முக கவசம் அணியாவிட்டால்...


முக கவசம் அணியாவிட்டால்...
x
தினத்தந்தி 24 Oct 2021 4:35 PM GMT (Updated: 24 Oct 2021 4:35 PM GMT)

கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்திருப்பது ஒருபுறமிருக்க தடுப்பூசி போட்டிருக்கும் தைரியத்தில் பலர் முக கவசத்தை முறையாக அணியாத நிலை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் மட்டுமின்றி மழைக்கால நோய்த்தொற்றுகளை பரப்பும் வைரஸ்களிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு முக கவசம் அணிவது அவசியம் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உங்களை பாதுகாக்க, முக கவசம் அணிந்து இரண்டு மீட்டர் தூர இடைவெளியை கடைப்பிடிப்பது போதுமானது அல்ல என்று புதிய ஆய்வு கூறுகிறது.

இதுதொடர்பான ஆய்வை கியூபெக், இல்லினாய்ஸ் மற்றும் டெக்சாஸைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டிருகிறார்கள். இறுதியில் மக்கள் நெருக்கமாக கூடும் இடங்கள், உள் அரங்குகள் போன்ற இடங்களில் முக கவசம் அணிவதன் மூலம் காற்றை மாசுபடுத்தும் துகள்களின் வரம்பை சுமார் 67 சதவீதம் குறைக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

பொதுவாக, ஒரே குடும்பத்தை சாராதவர்களுடன் பொதுவெளியில் நடமாடும்போது இரண்டு மீட்டர் தூரம் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பரவுவதை தடுக்க இந்த தூரம் மட்டும் போதாது என்பதை ஆய்வு முடிவு வெளிப்படுத்துகிறது.

ஆய்வின்படி, மக்கள் முக கவசம் அணியாதபோது ​​70 சதவீதத்திற்கும் அதிகமான வான்வழி துகள்கள் 30 விநாடிகளில் இரண்டு மீட்டர் தூரத்தை கடந்து செல்கின்றன. அதேவேளையில் முக கவசம் அணிந்தால் ஒரு சதவீதத்துக்கும் குறைவான துகள்களே இரண்டு மீட்டர் தூரத்தை கடக்கின்றன.

ஆகையால் முக கவசம் அணிந்திருக்கும் பட்சத்தில் வான்வழி துகள்களில் கலந்திருக்கும் மாசுக்கள் அதன் வழியே வடிகட்டப்பட்டு விடும். அதனை நுகர்வும் அளவும் குறைந்துவிடும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது.

கொரோனா உள்ளிட்டநோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப் படுத்துவதற்கு முக கவசம் அணிவதும், நல்ல காற்றோட்டமான சூழலும் முக்கியமானது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

Next Story