சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அசத்தும் சகோதரர்கள்


சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அசத்தும் சகோதரர்கள்
x
தினத்தந்தி 27 Nov 2021 12:21 PM GMT (Updated: 27 Nov 2021 12:21 PM GMT)

நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து வருவதை உணர்ந்து, அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் டெல்லியைச் சேர்ந்த சகோதரர்களான 17 வயது விஹான், 14 வயது நவ் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை தனித்தனியாகப் பிரிப்பதற்கான முயற்சியாக ‘ஒன் ஸ்டெப் க்ளீனர்’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். டெல்லியில் செயல்படுத்திய இந்தத் திட்டத்தை தற்போது குருகிராமுக்கும் விரிவுபடுத்தியுள்ளனர். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சிக்காக, இருவருக்கும் இந்த ஆண்டுக்கான மதிப்புமிக்க ‘கிட்ஸ் ரைட்ஸ் இன்டர்நேஷனல் குழந்தைகள் அமைதி விருது’ வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து நவ் பேசுகையில், “எங்கள் தாத்தாவும், அப்பாவும் இயற்கை ஆர்வலர்கள். சிறு வயதிலேயே வனவிலங்கு பூங்கா தொடங்கியதைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். இதுவே சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற எங்கள் நடவடிக்கைக்கு உத்வேகம் அளித்தது.


இயற்கையின் நடுவே இருந்து உலகை ரசிக்க விரும்புகிறோம். டெல்லியில் மாசு பாதிப்பில் மக்கள் படும் கஷ்டத்தைப் பார்த்தோம். என் அண்ணன் விஹான் ஆஸ்துமா நோயாளி. டெல்லி மாசால் அவனது உடல்நிலையும் பாதிக்கப்பட்டது.

அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். அப்போதுதான் இந்த காற்று மாசுவுக்கு எதிராக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எங்கள் செயல்முறை எளிதானது. சுற்றுச்சூழலைப் பற்றி மக்களுக்கு கற்பிக்கிறோம். கழிவுகளை எப்படி பிரிப்பது என்று அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறோம். 2018-ம் ஆண்டு கழிவுகளை அகற்றும் 2 தொழிலாளர்களுடன் இந்த திட்டத்தை தொடங்கினோம்.

சேகரிக்கப்பட்ட அனைத்து கழிவுகளையும் எங்கள் கிடங்குக்கு கொண்டு வந்து தரம் வாரியாகப் பிரித்து மறுசுழற்சி செய்பவர்களுக்கு அனுப்பி வைத்தோம். இதுவரை 1,400 வீடுகள், 14 காலனிகள் மற்றும் 2 நகரங்களில் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளோம். பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு நாங்களே சேவை செய்கிறோம்” என்றார்.

விஹான் கூறுகையில் ‘‘கடந்த 2017-ம் ஆண்டு கிழக்கு டெல்லியில் உள்ள காஜிபூர் குப்பைக் கிடங்கு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். உடனே அந்தக் கிடங்கு தீப்பிடித்தது. அதனால் நச்சு வாயு வெளியானது. இது டெல்லியின் காற்று மாசுபாட்டை அதிகரித்தது. இந்தச் செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தபோது, கழிவுகளுக்கும் காற்று மாசுபாட்டுக்கும் தொடர்பு இருப்பதை உணர்ந்தோம். ஒரு சிறிய ஆராய்ச்சிக்குப் பிறகு, டெல்லியின் 30 சதவிகித காற்று மாசு கழிவுகளால் ஏற்படுகிறது என்று அறிந்தோம்.

அப்போதுதான் நாம் உற்பத்தி செய்யும் கழிவுகளை ஏதாவது செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். அந்தச் சூழலில்தான் ‘ஒன் ஸ்டெப் க்ளீனர்’ என்ற திட்டத்தைத் தொடங்கினோம். எங்களுடைய முயற்சிக்கும், சேவைக்கும் ‘கிட்ஸ் ரைட்ஸ் இன்டர்நேஷனல் குழந்தைகள் அமைதி விருது’ கிடைத்திருக்கிறது. அதுவும் நோபல் பரிசு வென்ற கைலாஷின் கையில் விருது பெற்றதை நாங்கள் உத்வேகமாக கருதுகிறோம். விருதுகளில் எங்களுக்கு கிடைக்கும் ரொக்கப் பரிசை, இதேபோன்ற முயற்சிகளில் ஈடுபடும் மற்ற குழந்தைகளுக்கு வழங்குகிறோம் ” என்றார்.

Next Story