட்’ போட்டிகள் உலகளவில் பிரபலமானவை. பள்ளி மாணவ-மாணவிகளின் புத்திக்கூர்மையை சோதிக்கக்கூடியவை. கணிதம், ஆங்கிலம், அறிவியல், பொது அறிவியல், சதுரங்கம்... என பல தலைப்புகளின் கீழ் போட்டி நடத்தப்படும். இதில் கலந்து கொள்ளவும், பரிசை வெல்லவும், சர்வதேச அளவில் போட்டா-போட்டி நடைபெறும்.
இத்தகைய சிறப்புமிக்க, ‘ஒலிம்பியாட்’ போட்டியின் பல பிரிவுகளில் இந்திய மாணவர்கள் பங்கேற்று, பரிசு வென்றிருக்கிறார்கள். ஆனால் ‘பிசினஸ் ஒலிம்பியாட்’ பட்டமும், வெற்றியும் மட்டும் இந்தியர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. அதையும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார், சர்வத் சத்யராம்.

சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவரான இவர், அக்‌ஷர் அர்பல் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறார். சிறு வயதில் இருந்தே ‘தொழில்’ பாடப்பிரிவில் தனி ஆர்வம் காட்டும் சர்வத், தன்னுடைய புத்திக்கூர்மையால், 2021-ம் ஆண்டிற்கான ‘பிசினஸ் ஒலிம்பியாட்’ விருதினை வென்று சாதனை படைத்திருக்கிறார். அவரிடம் சிறு நேர்காணல்...

ஒலிம்பியாட் போட்டியின் சிறப்பு என்ன?

உலகளவில் நடைபெறும் போட்டி என்பதால், போட்டியாளர் தேர்வு முறையே மிக சுவாரசியமாக இருக்கும். பகுதி வாரியாக பள்ளிகள் மூலம் தேர்வு நடத்தப்பட்டு, இறுதியில் மாவட்டம், மாநிலம், தேசியம் என தலைசிறந்த 5 நபர்களை தேர்ந்தெடுப்பார்கள். அவர்களால் மட்டுமே, ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொள்ள முடியும்.

உங்களோடு எத்தனை பேர் போட்டியிட்டனர்?

உலகளவில் 129 போட்டியாளர்கள், பிசினஸ் ஒலிம்பியாட் பட்டத்தை வெல்ல முனைப்பு காட்டினர். அவர்களில் ஒருவனாக, அவர்களில் தலைசிறந்தவனாக நான் தேர்வாகினேன்.

போட்டி நடைபெற்ற விதம் பற்றி கூறுங்கள்?

ஆகஸ்டு மாதம் போட்டிகள் நடைபெற்றன. ஜான் ஹாக்கின்ஸ் பல்கலைக்கழகம் (அமெரிக்கா), இம்பிரியல் கல்லூரி (லண்டன்), நியூயார்க் பல்கலைக்கழகம் (அமெரிக்கா) இவற்றில் இருந்து மூன்று பேராசிரியர்களும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து 2 பேராசிரியர்களும், மெக்கன்ஸி மேலாண்மை நிறுவனத்தின் பொறுப்பாளர் ஒருவரும்.... என மொத்தம் 6 நடுவர்கள் மாணவர்களின் திறமைகளை சோதித்து பார்த்தனர்.

போட்டி, 3 விதமாக நடந்தது. தொழில் சார்ந்த அடிப்படை விஷயங்களை முதல் சுற்று தேர்வு பாடமாக கொடுத்திருந்தனர். 2-வது சுற்றில், சர்வதேச அளவிலான தொழில் சார்ந்த விஷயங்களையும், தொழில்துறை சந்தித்த பிரச்சினைகளையும் தேர்வாக நடத்தினர்.

3-வது சுற்றுதான், மிகவும் சுவாரசியமானது. தற்போதைய தொழில்துறையினர் சந்தித்து வரும் மிக முக்கிய பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதை, 3-வது சுற்று தேர்வாக நடத்தினார். மொத்தம் 450 மதிப்பெண்களுக்கு 3 சுற்றுகளாக தேர்வு நடத்தி, வெற்றியாளரை அறிவித்தனர்.

போட்டிக்கு எப்படி தயாரானீர்கள்?

பிப்ரவரி மாதத்திலிருந்தே, தயாரானேன். தொழில் சம்பந்தமான ஆன்லைன் படிப்புகளை படித்தேன். தொழில் மேலாண்மை, சர்வதேச தொழில் வளம், தொழில்முனைவோர் போன்ற தலைப்புகளில் வெளியாகி இருந்த புத்தகங்களை நிறைய படித்தேன். அதேபோல சர்வதேச தொழில் நகர்வுகள் மற்றும் தொழில் வளம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் பகுப்பாய்வு முடிவுகளை புரட்டிப் பார்த்தேன். பள்ளி ஆசிரியர்களும், குடும்பத்தினரும் சிறப்பாக வழிகாட்டினார்கள். தன்னம்பிக்கையோடு போட்டியிட்டேன், பரிசு வென்றேன்.

இந்த வெற்றி உங்களை ஊக்கப்படுத்தியிருக்கிறதா?

அதிகமாகவே ஊக்கப்படுத்தி இருக்கிறது. பொதுவாக முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும்போது, நம்முடைய முயற்சிகளும், எதிர்பார்ப்புகளும் அதிகமாகும். நான் கடுமையாக முயற்சி செய்ததற்கு பலனாக, இந்தியாவிலேயே முதன்முறையாக பிசினஸ் பிரிவில் ஒலிம்பியாட் விருதை வென்றிருக்கிறேன். இந்த வெற்றி தந்த ஊக்கத்தினால், இனி நிறைய கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். அதேபோல, சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

உங்களுடைய லட்சியம் என்ன?

தொழில் சார்ந்த படிப்புகளிலும், ஆராய்ச்சிகளிலும் ஈடுபட இருக்கிறேன். என்னுடைய படிப்பும், ஆராய்ச்சிகளும் ஏழை-எளிய மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதில் கவனமாக செயல்படுகிறேன். ஏனெனில் என்னால் செய்ய முடிந்த தொழில் வளர்ச்சி, தொழில் புரட்சி மூலம் சாமானிய மக்களின் வருமானத்தை அதிகரிப்பதே, என்னுடைய லட்சியம். அதேபோல நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பங்கெடுத்து, இந்தியாவின் வளர்ச்சியிலும், இந்தியர்களின் வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்த ஆர்வமாக இருக்கிறேன்.