மோடியின் இடத்துக்கு ராகுல் காந்தியால் ஒருபோதும் போட்டியிட முடியாது- பிரசாந்த் கிஷோர் சொல்கிறார்


மோடியின் இடத்துக்கு ராகுல் காந்தியால் ஒருபோதும் போட்டியிட முடியாது- பிரசாந்த் கிஷோர் சொல்கிறார்
x
தினத்தந்தி 28 Oct 2021 10:16 AM GMT (Updated: 28 Oct 2021 4:39 PM GMT)

இந்தியாவில் பா.ஜ.க. இன்னும் பத்தாண்டுகளுக்கு வலுவான, சக்திமிக்க கட்சியாக இருக்கும் என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த கிஷோர் கூறினார்.

பனாஜி

தேர்தல் வியூக நிபுணர்  பிரசாந்த் கிஷோர்  ஏப்ரல்-மே  மாதங்களில் தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காளத் தேர்தலில் மம்தா பானர்ஜி  ஆகியோரின்  முழுமையான வெற்றிக்குப் பிறகு, காங்கிரசில் ராகுல்காந்தி, பிரியங்கா  காந்தி ஆகியோருடன் பேச்சு நடத்தியதாக ஜூலை மாதம் செய்திகள் வெளிவந்தன.

ஆனால்  அந்த பேச்சுவார்த்தையில் முறிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஏனெனில் கிஷோர் கட்சியை மாற்றியமைக்க சுதந்திரமான  ஒரு பொறுப்பை  விரும்பினார்.

இந்த மாத தொடக்கத்தில், அவர் காங்கிரசில் உள்ள  பிரச்சினைகளை சுட்டிக்காட்டினார். துரதிர்ஷ்டவசமாக காங்கிரசின்  வேரூன்றிய பிரச்சினைகள் மற்றும் கட்டமைப்பு பலவீனத்திற்கு விரைவான தீர்வுகள் இல்லை" என்று அவர் கூறினார்.

கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு  தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கி வருகிறார்.

கோவா அருங்காட்சியகத்தில்  நடைபெற்ற கலந்துரையாடல்  ஒன்றில் கலந்து கொண்டு பிரசாந்த் கிஷோர்  பேசும் போது கூறியதாவது:-

இந்தியாவில்  பா.ஜ.க. இன்னும்  பத்தாண்டுகளுக்கு வலுவான, சக்திமிக்க கட்சியாக இருக்கும், அந்தக் கட்சியுடன் இன்னும் நாம் பல ஆண்டுகளுக்குப் போராட வேண்டியதிருக்கும். பா.ஜ.க. அடுத்துவரும் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், தேசிய அரசியலில் அந்தக் கட்சிதான் மையமாக இருக்கும்.

அதாவது காங்கிரஸ் கட்சி முதல் 40 ஆண்டுகளில் இருந்ததைப் போல் பா.ஜ.க.வும் இருக்கும். பா.ஜ.க. எங்கும் செல்லாது. இந்தியாவில் 30 சதவீத வாக்குகளைப் பெற்றுவிட்டாலே போதும். மக்கள் கோபமடைந்து மோடியைத் தூக்கி எறிவார்கள் என்ற ஒருபோதும் நினைக்காதீர்கள்.

மோடியை வேண்டுமானால் மக்கள் தூக்கி எறிய வாய்ப்புண்டு. ஆனால், பா.ஜ.க. எங்கும் போகாது.  மக்கள் மோடியைத் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்று ராகுல் காந்தி நினைக்கிறார். அங்குதான் அவருக்குப் பிரச்சினையே இருக்கிறது. ஆனால், அது நடக்காது.

பிரதமர் மோடியின் வலிமை என்ன என்பதை அறிந்து, புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக மோடியின் இடத்துக்கு ராகுல் காந்தியால் ஒருபோதும் போட்டியிட முடியாது. அவரைத் தோற்கடிக்கவும் முடியாது.

நான் பார்த்தவரை பிரச்சினை என்னவென்றால், பெரும்பாலானோர் பிரதமர் மோடியின் பலத்தையும், அவரை பிரபலமாக்குவதற்கு என்ன காரணம் என்பதைப் புரிந்துகொள்வதற்கும் போதுமான நேரத்தைச் செலவிடுவதில்லை. இதைப் பற்றி நீங்கள் தெரிந்தால் மட்டுமே, நீங்கள் அவருக்குத் தகுந்த போட்டியை கொடுக்க முடியும்.

காங்கிரஸ் கட்சியில் உள்ள எந்தத் தலைவரிடம் சென்று மோடியின் எதிர்காலம், பா.ஜ.க.வின் எதிர்காலத்தைப் பற்றிக் கேளுங்கள். அவர்கள் என்ன சொல்வார்கள் என்றால், 'எல்லாம் காலம் பார்த்துக் கொள்ளும். மக்கள் பா.ஜ.க. ஆட்சி மீது வெறுப்படைந்து, அரசுக்கு எதிராக அதிருப்தி உருவாகும். அப்போது மக்கள் அவர்களைத் தூக்கி எறிவார்கள்' என்று கூறுவார்கள். ஆனால், எனக்கு இதில் சந்தேகம் இருக்கிறது. மக்கள் பா.ஜ.க.வையும், மோடியையும் தூக்கி எறியமாட்டார்கள்.

உதாரணமாக மோடி அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. மக்கள் மத்தியில் மோடிக்கு எதிராக ஏதேனும் எதிர்ப்பு எழுந்துள்ளதா? இல்லையே.
 
தேர்தலில்  நாட்டில் உள்ள வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் போதும்.  மற்ற இரு பங்கு மக்கள் மற்ற  10 முதல் 15 கட்சிகளுக்குத்தான் பிரித்து வாக்களித்திருப்பார்கள். ஆதலால், மோடிக்கு எதிராகவோ, பா.ஜ.க.வுக்கு எதிராகவோ எந்த ஸ்திரமான கூட்டணியும் அணியும் உருவாகாது. 10 முதல் 15 கட்சிகளாகப் பிரிந்து வாக்கு பிரிவதற்குக் காரணமே காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிதான்.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு சரிந்த போது, 65 சதவீத சிறிய கட்சிகள் துண்டு துண்டாகச் சிதறி சிறிய கட்சிகளாகவும், தனிநபர்களைச் சார்ந்த கட்சிகளாகவும் மாறின''. இவ்வாறு பிரசாந்த் கிஷோர்  கூறினார்.

இது குறித்த பிரசாந்த் கிஷோர் கலந்துரையாடல்  வீடியோவை  பதிவிட்டு உள்ள பா.ஜ.க.வின் அஜய் செஹ்ராவத், "இறுதியில், பா.ஜ.க பல தசாப்தங்களாக இந்திய அரசியலில் வலிமையான சக்தியாகத் தொடரும் என்று பிரசாந்த் கிஷோர் ஒப்புக்கொண்டுள்ளார். அமித் ஷா ஜி அதைத்தான் முன்பே அறிவித்தார்" என்று கூறி உள்ளார்.



Next Story