ஆச்சரியப்பட வைக்கும் ‘இந்திய பெருஞ்சுவர்’!


ஆச்சரியப்பட வைக்கும் ‘இந்திய பெருஞ்சுவர்’!
x
தினத்தந்தி 7 Nov 2021 2:14 PM GMT (Updated: 7 Nov 2021 2:14 PM GMT)

உலகின் மிக நீளமான சுவராக விளங்கும் சீனப்பெருஞ்சுவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தியாவிலும் நீளமான சுவர் கொண்ட கோட்டை ஒன்று இருக்கிறது. அதனை பலரும் அறிந்திராத நிலை உள்ளது. ‘இந்தியாவின் பெருஞ்சுவர்’ என்று அழைக்கப்படும் அந்த சுவர் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்திருக்கிறது.

அங்குள்ள ராஜ்சமந்த் மாவட்டத்தில் மலை பிரதேசத்தினுள் சூழ்ந்திருக்கும் அதன் பெயர், ‘கும்பல்கர்க் கோட்டை’. இந்தக் கோட்டை ராஜ ராணா கும்பா என்ற மன்னனால் 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோட்டைக்கு செல்லும் வழியில் அரணாக எழுந்து நிற்கும் இந்த சுவர் சுமார் 36 கிலோ மீட்டர் தூரம் கோட்டை வரை நீள்கிறது. மலை பகுதியில் அமைந்திருப்பதால் சுற்றிலும் அழகான இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டே செல்லலாம். யுனஸ்கோவின் பட்டியலிலும் இந்த சுவர் இடம் பெற்றிருக்கிறது.

கும்பல்கர்க் கோட்டை ஆச்சரியப்பட வைக்கும் பல கட்டமைப்புகளை கொண்டது. கோட்டைக்குள் நுழைவதற்கு 7 நுழைவாயில்கள் உள்ளன. கோட்டையின் மேற்புறத்தில் இருந்து பார்த்தால் ஆரவல்லி மலைத்தொடர் தெரியும். கோட்டையானது நாலாபுறமும் உயரமான சுவரால் சூழப்பட்டிருக்கிறது. ‘கிரேட் வால் ஆப் சைனா’ என்று அழைக்கப்படும் சீனப்பெருஞ்சுவருக்கு அடுத்துள்ள நீளமான சுவர் இது. கோட்டையின் வெகு தூரத்தில் இருந்தே சுவர் தென்பட தொடங்கிவிடும். இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதற்கு வசதியாக ஆங்காங்கே விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

இரவு நேரத்தில் மின்னொளியில் பிரமாண்டமாக ஜொலிக்கும். அங்கு மாலை வேளையில் ஒளியும்-ஒலியும் நிகழ்ச்சி நடைபெறும். அதில் இந்த கோட்டையின் வரலாறும், கோட்டை அமைவதற்கு காரணமாக இருந்த மன்னனின் வரலாறும் விவரிக்கப்படும்.

இந்த கோட்டையினுள் 300 இந்து கோவில்களும், 60 ஜெயின் கோவில்களும் அமைந்துள்ளன. அவற்றுள் ரானாக்பூர் ஜெயின் கோவில் சலவைக்கற்களால் கட்டப்பட்டது. இதில் 1444 தூண்கள் உள்ளன. எல்லா தூண்களிலும் அழகான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த தூண்களின் சிறப்பு என்னவென்றால், யாராலும் சட்டென்று தூண்களை முழுமையாக எண்ணிவிட முடியாது.

எப்படி எண்ணினாலும் சரியான எண்ணிக்கையை கண்டறிய முடியாது. ஒரு முறை எண்ணிவிட்டு மறு முறை எண்ணும்போது எண்ணிக்கை அதிகமாகும், அல்லது குறையும். இந்த தூண்களை எண்ணி முடிப்பது சவாலான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

இந்த கோட்டை பகுதியில் வன விலங்கு சரணாலயமும் உள்ளது. வனத்தில் உலவும் மிருகங்களை நேரில் காண ஆசைப்படுபவர்கள் இங்கு செல்லலாம். பல்வேறு வன விலங்குகளை கண்டு மகிழலாம். பலவிதமான பறவைகளையும் பார்க்கலாம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆயிரக்கணக்கான மயில்களை காணலாம். மயில்களை கூட்டம் கூட்டமாக பார்க்கும்போதே பரவசம் தொற்றிக்கொள்ளும்.

சரணாலயத்தை சுற்றிப்பார்ப்பதற்கு ஜீப் வசதியும் உள்ளது. இங்கு பல அரிய மரங்கள் உள்ளன. இதனை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மருத்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள். இங்கு ஒரு விசித்திரமான மரம் ஒன்றும் இருக்கிறது. அதற்கு பேய் மரம் என்று பெயர்.

அந்த மரத்தின் மேல் பகுதி முதல் அடிப்பகுதி வரை வெண்மையாக காட்சியளிக்கும். இரவில் மட்டும் மினுமினுப்பாக ஜொலிக்கும். அதாவது மரத்தில் ஏதோ விளக்குகள் பொருத்தப்பட்டது போலவே இரவில் ஒளிரும். இங்கு ஏரியும் இருக்கிறது. அதுவும் இயற்கை அழகுடன் காட்சி தரும்.


Next Story