சிறப்புக் கட்டுரைகள்

மாணவன் உருவாக்கிய சோலார் சைக்கிள் + "||" + Student-developed solar bicycle

மாணவன் உருவாக்கிய சோலார் சைக்கிள்

மாணவன் உருவாக்கிய சோலார் சைக்கிள்
குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த பள்ளி மாணவர் நீல் ஷா சோலார் மூலம் இயங்கும் மின் சைக்கிளை சொந்தமாக வடிவமைத்திருக்கிறார்.
எரிபொருள் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளதால் சிலர் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். என்னதான் பெட்ரோல் பயன்பாட்டை தவிர்த்தாலும் மின் வாகனப் பயன்பாட்டிற்கு குறிப்பிட்ட அளவிற்கு மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், அதையும் குறைத்துக் காட்டி புதுமையான சைக்கிள் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார் குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த பள்ளி மாணவர் நீல் ஷா.

இவர் தனியார் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு பயின்று வருகிறார். சிறு வயதில் இருந்தே அறிவியல் பாடத்தில் ஆர்வம் அதிகம். 7-ம் வகுப்பு படிக்கும்போது கழிவிலிருந்து கண்டுபிடிப்புகளைத் தயாரிக்கும் போட்டியில் கலந்துகொண்டார். அதில் வாட்டர் கேனில் ஹெலிகாப்டர் செய்து பரிசை தட்டிச் சென்றார். பின்னர் படிப்படியாக அறிவியல் சாதனங்களின் செயல்பாடு மீது மாணவர் நீல் ஷாவிற்கு ஆர்வம் அதிகரித்தது.

இந்தநிலையில், சோலார் மூலம் இயங்கும் மின் சைக்கிளை சொந்தமாக வடிவமைத்திருக்கிறார். இதற்காக நீண்ட ஆய்வுகளை செய்த அவர் பழைய மின் சைக்கிள் ஒன்றை விலைக்கு வாங்கி அதில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். மொத்தம் 13 ஆயிரம் ரூபாய் செலவில் சோலார் சக்தியின் மூலம் ஓடும் சைக்கிளை வெற்றிகரமாக கண்டுபிடித்தார்.

வெறும் 30 நாட்களில் இந்த சைக்கிளை வடிவமைத்திருக்கிறார். 8 மணி நேரம் சார்ஜ் ஏற்றினால் 15 கிலோ மீட்டர் தூரம் வரைப் பயணிக்கலாம். இதை அவர் வணிக நோக்கில் கண்டுபிடிக்கவில்லை. ஆர்வம் காரணமாக வடிவமைத்திருப்பதாக கூறுகிறார் பள்ளி மாணவர் நீல் ஷா.