பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்: இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம்..!


பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்: இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம்..!
x
தினத்தந்தி 26 Oct 2021 11:13 AM GMT (Updated: 26 Oct 2021 11:13 AM GMT)

உலகக்கோப்பை போட்டி என்றாலே எப்போதும் இந்தியாவின் கையே ஓங்கி நிற்கும். ஆனால் இந்த முறையோ பாகிஸ்தான் அணி இந்தியாவை எளிதாக வீழ்த்தியது.


கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பரம எதிரிகளாக பார்க்கப்படுகின்றன. இவ்விரு அணிகளும் மோதும் போட்டியானது இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமன்றி உலக கிரிக்கெட் ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும்.

இரண்டு அணிகளும் நேரடியாக சர்வதேச போட்டிகளில் விளையாடுவது கிடையாது. எனவே ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் மட்டும் தற்போது விளையாடி வருகிறது. ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் வைத்து டி20 உலகக் கோப்பைத் தொடர் நடைபெற்றுவருகிறது. கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டிகளில் என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவும். அதுவும் கடந்த 10 ஆண்டுகளாக சர்வதேச தொடர்களைத் தவிர பிற போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தானும் நேரடியாக மோதாததால் உலகக் கோப்பைத் தொடரில் இரு அணிகளும் மோதும் போட்டி மிகப்பெரிய அளவில் கவனம் பெறுகிறது.

இந்திய அணி பாகிஸ்தான் அணியை துவம்சம் செய்யும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படியே தலைகீழாக நிலைமை மாறியது. நம் ரசிகர்கள் எதிர்பார்த்ததோ ஒன்று, ஆனால், நேற்று முன் தினம் நடந்ததோ வேறு.

உலகக்கோப்பை போட்டி என்றாலே எப்போதும் இந்தியாவின் கையே ஓங்கி நிற்கும். ஆனால் இந்த முறையோ பாகிஸ்தான் அணி இந்தியாவை எளிதாக வீழ்த்தியது. இதனால் இந்திய ரசிகர்கள் இந்திய அணி  வீரர்கள் மீது கோபத்தில் உள்ளனர்.

இந்திய அணி தோற்றது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னாள் இந்திய வீரர்கள் பலர் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் பாகிஸ்தான் அணியை அந்நாட்டின் முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலியே ஒத்துக் கொண்டார்.

அவர் மேலும் கூறும் போது இந்த ஆட்டம் மிகச்சிறப்பு வாய்ந்தது என்பது உங்களுக்கு தெரியும். வெளியில் இருந்து யார் வேண்டுமானாலும் ஆலோசனை சொல்லலாம். நான் அவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால் கிரிக்கெட் உபகரணகங்களுடன் களத்தில் இறங்கி பாருங்கள். அப்போது தான் நெருக்கடி என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். 

வெளியில் இருந்து எதனையும் எளிதாக நினைக்கக்கூடாது. குறிப்பாக பாகிஸ்தான் போன்ற அணியால் தனக்குரிய நாளில் உலகின் எந்தவொரு அணியையும் வீழ்த்த முடியும். இந்த ஒரு போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் உலகமே முடிந்து விட்டதாக நினைக்கும் அணி நாங்கள் கிடையாது என  கூறினார்.

தோல்விக்கு காரணம் என ஆராய்ந்தால் அடுக்கி கொண்டே போகலாம் 

இந்த போட்டியில் இந்தியா டாஸ்சில் தோற்றதும் காரணமாக அமைந்தது. ஏனெனில் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் மைதானத்தில் பனியின் தாக்கம் இருப்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்யும். இதையே பாகிஸ்தானும் செய்தது.

மோசமான தொடக்கம் தான் காரணமா என்றால் அதுவும் ஒரு காரணம் தான்,

ஒரு அணி வெற்றிபெற, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது முக்கியம். அதனை இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுக்கத் தவறினர்.

மிடில் ஆர்டர் வீரர்கள் பந்துகளை வீணடித்தனர் என்றால் அதுவும் ஒரு காரணம் தான்

இந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன்களும் சொல்லிக்கொள்ளும் படி விளையாடவில்லை. இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் உள்பட   சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா போன்ற  முன்னணி வீரர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்தவில்லை.

பின்வரிசை வீரர்கள் அதிரடி காட்டவில்லை என்றால் அதுவும் ஒரு காரணம் தான்

பாகிஸ்தானுக்கு குறைந்தது 180 ரன்கள் இலக்காக இந்தியா நிர்ணயம் செய்திருக்க வேண்டும். ஆனால் இந்திய அணியால் 151 ரன்களே எடுக்க முடிந்தது.

பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க தவறினர் 

பேட்ஸ்மேன்கள் ரன்குவிக்க தவறினாலும் பந்துவீச்சாளர்களாவது  தங்களது பணியை சிறப்பாக செய்திருக்க வேண்டும். ஆனால் இந்திய பந்து வீச்சாளர்கள்  ஒரு விக்கெட் கூட எடுக்காதது அணியின் வெற்றிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.

ரன்களை கட்டுப்படுத்தவும் தவறினர்  

பாகிஸ்தான் அணியினர் பேட்டிங்,  பவுலிங், மற்றும் பீல்டிங் என அனைத்திலும் தங்கள் முழு திறமையை வெளிப்படுத்தியது போல் இந்திய அணியினர் தங்கள் திறமையை வெளிப்படுத்தாதும் தோல்விக்கு காரணமாக அமைகிறது.

இவையெல்லாம்  போட்டியின் தோல்விக்கு காரணங்களாக பார்க்கப்படுகின்றன

இதற்கு மேலும் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால், இவை எல்லாவற்றையும் விட ஒரு காரணம் மறைந்து கிடக்கிறது.

அது வேறொன்றுமில்லை, நம்மவர்களிடம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்றால் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற எண்ணத்தை போட்டி களத்துக்கு வெளியே வைத்துவிட்டு வந்தது போல் தெரிந்தது.

வழக்கமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்றால் போட்டியின் கடைசி ஓவர் வரை முடிவு தெரியாமல் இரு அணி ரசிகர்களும் டென்ஷனில் தவித்துக்கொண்டு இருப்பார்கள். மைதானம் முழுவதும் நிரம்பியிருக்கும் ரசிகர் பட்டாளம். மூவர்ணக்கொடிக்கு மத்தியில் ஆங்காங்கே பாகிஸ்தானிய கொடிகள் தென்படும்.

மைதானத்தில் இருப்பவர்களுக்கும் சரி, தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு இருப்பவர்களுக்கும் சரி, கடைசி கட்ட ஓவர்களில் நெஞ்சுக்குள் படபடப்பு கட்டாயம் கூடிக்கொண்டே இருக்கும்  என்றால் அது மிகையாகாது.

”நீங்கள் நமீபியாவிடம் தோற்றால் கூட பரவாயில்லை,  ஆனால், பாகிஸ்தானிடம் தோற்பதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது...” என்பது போல் இந்திய ரசிகர்களின் எண்ண ஓட்டம்  அமைந்திருந்தது.
      
மறுபுறம், பாகிஸ்தான் அணியோ மிகவும் கூலாக விளையாடியது. போட்டியின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை, பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்திய அணியினரை பதற்றத்திலேயே வைத்திருந்தனர் எனலாம். 

மொத்தத்தில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை கத்துக்குட்டி அணி போல கருதி விளையாடியது. போட்டியின் முடிவும் அவர்களுக்கு சாதகமாக அமைந்தது.

இரு அணிகளும் அழுத்தம் நிறைந்த சூழலில் விளையாடிய போது, இந்திய அணி அதனை சரியாக கையாளாததால் ஆட்டத்தில் முடிவு  நமக்கு சாதகமான அமையவில்லை.

Next Story