விளம்பரத் துறையில் ‘நீங்களும்’ சாதிக்கலாம்..!


விளம்பரத் துறையில் ‘நீங்களும்’ சாதிக்கலாம்..!
x
தினத்தந்தி 27 Nov 2021 12:13 PM GMT (Updated: 27 Nov 2021 12:13 PM GMT)

பணம் புரளும் துறைகளில் விளம்பரத் துறையும் ஒன்று. எண்ணிலடங்கா வேலைவாய்ப்புகளும் அதில் உண்டு. படைப்பாற்றல் சிந்தனையும், இலக்கிய நயமும் உங்களிடம் இருந்தால், நீங்களும் விளம்பர துறையில் ஜொலிக்கலாம், சாதிக்கலாம், சம்பாதிக்கலாம் என தெம்பூட்டுகிறார், கவிஞர் தியாரூ.

சென்னையை சேர்ந்த இவர் தமிழ் இலக்கியத்தின் மூலம் விளம்பரத் துறையில் தடம் பதித்த வெற்றிகரமான படைப்பாளி. இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான விளம்பரப் படங்களுக்கான கருத்து, கதையாக்கம், ஜிங்கில்ஸ் உருவாக்க பணிகளை மேற்கொண்டவர். அதோடு, எழுத்து துறையிலும் முத்திரை பதித்தவர். இதுவரையில் 37 நூல்கள், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், 125 சிறுகதைகள், நூற்றுக்கணக்கான வாழ்வியல் படைப்புகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

இதற்காக தமிழக அரசின் ‘பாவேந்தர் பாரதிதாசன் விருது’ உட்பட 27 சிறப்பு விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவர் விளம்பரத் துறையில் தடம்பதிக்க ஆசைப்படும் இளைஞர்களுக்கு இந்த நேர்காணல் மூலமாக நம்பிக்கையூட்டுகிறார்.

* ஒரு விளம்பரம் எப்படி உருவாகிறது?

தயாரிக்கப்பட இருக்கும் விளம்பரம் எதற்கானது, யாருக்கானது, கதை வடிவமா-பாடல் வடிவமா?, முதன்மைப்படுத்தப்பட வேண்டிய விஷயம்... இவையெல்லாம் விவாதிக்கப்பட்ட பின்னர் ‘ஸ்கிரிப்ட்’ தயாராகும். அதற்கு விளம்பரதாரர்களின் ஒப்புதல் கிடைத்த பிறகே, விளம்பரமாக தயாரிக்கப்படும். புரியும்படி சொல்வதும், வியாபார வளர்ச்சிக்கு உதவுவதுமே, விளம்பரக் கலையின் அடிப்படை நோக்கம்.

* விளம்பரத் துறையில் என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன?

‘கிரியேட்டிவ் டிபார்ட்மெண்ட்’, ‘கிளையன்ட் சர்வீசிங்’, ‘ஆர்ட்’, ‘ஸ்டூடியோ’, ‘மீடியா’, ‘மார்க்கெட்டிங்’, ‘போட்டோகிராபி’, ‘ஆடியோ விஷுவல்’, ‘மாடலிங்’... இப்படி பல உட்பிரிவுகள் ஒவ்வொரு விளம்பர நிறுவனத்திலும் உள்ளன.

* யாரெல்லாம் விளம்பரத் துறைக்கு வரலாம்?

யார் வேண்டுமானாலும் வரலாம். எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக்கொண்டுதான் வர வேண்டும் என்பதல்ல; நாளுக்கு நாள் கற்றுக் கொண்டு படிப்படியாக முன்னேறலாம். ஆனால், தேர்ந்தெடுக்கின்ற துறையில் ஆர்வமும் முழுமையான ஈடுபாடும் மிக முக்கியம்.

* விளம்பரத் துறையில் எல்லோராலும் சாதிக்க முடியுமா?

சாதிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அவற்றை பயன்படுத்திக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. எந்த வெற்றியிலும் திறமையும் உழைப்பும் ஒரு பாதி; சிந்தனைத் தெளிவும் நம்பிக்கையும் மறு பாதி. அப்படியெனில், சாதிப்பது நூற்றுக்கு நூறு சாத்தியம்.

* விளம்பரத் துறையில் ஜொலிக்க பிரத்யேக திறமைகள் தேவையா?

நிச்சயமாகவே தேவை. ‘விளம்பரம்’ என்பது ஓர் அற்புதமான கலை. நுணுக்கமானதும்கூட. தங்கத்தை உருக்கி ஆபரணம் செய்வது போன்ற விஷயம் இது. சிந்தனையில் கூர்மை, கருத்துகளில் புதுமை, வேகம், கவனம் ஆகியவை இருந்தால் மட்டுமே இத்துறையில் ஜொலிக்க முடியும். அந்தத் திறமையை வளர்த்துக் கொள்வது அவரவர் பொறுப்பு. பயிற்சியும் முயற்சியும் நல்ல பலனளிக்கும்.

* எவ்வளவு சம்பாதிக்கலாம்?

எவ்வளவும் சம்பாதிக்கலாம். அவ்வளவுக்கு ஆற்றலும் சுறுசுறுப்பும் அவசியம். நம் திறமைதானே நம் சம்பாத்தியத்தை நிர்ணயிக்கிறது.

* விளம்பரப் படைப்பாளியின் வெற் றிக்கு பக்க பலமாக இருப்பவை எவை?

சொல்ல வேண்டிய விஷயத்தை சுவாரசியமாகச் சொல்ல வேண்டும். அதுதான் விளம்பர வித்தை. எனவே, படைப்பாளர்களுக்கு விற்பவர்-வாங்குபவர் பற்றிய புரிதல் அவசியம்.

வார்த்தை சிக்கனம், பளிச்சென்று சொல்லும் திறன், வசீகரிக்கும் சொல்லாட்சி, எளிமையாகவும் புதுமையாகவும் வெளிப்படுத்தும் தனித்துவம், கற்பனைத் திறன், துரித செயலாற்றல் ஆகியவையே ஒரு படைப்பாளியின் தொடர் வெற்றிகளுக்கு வழிவகுக்கும்.

* ஒரு விளம்பரம் மக்களைச் சென்றடைய எது உதவுகிறது? காட்சியா? வசனமா? பிரபலமா? இசையா?

அற்புதமான விருந்தின் சுவைக்கு, பல வகையான உட்பொருட்களும் சமையல் நிபுணத்துவமும் தேவைப்படுகின்றன. அதேபோல், மக்களைக் கவர்ந்து அவர்கள் மனதில் இடம்பிடிக்கக்கூடிய அருமையான விளம்பரப் படைப்பிற்கு எல்லா அம்சங்களும் தேவை. குறிப்பாக கருத்து மற்றும் எழுத்தாக்கமே அடி நாதம்.

* விளம்பரத் துறையின் கடந்த காலம் எப்படி இருந்தது? நிகழ்காலம் எப்படி இருக்கிறது? எதிர்காலம் எப்படி இருக்கும்?

முன்பை விட, தொழில் போட்டிகள் இப்போது மிக அதிகம். எனவே புதிய விளம்பர உத்திகளைக் கையாள்வது அவசியமாகிறது. முன்பை விட இப்போது தொழில்நுட்ப வசதிகள் அதிகளவில் இருப்பதால், மிக மிக நேர்த்தியாகவும், துரிதமாகவும் செயல்படுத்த முடிகிறது. அது மட்டுமின்றி, இன்றைய உலகின் வளர்ச்சி மற்றும் வேகத்திற்கேற்ப படைப்பாக்கச் சிந்தனைகளிலும் புதுமை மிளிர்கிறது. இத்துறையின் எதிர்காலம் இன்னும் சிறப்பாகத்தான் இருக்கும்.

*விளம்பர நிறுவனங்கள் சந்திக்கும் சிக்கல்கள் என்ன?

எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பது விளம்பரத் துறை. கால தாமதத்திற்கு இங்கு இடமே இல்லை. எல்லாவற்றையும் ‘பட் பட்’ என்று முடித்தாக வேண்டும். அதற்கேற்றபடி நேரத்தை நிர்வகிப்பதும் மிகப்பெரிய சவால்தானே.

* விளம்பர நிறுவனங்கள் சந்திக்கும் சிக்கல்கள் என்ன?

எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பது விளம்பரத் துறை. கால தாமதத்திற்கு இங்கு இடமே இல்லை. எல்லாவற்றையும் ‘பட் பட்’ என்று முடித்தாக வேண்டும். அதற்கேற்றபடி நேரத்தை நிர்வகிப்பதும் மிகப்பெரிய சவால்தானே.

Next Story