டிஜிட்டல் யுகத்திலும் தேவை நூலகம்


டிஜிட்டல் யுகத்திலும் தேவை நூலகம்
x
தினத்தந்தி 24 Oct 2021 4:32 PM GMT (Updated: 24 Oct 2021 4:32 PM GMT)

கொரோனா பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கும், கட்டுப்பாடுகளும் வீட்டுக்குள் முடங்கும் சூழலை உருவாக்கியதோடு செல்போன், கணினி, லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வைத்துவிட்டன.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோதிலும் பொழுதுபோக்கு நோக்கத்திற்காக மின்னணு சாதனங்களை பயன்படுத்தியவர்கள் அதிலிருந்து மீளமுடியாத நிலை நீடிக்கிறது. அந்த நிலையை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு புத்தக வாசிப்பு பழக்கம் சிறந்த வரப்பிரசாதமாக அமையும். நூலகங்கள் டிஜிட்டல் யுகத்திற்கு மாறிக்கொண்டிருந்தாலும் புத்தகங்களை படிப்பது இனிமையான அனுபவமாக அமையும். புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏன் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

நூலகம்: புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை பின் தொடர்வதற்கு நூலகம்தான் சிறந்த தேர்வாக அமையும். ஏனெனில் வாசிப்பு பழக்கத்திற்கு அமைதியான சூழல் தேவைப்படும். அதனை நூலகங்களால் மட்டுமே தர முடியும். நூலகத்திற்கு செல்வதற்கு நேரம் ஒதுக்கினால் போதும். புத்தகங்களை படிக்கும் ஆர்வம் இயல்பாகவே பின் தொடர்ந்துவிடும்.

புத்தகங்கள்: நூலகத்தில்தான் அனைத்து விதமான புத்தகங்களும் இடம்பெற்றிருக்கும். நமக்கு விருப்பமான புத்தங்களை தேர்ந்தெடுத்து படிக்கலாம். ஏராளமான விஷயங் களையும் தெரிந்து கொள்ளலாம். நமக்கு தேவையான புத்தகங்களையும் தேடிப்பிடித்து படிக்கலாம். அதில் படிக்கும் விஷயங்கள், கதைகள் மனத்திரையில் காட்சிகளாக விரிவடையும். அத்தகைய அனுபவத்தை பெறுவதற்காகவும், மனதை அமைதியாக வைத்திருப்பதற்காகவும் புத்தகத்தின் துணையை நாட வேண்டியது அவசியம்.

கவன சிதறல்: நூலகத்தில்தான் சவுகரியமான சூழலையும் உணர முடியும். கவன சிதறலுக்கு இடம் கொடுக்கும் எந்த விஷயங்களுக்கும் அங்கு இடம் இருக்காது. அதனால் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் விஷயங்களை ஆழ்ந்து படிக்க முடியும்.

எந்த தொந்தரவுமின்றி புத்தகத்தை முழுமையாக படித்து முடித்துவிடவும் முடியும். செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை என்பதால் அந்த மோகத்தில் இருந்து விலகி இருப்பதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக்கொடுக்கும்.

நட்பு வட்டம்: நூலகத்திற்கு செல்லும் பழக்கத்தை பின்தொடர்ந்தால் அங்கு நல்ல நட்பு வட்டத்தையும் உருவாக்க முடியும். அவர்கள் நல்ல தகவல்களையும், நல்ல விஷயங்களையும்தான் பகிர்ந்துகொள்வார்கள். கெட்ட சகவாசத்திற்கு இடமிருக்காது. தாங்கள் படித்த சிறந்த புத்தகங்களை படிப்பதற்கு பரிந்துரையும் செய்வார்கள். இத்தகைய பரிந்துரைகளை ஆன்லைனில் எதிர்பார்க்க முடியாது.

நூலகத்தில் கிடைக்கும் நட்பு மூலம் உண்மையான நண்பர்கள் கிடைப்பார்கள். வேறு எங்கும் அத்தகைய நட்பு வட்டத்தை உருவாக்க முடியாது. அவர்கள் பரிந்துரைக்கும் விஷயங்கள், சொல்லும் தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும். நாம் படித்த தகவல்களை எந்த அளவிற்கு புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ளவும் முடியும். நினைவாற்றல் திறனும் அதிகரிக்கும்.

சேமிப்பு: புத்தக வாசிப்பில் தீவிர ஆர்வம் கொண்டிருப்பவர்களாக இருந்தால் புத்தகங்கள் வாங்குவதற்காகவே மாதந்தோறும் ஒரு தொகையை ஒதுக்க வேண்டியிருக்கும். நூலகம் சென்று வந்தால் இந்த பிரச்சினை இல்லை. விரும்பிய புத்தகங்களை படிக்கலாம். விலை அதிகம் கொண்ட புத்தகங்களை நூலகத்தில் படிப்பதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

நூலகம் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே மினி நூலகத்தை நிறுவலாம். அங்கு அமைதியான சூழலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது முக்கியமானது. நண்பர்கள், உறவினர்களின் தொந்தரவு இல்லாமல் படிக்கும் சூழலை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

Next Story