கிருஷ்ணர் ஓவியத்தில் மிளிரும் கலைநயம்


கிருஷ்ணர் ஓவியத்தில் மிளிரும் கலைநயம்
x
தினத்தந்தி 23 Oct 2021 12:33 AM GMT (Updated: 23 Oct 2021 12:33 AM GMT)

கேரளாவைச் சேர்ந்த ஜஸ்னா சலீம் என்ற இஸ்லாமிய பெண், கிருஷ்ணரின் உருவத்தை ஓவியமாக வரைந்து கோவில்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார். கடந்த 6 ஆண்டுகளில் குழந்தை கிருஷ்ணரின் 500 உருவங்களை அழகாக வரைந்து, வண்ணம் தீட்டி இருக்கிறார்.

28 வயதாகும் ஜஸ்னா சலீம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர். ஓவியம் தீட்டுவதில் ஆர்வம்கொண்ட இவர் சில ஆண்டுகளுக்கு முன்பே கிருஷ்ணர் ஓவியங்களை வரைந்து புகழ்பெற்றவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணர் ஓவியம் வரைந்து, பண்டலம் கிருஷ்ண சுவாமி கோவிலுக்கு வழங்கினார்.

‘‘கிருஷ்ணரின் சிலையை அப்படியே ஓவியமாக வரைந்து தெய்வத்தின் முன்பு காண்பிக்கவேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. இந்த கனவு பண்டலம் கிருஷ்ண சுவாமி கோவிலில் நிறைவேறியிருக்கிறது. என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும், கோவில் அதிகாரிகளுக்கு நன்றியைத் தெரிவிக்கவும் என்னிடம் வார்த்தைகள் இல்லை. வெண்ணெய் பானை அருகில் கிருஷ்ணர் குழந்தையாக அமர்ந்திருக்கும், அந்த படம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. அதை பார்த்துவிட்டுப் பல பக்தர்கள் என்னைத் தொடர்பு கொண்டு, பாராட்டினார்கள். பல ஆண்டுகளாக ஓவியம் வரைந்து வந்தாலும் இப்போதுதான் என் ஆசை முழுமையாக நிறைவேறியிருக்கிறது. ஓவியம் வரைவதற்கு நான் எங்கும் பயிற்சி பெறவில்லை. பள்ளியில் படிக்கும்போது சாதாரண ஓவியங்களை வரைவதற்கே கஷ்டப்படுவேன். ஆசிரியர்கள் ஓவியம் வரையச் சொல்லும்போது, என் கைகள் வியர்த்துவிடும்.

கிருஷ்ணர் உருவத்தை ஓவியமாக வரையத் தொடங்கியது, எதார்த்தமாக நடந்தது. வீடு கட்டும்போது, வீட்டு தேவைக்காக பழைய பேப்பர்களை வாங்கிவந்தோம். அந்த பேப்பர் ஒன்றில் இடம்பெற்றிருந்த கிருஷ்ணர் படம் என்னை வெகுவாக கவர்ந்தது. பேப்பரில் நான் பார்த்த கிருஷ்ணர் படம், ‘என்னை ஓவியமாக வரை’ என்று சொல்வது போன்று இருந்தது. உடனே ஆர்வமாக கிருஷ்ணரை ஓவியமாக வரையத் தொடங்கினேன். நான் வரைந்த முதல் கிருஷ்ணர் ஓவியத்தை, கிருஷ்ணரை வழிபடும் நண்பர்களுக்கு பரிசாகக் கொடுத்தேன்.

அப்போது முதலே வெண்ணெய் பானையுடன் இருக்கும் கிருஷ்ணர் படங்களை தொடர்ச்சியாக வரைய ஆரம்பித்தேன். காலப்போக்கில் என் பெற்றோரும், குடும்பத்தாரும் என்னை ‘கண்ணா’ என்றே அழைக்கத் தொடங்கினர்.

நான் வரைந்த ஓவியத்தை வீட்டில் வைத்த பிறகு தங்கள் குடும்பத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்ததாக அந்த நண்பர்கள் கூறினர். இது எனக்கு உற்சாகத்தை அளித்தது. அதன் பிறகு, கிருஷ்ணரின் படத்தை வரைந்துதரச் சொல்லி பலரும் என்னை அணுகினார்கள். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணர் ஓவியத்தை குருவாயூர் கோவிலுக்கு வழங்கினேன். பிரதமர் நரேந்திர மோடிக்கு கிருஷ்ணர் ஓவியத்தை பரிசளிக்க விரும்புகிறேன்” என்றார்.

ஓவியம் வரைவதற்கு நான் எங்கும் பயிற்சி பெறவில்லை. பள்ளியில் படிக்கும்போது சாதாரண ஓவியங்களை வரைவதற்கே கஷ்டப்படுவேன். ஆசிரியர்கள் ஓவியம் வரைய சொல்லும்போது, என் கைகள் வியர்த்துவிடும்.


Next Story